திருக்குர்ஆன்
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
திருக்குர்ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன்
மணத்தை நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து
தன் மனத்தைப் பகர்ந்தது.
கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !
கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்
நிறம் கறுமையல்ல !
திட்பமும் நுட்பமும் கொண்ட இதன்
தீர்ப்புகள்-வைகறை வாசகங்கள்;
மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !
இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்
தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்
படாதவை !
இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில்
படித்தவர்கள் !
இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !
உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே
இதற்குள்தான் உள்ளது !
இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !
இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;
அலைக்கும் அழியா நிலைகாட்டும் !
துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !
இது காட்டிய மனிதச் சங்கிலியில்
கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;
கவுரவம் பெறலாம்.
இதன் இருக்கையோ உச்சரிக்க
முடியாத உயரத்தில் !
இதன் இறக்கையோ உவமிக்க
முடியாத அதிசயத்தில் !
தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.
அறிவியலா? இது அள்ளிக் கொடுக்கும்.
இல் இயலா? இது எடுத்துக் கொடுக்கும்.
அரசியலா? இது அடுத்துக் கொடுக்கும்.
பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்
கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது
இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு
உடையை உலகம் அணிந்திருக்காது .
இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்
பெற்றது கண்ணியம் ! பிறந்தகம் கண்டது
புண்ணியம் !
இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே
பேசுவதற்கு வரவில்லை.
செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்
பங்குண்டு; கேட்க வெட்கப்படுபவர்களுக்கும்
பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்
முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்
இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.
குர்ஆன்
குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !
நன்றி : சமரசம் 16-28 பிப்ரவரி 2009