“மார்க்க வணக்க வழிபாடுகளில் அளவுக்கதிகமாக அபரிமிதமாக செய்பவன் நாசமாவான்”
அல்லாஹுவால் அருளப்பட்ட இவ்வுலக ஆசாபாசங்களில் பங்கெடுத்து அதே நேரத்தில் அல்லாஹுவை மறந்து விடாமல் அவனையும் நினைத்து வாழ்பவனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழி நடப்பவன் என்பதை கீழ்க்காணும் ஹதீஸ் நமக்கு தெளிவாக்குகிறது.
ஒரு தடவை மூன்று நபர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இல்லம் சென்று நபியவர்களின் தினசரி வணக்கங்கள் எப்படியிருந்தது என வினவினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறைவணக்கங்கள் சாதாரணமாக, நடுநிலையாக இருப்பதை அறிந்த அம்மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன், பின் பாவங்களனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டன, எனவே அவர்களது வணக்க வழிப்பாடுகள் நடுநிலையாக இருக்கலாம். அவர்களுடன் ஒப்பிட்டு நாம் அங்ஙனம் வணங்குவது மிக மிக குறைவாகும் என நினைத்து ஒருவர் ” நான் இனி இரவு முழுவதும் (விழித்திருந்து நின்று) வணங்குவேன் என்றார்.
இரண்டாமவர் இடைவெளியின்றி பகலில் (பசித்திருந்து) நோன்பு வைப்பேன் என்றார்.
மூன்றாமவர் இனி நான் மங்கையின்பம் காணவோ, மணமுடிக்கவோ மாட்டேன் என்றார்.
இவர்கள் இவ்விதம் கூறியதைக் கேட்டுக் கொண்டு வீட்டினுள் நுழைந்த அருமை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள், ”நீங்கள் இன்னின்ன (நற்)செயல்கள் செய்வதாக கூறினீர்கள் அல்லவா? நிச்சயமாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன். அவனுக்குரிய கடமைகளைச் செய்கிறேன். நான் நோன்பு வைக்கிறேன். வைக்காமலுமிருக்கிறேன். இரவில் நின்று வணங்குகிறேன், உறங்கவும் செய்கிறேன். நான் மணமுடித்து இருக்கிறேன். இது எனது வழி. எவனொருவன் இவ்வழி நடக்கவில்லையோ அவன் என்னைச் சார்ந்தவனில்லை” என்றார்கள். (அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
“மார்க்க வணக்க வழிபாடுகளில் அளவுக்கதிகமாக அபரிமிதமாக செய்பவன் நாசமாவான்” என்று மூன்று தடவைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் “ஹலக்கல் முத்தநத்திவூன்” (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம்)
மேற்கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைகளிலிருந்து “தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து துறவற வாழ்வு வாழ்வது தடுக்கப்பட்டுள்ளதை அறியலாம்.
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் நுழைந்தபோது இரு தூண்களுக்குமிடையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
இது என்ன கயிறு? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ அவரது அருமைத் தோழர்கள், இது (தங்களது அன்பு மனைவி) ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா கட்டி வைத்துள்ளார்கள். அவர்கள் தொழும் போது அசதி ஏற்பட்டால்(சாய்ந்து) ஓய்வெடுப்பதற்காக கட்டியுள்ளனர் என்றார்கள்.
இதனைச் செவியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அக்கயிறை அறுத்தெறியுங்கள்; உங்களால் முடிந்தவரை தொழுகுங்கள், அசதி ஏற்பட்டால் (சென்று உறங்கி) ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
இறை வணக்கங்களின் பெயரால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உம்மத்தினர் தமது உடலை வருத்திக் கொள்வதையும் வரவேற்கவில்லை என்பதை அறியலாம்.
இவ்விதம் ஒவ்வொருவரும் உடல், உள்ள செளகர்யத்துடன், உலகியல் இன்பங்களை அனுபவித்துக் கொண்டு, நன்றாக உண்டு, உறங்கி வாழ்வதுடன் இறைவணக்கம் புரிவதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித் தந்துள்ளனர். அதுவே அல்லாஹ் நமக்களித்த உலக செல்வங்களுக்கு நாம்தரும் இறை நன்றியுமாகும்.
அல்லாஹ் நம்மை நன்றியுள்ள அடியார்களாக இருக்க அருள்புரிவானாக. ஆமீன்.