பிரார்த்தனையின் படித்தரங்கள்
ஜாஃபர் அலி
இஸ்லாமிய அறிஞர்களும், இமாம்களும் ஷரீஅத்தில் ஆகுமானதும், ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கூடாத, பித்அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.
ஒன்று: அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்தித்தல். மய்யித்திடம் கேட்டுப் பிரார்த்தித்தல். கண் பார்வைக்கு அப்பாற்பட்டோர், இறந்து போன நபிமார்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரையெல்லாம் கூப்பிட்டு ‘யாஸய்யிதீ! எனக்கு உதவி செய்தருள்வீர்! உங்களைக் கொண்டு காவல் தேடுகிறேன். உதவி கோருகிறேன். என் பகைவனுக்கெதிராக உதவி புரிவீராக!’ என்றெல்லாம் பிரார்த்தித்தலாகும்.
அன்றி கீழ்வரும் பிரார்த்தனை இவை எல்லாவற்றையும் விட பயங்கர குற்றத்திற்குரியதாக இருக்கிறது. ‘நீர் என்னை மன்னித்தருள்வீர்! என்னுடைய தௌபாவையும், பாவ மன்னிப்பையும் ஏற்றருள்வீர்!’ என்று பிரார்த்தனை செய்வது.
இவர்களுடைய கப்றுகளில் ஸுஜுது செய்வதும், கப்றுகளை நோக்கி நின்று தொழுவதும், பிரார்த்திப்பதும், கிப்லாவை முன்னோக்குவதை விட மேன்மையாகக் கருதுவதும் மாபெரும் கொடிய ஷிர்க்காகும்.
சில முட்டாள்கள் கப்றுகளை சில குறிப்பிடத்தக்கவர்களின் கிப்லா என்றும், சாதாரண பொதுமக்கள் தான் கஃபாவைப் பார்த்துத் தொழுவார்கள் என்றும் கூறி மக்களை வழி கெடுத்திருக்கிறார்கள்.
மேலும் கப்றுகளை நோக்கி பிரயாணம் செய்தல் ஹஜ் பிரயாணத்தின் இனத்தைச் சார்ந்தது என்றும், பலதடவை ஒரு கப்றுக்குப் பயணம் போனால் ஒரு ஹஜ்ஜுக்கு ஈடாகி விடும் என்று கருதுகிறவர்கள்
மேற்கூறப்பட்டவர்களை விட கொடிய குற்றவாளிகளாவர். இன்னும் சொல்லப்போனால் கப்றை ஒருவிடுத்தம் ஸியாரத் செய்வது பலமுறை ஹஜ் செய்வதை விட மேன்மைக்குரியது என்று கூறி முஷ்ரிக்குகளாக வாழும் முஸ்லிம் பெயர் தாங்கிகளையும் காண முடியும். இதெல்லாம் கொடிய ஷிர்க்காகும். இதில் பலர் அகப்பட்டிருக்கிறார்கள். ஆகாது என்று விலக்கப்பட்ட பிரார்த்தனைகளில் இது முதல் படித்தரமாகும்.
இரண்டாவது: மய்யித், கண்பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும் ஸாலிஹீன்கள், அன்பியாக்கள் இவர்களையெல்லாம் அழைத்து எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று வேண்டுதல். எங்களுடைய தேவைகள் நிறைவேற அல்லாஹ்வை வேண்டுங்கள் என்று கூறி கிறிஸ்தவர்கள் மர்யமை வேண்டுவது போல இவர்களை வேண்டுவது. இது நம் முன்னோர்களான ஸலஃபுகளில் ஒருவர் கூட செய்திராத பித்அத்தான செய்கையாகும். இஸ்லாமிய அறிஞர் ஒருவரும் இதை ஜாயிஸானது என்று அனுமதிக்க மாட்டார்.
கப்றுக்குள் இருப்பவர்களை நோக்கி ஸலாம் கூறுதலும், ஸலாமுக்காக சம்பாஷணை செய்தலும் ஜாயிஸாகும். இதை யாரும் மறுக்க முடியாது. கப்றை ஸியாரத் செய்கிறவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்கண்டவாறு கப்றாளிக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டுமென்று போதித்தார்கள். அன்றி கப்றிலுள்ளவர்கள் நமக்காக (ஸியாரத் செய்தவருக்காக) துஆச் செய்வார்கள் என்றோ, கப்றில் இருப்போரிடம் துஆவை வேண்டி நிற்க வேண்டுமென்றோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தரவில்லை.
