எதிரிகளையும் மன்னிக்கும் மனப்பான்மை!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவில் வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களின் முதன்மையான எதிரிகளாக யூதர்கள் இருந்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொலை செய்யவும் அவர்கள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்பட்டனர். அப்படி இருந்த யூதர்கள் அனைவரையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளாகக் கருதி நடந்து கொள்ளவில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்யும் பொறுப்பை சில இளைஞர்கள் செய்து வந்தனர். அவர்களில் யூத இளைஞர் ஒருவரும் இருந்தார். (ஆதாரம்: புகாரி 1356)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீடுவரை செல்லவும் பணிவிடை செய்யவும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரால் நபிகள் நாயகத்தின் உயிருக்கே உலை வைக்க முடியும்.
அப்படி இருந்தும் எதிரி சமுதாயத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவரைத் தனது அந்தரங்க ஊழியராகச் சேர்த்துக் கொண்டார்கள். பின்னர் அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது தனி விஷயம்.
ஒரு யூதப் பெண் சமைத்த ஆட்டு இறைச்சி நபிகள் நாயகத்திற்கு உண்ணக் கொடுத்தார். ஆனால் அதில் அவர் விஷம் கலந்து வைத்திருந்தார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் எதிரி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணாமல் அந்த இறைச்சியில் ஒரு துண்டைச் சாப்பிட்டார்கள்.
அதில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு கொண்ட பின் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க நபியின் தோழர்கள் வற்புறுத்திய போது அதை அவர்கள் ஏற்கவில்லை. அப் பெண்ணை மன்னித்தார்கள். (ஆதாரம் புகாரி 2617)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களைக் கொலை செய்திட சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் முயன்ற போது அவர்களும் அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கரும் ஊரைவிட்டு இரகசியமாக வெறியேறினார்கள். மதினாவுக்கு செல்லும் வழியைக் காட்டுவதற்காக முஸ்லிம் அல்லாத ஒருவரை நம்பி அவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்கள். (ஆதாரம் புகாரி 2103)
எந்தச் சமுதாயம் கொலை செய்வதற்கு திட்டமிட்டுவிரட்டி விடுகிறதோ அதே சமுதாயத்தைச் சேர்ந்த நம்பகமானவரிடம் வழி காட்டும் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையில் இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஒருவர் முஸ்லிமாக இல்லை என்ற காரணத்துக்காக உலக விஷயங்களில் அவரை வெறுத்து ஒதுக்குவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத வழியாகும்.