‘முஸ்லிம், மூமின்களான கப்றுவாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை வந்தடைகிறோம். எங்களையும், உங்களையும் அல்லாஹ் மன்னித்தருள்வானாக! எங்களுடையவும், உங்களுடையவும் நம் எல்லோரின் பிழைகளைப் பொறுத்தருள அவனைப் பிரார்த்திக்கிறோம். இறைவா! இவர்களுடைய கூலிகளை நீ இல்லாமலாக்கி விடாதே! இவர்களுக்குப் பிறகு நீ எங்களை பித்னாவில் ஆழ்த்தி விடாதே! எங்களையும், இவர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!’ என்று கூறி ஸியாரத்தின் போது பிரார்த்திக்க ஸஹாபாக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
உலகில் தெரிந்த ஏதேனுமொரு மனிதன் கப்றருகே போய்க் கொண்டிருக்கும் போது அந்தக் கப்றை நோக்கி ஸலாம் கூறினால் ஸலாத்துக்குப் பதில் சொல்வதற்காக அல்லாஹ் அந்த கப்றாளியின் உயிரை மீட்டிக் கொடுக்கிறான் எனும் ஹதீஸை அபூ அம்ர் அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘எந்த முஸ்லிம் என்மீது ஸலாம் கூறினாலும் அவருக்கு பதில் ஸலாம் கூறுவதற்காக என்னுடைய உயிர் மீட்டப்படுகிறது’ என்று இன்னுமொரு ஹதீஸில் வருகிறது.
எனவே எவராயிருப்பினும் உயிரோடிருப்போர்தான் மய்யித்துக்கு ஸலாம் கூற வேண்டும். மய்யித்துக்காக துஆச் செய்ய வேண்டும். இதைத்தான் ஷரீஅத்தும் விதிக்கிறது. மாறாக மய்யித்துகள் உயிருள்ளவர்களுக்கு துஆச் செய்வார்கள் என்றோ, மய்யித்துகளிடமிருந்து பிரார்த்தனைகள் வேண்டப்படும் என்பதையோ ஷரீஅத் ஒருபோதும் அனுமதிக்காது.
அப்துல்லாஹ் பின் உமர் ‘அஸ்ஸலாமு அலைக்க யாரஸுலுல்லாஹ்! (அல்லாஹ்வின் ரஸுலே! உங்கள் மீது ஸலாம்), அஸ்ஸலாமு அலைக்க யாஅபா பக்ர் (அபூபக்கரே உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்) அஸ்ஸலாமு அலைக்க யாஅபீ (என் பிதாவே உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு உடனே திரும்பி விடுவார்களாம். (முவத்தா மாலிக்)
அப்துல்லாஹ் இப்னு தீனார் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் நபியின் கப்றருகில் நின்று அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுவதை நான் கண்டிருக்கிறேன். பிறகு அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு இவர்களுக்காக வேண்டிப் பிரார்த்திப்பார்கள்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், மற்றவர்களும் இதைப்போன்று நபியவர்களின் மீது ஸலாம் கூறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆக இவர்கள் அனைவருமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அபூபக்கர், உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரின் மீதும் ஸலாம் கூறிவிட்டுத் திரும்பி விடுவார்கள்.
மேலும் துஆச் செய்வதை நாடினால் கிப்லாவை முன்னோக்கி நின்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள். பிரார்த்தனையின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறையைப் பார்த்துக் கூட முகம் திருப்பி நிற்க மாட்டார்கள். நபியின் அறையைப் பார்த்து துஆச் செய்ய வேண்டுமென்று சில ஸுஃபிகளும், பாமரர்களும், ஒரு சில புகஹாக்களும் மட்டுமே குறிப்பிடுகிறார்களே தவிர பின்பற்றத்தகுந்த ஒரு இமாமின் கூற்றைக் கூட இது விஷயத்தில் பார்க்க முடியாது.
நேரிய கருத்தினைக் கூறும் எந்த ஒரு முஸ்லிமும் இதை ஒத்துக் கொள்ள மாட்டான். மத்ஹபுடைய நான்கு இமாம்கள், மற்ற இமாம்கள் யாருமே இவ்வாறு அபிப்பிராயப்படவில்லை. இமாம்களான அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி , மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி , ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி , அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் பெரும் பெரும் அறிஞர்களெல்லாம் கூறினார்கள். ‘மனிதன் நபியின் மீது ஸலாம் கூறிவிட்டு தனக்காகப் பிரார்த்திக்க வேண்டுமென்று நினைத்தால் கிப்லாவின் பக்கம் முகம் திருப்பி நிற்க வேண்டும்’ இமாம் மாலிக்கும், ஷாஃபியும், அஹ்மத் பின் ஹன்பலும் ‘மனிதன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாம் கூறும் போது நபியின் அறையைப் பார்த்து அவர்களின் முகத்துக்கெதிரே நின்று ஸலாம் சொல்ல வேண்டுமென்று கூறியிருக்கின்றனர்.
இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதை ஒத்துக் கொள்ளவில்லை. துஆவுக்காக கிப்லாவை முன்னோக்கியது போல ஸலாம் சொல்லும் போதும் கிப்லாவைத்தான் முன்னோக்கி நிற்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள். அவ்வாறாயின் இமாம் அபூஹனீபாவின் மத்ஹபில் நபிகளின் அறையை மனிதன் பின் வசமாக ஆக்கிக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்விக்குப் பதிலாக ‘வேண்டுமானால் அறையை இடது பக்கமாக ஆக்கிக் கொண்டு கிப்லாவைப் பார்த்து ஸலாம் கூற வேண்டும்’ அறையைப் பின்புறமிருந்து பிரார்த்திப்பதிலும் குற்றமில்லை என்று கூறப்படும்.
இந்த இடத்தில் நின்று ஸலாம் கூற வேண்டும் என்பதில் மட்டும்தான் இமாம்களுக்கு இடையில் கருத்து வேற்றுமையே தவிர கிப்லாவை நோக்கித்தான் துஆச் செய்ய வேண்டுமென்பதில் எவருக்கும் அபிப்பிராய பேதமில்லை. நபியின் அறையை நோக்கி நின்று துஆச் செய்ய வேண்டுமென்று எவரும் அபிப்பிராயப்பட்டதில்லை.
கலீஃபா அபூ ஜஃபருல் மன்ஸூரிடம் நபியைப் பார்த்து நின்று துஆச் செய்ய வேண்டுமென்று இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியதாக அறிவிக்கப்படும் ரிவாயத் பொய்யானது என்று முன்னரே கூறியிருக்கிறோம். ஏனெனில் அது இமாம் மாலிக்கிடமிருந்து அறியப்பட்ட நேரான அபிப்பிராயத்துக்கு முரண்பட்டிருக்கிறது.
இதை இஸ்மாயீல் இப்னு இஸ்ஹாக்குல் காமி என்பாரும் மற்றவர்களும் கூறியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, பிரார்த்திப்பவர்கள் நபியின் அறையைப் பார்த்து நீண்ட நேரம் நின்று துஆச் செய்வதைப் பற்றி என்ன தீர்ப்பு வழங்குகிறீர்கள் என்று ஒருமுறை இமாம் மாலிக்கிடம் கேட்கப்பட்டபோது அதை அவர்கள் இன்கார் செய்து மறுத்துக் கூறினார்கள் என்று இமாமுடைய தோழர்கள் அறிவிக்கின்றனர்.
அது மட்டுமல்ல இமாமவர்கள் நபியின் அறையைப் பார்த்து துஆச் செய்வது பித்அத் என்று கூறிவிட்டு ஸஹாபாக்கள், தாபியீன்கள் எவரும் இவ்வாறு செய்யவில்லை என்றும் விளக்கினார்கள். பின்னர் முன்னோர்கள் எதனால் நேர்மையாக வாழ்ந்தார்களோ அதே காரணங்களைக் கொண்டல்லாமல் பின்னோர்கள் நேர்மையாக வாழ முடியாது என்றும் விளக்கம் கொடுத்தார்கள். எனவே இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதில் எந்த சந்தேகமுமில்லை.
‘கப்றைப் பார்த்து துஆ கேட்டல்’ என்பது ஸஹாபாக்கள், தாபியீன்கள் இவர்களைப் பற்றி அறிவிக்கப்பட்ட முதவாதிரான-தொடர் ஆதாரமுள்ள ஹதீஸ்களிலிருந்து அது அவர்களின் பழக்கத்தில் உள்ளதல்ல என்பது தெளிவாகிறது. துஆவின் போது அது அனுமதிக்கப் பட்டிருந்தால் ஸஹாபிகள் அதை அறிந்திருப்பார்கள். ஏனெனில் நன்மைகள் செய்வதில் அதிகமான பேராவல் கொண்டவர்களாகத்தானே ஸஹாபிகள் அறியப்பட்டிருந்தனர். கப்றை முன்னோக்கி பிரார்த்திப்பதில் விசேஷமான நன்மைகள் இருந்தால் அதை அவர்கள் விட்டு வைப்பார்களா?
எனவே துஆ செய்பவர் அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். துஆவின்போது நபியின் அறையின்பால் முகம் திருப்புதல் விலக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தொழும்போதும் அறையின்பால் முகம் திருப்பி நிற்கக் கூடாது. ‘கப்றின் மீது உட்காராதீர்கள். அதன் பக்கம் முகம் திருப்பித் தொழாதீர்கள்’ என்று கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைத் தடுத்தார்கள். குறிப்பாக நபிமார்களுடையவும், ஸாலிஹீன்களுடையவும் கப்றை நோக்கி அறவே தொழக் கூடாது.
கப்றைப் பார்த்து தொழக்கூடாதென்பது பற்றி முஸ்லிம்களிடையே அபிப்பிராய பேதமே இல்லை. துஆவின் போது அன்பியாக்களுடையவும், ஸாலிஹீன்களுடையவும் கப்றை கருதுதல் இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத்தாகும். இது அல்லாஹ்வை நாடி தொழுதாலும் சரியே. இந்நிலையில் கப்றையே பார்த்துத் தொழுது கப்றில் இருப்பவரிடமே பிரார்த்திக்கிறவனின் செயல் அறவே கூடாத செயலாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்திருக்கையில் ஒரு விஷயத்தை அவர்களிடம் கேட்பதின் தாத்பரியமே வேறு. ஏனெனில் அவ்வேளையில் ஷிர்க் ஏற்படுவதற்கு இடமில்லையல்லவா!
அதுமட்டுமல்ல நபியாக இருப்பவர் தமது வாழ்நாளில் தம் சமூகத்தார்களின் வேண்டுகோளை நிறைவேற்றிக் கொடுக்கவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் பணிக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் பற்பல நன்மைகளும், பலாபலன்களும் நபிக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் நபிமார்கள் மரணமடைந்த பின்னர் இத்தகைய எந்த பொறுப்புகளுக்கும் அவர்கள் உரியவர்கள் அல்லர்.
இறந்ததற்கப்பால் சட்ட பூர்வமான பொறுப்புகள் அனைத்தும் அவர்களை விட்டும் விலகி விடுகின்றன. அன்றியும் ஒருசில அன்பியாக்கள் மரணமடைந்ததற்கப்பால் இறைவனைத் தொழுகிறார்கள், அவனை திக்ரு செய்கிறார்கள், அவனிடம் துஆ செய்கிறார்கள் என்று சொல்லப்படுவதும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது கப்றிலே தொழுகிறார்கள். பைத்துல் முகத்தஸில் மிஃராஜ் இரவில் மரணமடைந்த அனைத்து நபிமார்களும் நபிகள் பெருமானாரின் பின்னால் நின்று தொழுதிருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதும் (அப்போது) மலக்குகளும், சுவனவாசிகளும் இறைவனுக்கு தஸ்பீஹ் செய்ததாகக் கூறப்படுவதும் இவை அனைத்துமே நபிமார்கள் அதிகாரபூர்வமாக பணிக்கப்பட்டு செய்கின்ற செய்கைகள் ஆகாது.
இறந்ததற்கப்பால் நபிமார்கள் செய்யும் வழிபாடுகள் அனைத்தும் அவர்களின் தாராள மனப்பான்மையோடு தம் இஷ்டப்படி அனுஷ்டானங்களினால் மனத் திருப்தியையும், ஆனந்தத்தையும் அனுபவிப்பதற்காகப் புரியும் அமல்களே தவிர சட்ட பூர்வமாகக் கணிக்கப்பட்டு புரியும் அமல்களே அல்ல. இந்த அமல்களை அவர்கள் விரும்பினால் செய்வார்கள். செய்யாமலுமிருப்பார்கள். இந்த வழிபாடுகளினால் அவர்கள் பேரானந்தம் துய்ப்போராய் மாறுகிறார்கள். வாழ்ந்திருக்கையில் அவர்கள் செய்த அமல்கள் இப்படிப்பட்டவை அல்ல. அதில் நபிமார்களுக்கும் சோதனைகள் உண்டு. அவர்கள் அவற்றைச் செய்யாவிட்டால் வேதனையும் உண்டு.
இதிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்கிறோமென்றால் மனிதன் மய்யித்திடம் எதைக் கேட்டாலும் அணுவளவு கூட மய்யித்திடமிருந்து பிரதிபலனைப் பெற மாட்டான். மய்யித்துகள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென்று அவர்கள் மீது அல்லாஹ் பணித்திருந்தானோ அவற்றை அவர்கள் செய்து இன்பம் காண்பார்கள். அதனால் சுகம் அனுபவித்து வாழ்வார்கள்.
மனிதர்கள் மய்யித்துகளிடம் சென்று கேட்பதும், கேட்காமலிருப்பதும் மய்யித்தைப் பொறுத்தவரையில் சமம்தான். மலக்குகளைப் பாருங்கள். அல்லாஹ் கூறியவற்றைச் செய்கிறார்கள். இதனால் அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிபடுகிறார்களே தவிர சிருஷ்டிகளின் கட்டளைகளுக்கு வழிபட மாட்டார்கள்.
அல்லாஹ் கூறியவற்றையெல்லாம் செய்து கொண்டிருப்பார்கள். அதிலே அவர்களும் இன்பம் காண்பார்கள்.
இறைவன் கூறினான்: “அர்-ரஹ்மான் (மலக்குகளைத்) தன் சந்ததியாக எடுத்துக் கொண்டான் என்று கூறினர். அவனோ மிக்க பரிசுத்தமானவன். இன்னும் மலக்குகள் அவனுடைய கண்ணியமிக்க அடியார்கள். (அவன் சந்நிதியில்) இவர்கள் யாதொரு வார்த்தையையும் மீறிப் பேசமாட்டார்கள். அவன் இட்ட கட்டளைகளையே செய்துக் கொண்டிருப்பார்கள்”. (21:25-26)
இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் நபிகளின் ஹயாத்தில் ஒரு விஷயம் அனுமதிக்கப்பட்டதினால் அவர்கள் இறந்ததற்கப்பாலும் அது அனுமதிக்கப்பட வேண்டுமென்பது அவசியமில்லை. உதாரணத்துக்காக நபியவர்களின் வீட்டை எடுத்துக் கொள்ளலாம். நபியவர்கள் வாழ்ந்திருக்கும்போது அந்த வீட்டிலிருந்து தொழுவது அனுமதிக்கப் பட்டிருந்தது. பள்லிவாசலாக்கப் படுவதற்கும் அது அருகதையுள்ள இடமாக இருந்தது. ஆனால் என்று நபிகளின் புனிதமேனி அதில் அடக்கப்பட்டதோ அதைப் பள்ளியாக மாற்றுவதும், அதில் நின்று தொழுவதும் ஹராமாக்கப்பட்டு விட்டது. தம் நபிமார்களின் கப்றுகளைப் பள்ளிகளாக ஆக்கியதனால் தான் அல்லாஹ் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சபித்திருக்கிறான் என ஹதீஸில் வருகிறது.
நபியவர்கள் வாழ்ந்திருக்கையில் அவர்களை இமாமாக நிறுத்தி மக்கள் பின்னால் நின்று தொழுதார்கள். இது சிறந்த தொழுகையாக நபியின் காலத்தில் கருதப்பட்டு வந்தது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமடைந்ததன் பின் அவர்களின் கப்றின் பின்னால் நின்று நபியை இமாமாக நினைத்துத் தொழப்பட மாட்டாது. அதுமட்டுமின்றி நபியின் காலத்தில் அவர்களிடமிருந்து விதிகள், தீர்ப்புகள், உபதேசங்கள் தேடப்பட்டன. ஆனால் இன்று அவர்களிடமிருந்து இதை எதிர் பார்க்கப்பட மாட்டாது. இதற்கு அனுமதியில்லை. இப்படி எத்தனையோ விஷயங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் இறந்ததன் பின்னால் சாத்தியமாகாமல் ஆகிவிட்டது.
ஸியாரத் எனும் சொல் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட ஸியாரத்திற்கும் அனுமதிக்கப்படாத ஸியாரத்துக்கும் உபயோகிக்கப் படுவதினாலும் நபியவர்களின் கப்றை ஸியாரத் செய்வதில் ரிவாயத் செய்யப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் பொய்யானவையும், பலவீனமான ஹதீஸ்களாகவும் வந்திருப்பதனால் குறிப்பாக இவ்வார்த்தையை பிற்காலத்தவர்கள் பித்அத்தான முறையில் செய்யப்படுகின்ற ஸியாரத்துக்கு பிரயோகித்து வந்ததினாலும் தான் இமாம் மாலிக் போன்ற அறிஞர்கள் நபிகளின் கப்றை ஸியாரத் செய்தேன் என்று நபியின் கப்றுடன் ஸியாரத் என்ற வார்த்தையை இணைத்து கூறுதலை வெறுத்திருப்பதுடன், நபியின் கப்றில் ஸலாம் கூறினேன் என்று சொல்ல வேண்டுமென விரும்பிப் பணித்துள்ளார்கள்.
ஏனெனில் முன்னோர்கள் வாயிலாக நபியை ஸியாரத் பண்னினேன் என்று கூறப்பட வில்லையாம். ஷரீஅத் அனுமதிக்கின்ற ஸியாரத் அல்லாஹ்வை நாடியும், அவனிடம் பிரார்த்திப்பதைக் கருதியும், கப்றில் இருப்ப்வருக்கு ஸலாம் சொல்ல வேண்டுமென்பதைக் கருதியும் செய்யப்படும் ஸியாரத்தாகும். ஜனாஸா தொழுகையும் அப்படித்தான். அதில் மய்யித்துக்குப் பிரார்த்திப்பதையே கருதப்படுகிறது.
பித்அத்தான துஆவின் மூன்றாம் தரம். அதுவே மனிதர்களின் பொருட்டையும், மதிப்பையும், அந்தஸ்தையுமெல்லாம் காரணமாகக் காட்டிப் பிரார்த்திப்பது. இதுவும் ஹராமான பிரார்த்தனையாகும். இதற்கு இஸ்லாத்தில் தக்க சான்றுகள் இல்லை. ஸஹாபாக்கள் யாரும் இத்தகைய பிரார்த்தனையை ஆதரிக்கவில்லை. மாறாக அன்று வாழ்ந்திருந்த அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு வஸீலா தேடினார்கள். மேலும் இவற்றை இமாம்களான அபூஹனீபாவும், அபூ யூஸுபும் விலக்கியிருக்கிறார்கள் என்பதும் முன்னர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து தவஸ்ஸுல் என்ற சொல்லுக்கிருக்கும் கூட்டுக் கருத்துக்களை விளங்கிக் கொண்டோம்.
ஸஹாபாக்கள் நபியைக் கொண்டு வஸீலா தேடினார்கள் என்றால் நபியின் துஆவைக் கொண்டு தேடினார்கள் என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏதாவது காரியங்களை நிறைவு செய்ய முடியாமல் பிரயாசைப்படுகின்ற வேளையில் கப்றிலிருப்பவரைக் கொண்டு உதவித் தேடுங்கள் என்று நபியவர்கள் கூறியதாக பொய்யான ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு சில ஷெய்குமார்கள் சிருஷ்டிகளைக் கொண்டு உதவித்தேடிப் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இது பொய்யானதும், நபியின் மீது இட்டுக்கட்டிப் புனையப்பட்டதுமான ஹதீஸாகும். பிரபலமான ஹதீஸ் தொகுப்புகள் எதிலும் இதைக் காண முடியாது.
“மரணமில்லாத நித்திய ஜீவனாகவுமிருக்கும் அல்லாஹ்வின் மீது நீர் உம் காரியங்களை ஒப்படையும். அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து கொண்டிரும். தன் அடியார்களின் பாவங்களை அவன் நன்கறிந்திருப்பது போதுமானதாக இருக்கிறது” என்று அல்லாஹ் கூறுகிறான். (25:58)
இது தீனுல் இஸ்லாத்தில் எல்லோரும் அறிந்த உண்மையாகும். இதைவிட இலேசான அமலையே (கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்திருக்கிறார்கள் என்றால் அதைச் செய்தவர்களை சபித்தும் இருக்கிறார்கள் என்றால் கொடிய அமலான இதன் நிலைமை எப்படி என்பதைச் சிந்திக்க வேண்டும்? அப்படியானால் கப்றில் சென்று தேவைகளை முறையிடுவதற்கும், சிலை வணக்கம் புரிவதற்குமிடையில் வித்தியாசமே இல்லாமலாகிவிடும்.
source: https://www.islamkalvi.com/?p=118417