மதரஸாக்கள் தீனை பாதுகாக்கும் கோட்டைகள்!
தமிழகத்தில் மத்ரஸாக்களின் நிலை!
மதரஸாக்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
தீன் மதரஸாக்களின் வீழ்ச்சியை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மதரஸாக்கள் மூடுவிழாக்கள் குறித்தும், மாணவர்களின் எண்ணிக்கை குறைவு குறித்தும் ஆண்டுக்கு ஒரு தடவை ஆய்வு செய்துவிட்டால் மட்டும் அதற்கு தீர்வு கண்டுவிடமுடியாது.
ஒருபுறத்தில் சப்தமில்லாமல் சரிந்துவரும் மதரஸாக்களின் வீழ்ச்சி, மறுபுறம் இஸ்லாமிய எதிரிகளின் பார்வை மதரஸாவை நோக்கி திரும்பியிருப்பதும் ஒருவகையான அச்சத்தை உண்டாக்குகிறது,
ஏற்கனவே சிதைந்து போயிருக்கும் மதரஸாக்களையும், அதன் பாடத்திட்டங்களையும் மறுபரிசிலனை செய்யச்சொல்லும் கூக்குரல் ஆங்காங்கே ஒளித்துக் கொண்டுதானிருக்கிறது.
மதரஸாக்கள் பழமைவாதத்தின் அடையாளச்சின்னமாகவும், அங்கு ஓதும் மாணவர்களை பழமைவாதிகளாகவும் பிற்போக்கு சிந்தனையுடையவர்களாகவும் கருதும் மனோநிலை மாற்றார்களிடம் அல்ல, முஸ்லிம்களிடம் ஏற்பட்டிருப்பது சாபக்கேடானது.
மத்ரஸாக்கள் பழமையல்ல, பலமானது
மதரஸாக்கள் தீனை பாதுகாக்கும் கோட்டைகள். அது சிதைக்கபடுமானால் அதன் பாதிப்புக்கள் மிக மோசமாக இருக்கும்.
ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, பல்கலைகழகம் உருவாக்குகிற ஒவ்வொரு மாணவர் மூலம் ஒரு குடும்பம் தத்தெடுக்கப்படுகிறது,ஆனால் மதரஸாக்கள் உருவாக்கி வெளியனுப்புகின்ற ஒவ்வொரு மாணவரும் ஒரு ஊரை தத்தெடுக்கிறார்கள்.
ஒரு கல்லூரி மாணவர் பேசினால் நான்கு சுவருக்குள் அடங்கும்.ஒரு ஆலிம் பேசினால் ஊரே கேட்கும். இதுவே ஆலிம்களின் மீடியா பலம். அந்த பலத்தை முழுமூச்சில் இந்த தீனுக்கு பயன்படுத்துவார்களே தவிர தங்களின் சுய பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.
ஒவ்வொரு ஆண்டு ஷஃபான் மாதத்தில் குறைந்தது ஆயிரம் மாணவர்களை மதரஸாக்கள் வெளியாக்குகிறது என்று வைத்துக்கொண்டால் ஆயிரம் ஊர்களின் தீன் பசுமையடையப்போகிறது என்று பொருள்.
வரலாற்றில் இஸ்லாமிய எதிரிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்த போதெல்லாம் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளானது மதரஸாக்கள் தான். காரணம் எதிரிகளின் இலக்கு மதரஸாக்களே.
தமிழகத்தில் மத்ரஸாக்களின் நிலை
தமிழகத்தில் பாரம்பரியமான மத்ரஸாக்களில் மாணவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டுவது குதிரைக்கொம்பாகிப் போனது. பட்டம் பெற்று வெளியே செல்லும் மாணவர்களின் இடத்தை நிரப்புவதற்கு அவர்கள் படும்பாடு அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இஸ்லாமிய மாத இதழ்களில் பெரிய மத்ரஸாக்களும் விளம்பரத்திற்கு வந்துவிட்டதே அதற்கு சாட்சியாகும்.
இன்னும் சில மதரஸாக்களில் மக்தப் வகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு மாணவர்களின் பலத்தை (strength) காட்டுகிறார்கள். உணவு,உறைவிடம் என்பதை தாண்டி சோப்பு சீப்பு கண்ணாடியிலிருந்து காலில் அணியும் செருப்பு வரை செலவுச்செய்ய தயாராக இருந்தும் மாணவர்கள் திரும்பிகூட பார்ப்பதில்லை.
பாஜில் வகுப்புகளைக்கொண்டாவது மதரஸாக்களில் மாணவர்களை அதிகரிக்கலாம் என்ற பேராசையுடன் பாஜில் வகுப்புக்களை ஆரம்பித்த மதரஸாக்களும் உண்டு. சில பாரம்பரியமான பெரிய மத்ரஸாக்களை ஃபாஜில் வகுப்புக்கள் தான் அழங்கரித்துக்கொண்டிருக்கிறது.
வடமாநிலங்களிலிருந்து வேலையாட்களை இறக்குமதி செய்வது போல ஓதும் மாணவர்களும் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். 15 மாணவர்கள், ஒரு சமையல்காரர், ஒரு ஆசிரியர் என ஒரு பேக்கேஜாக விற்பனை செய்ய இங்கு புரோக்கர்களும் உண்டு. தமிழகத்து பிள்ளைகள் இல்லாவிட்டாலும் வடமாநில பிள்ளைகளுக்காவது கல்வி கொடுக்க முடிகிறதே என்று ஆறுதல் படுத்திக்கொள்ளும் மதரஸாக்களும் உண்டு.
இதை சரிசெய்ய இரு கல்வித்திட்டங்கள் தீர்வாக இருக்குமோ என்று அதையும் செயல்படுத்தி கையை சுட்டுக்கொண்ட மதரஸாக்களும் உண்டு, எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்காமல் தடுமாறுகிற மத்ரஸாக்களும் உண்டு.
சுருக்கமாகச் சொன்னால் மதரஸாக்களை வீழ்ச்சியிலிருந்து மேலேற்ற என்ன என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதோ அவையனைத்தும் தற்காலிக தீர்வாக அமையுமே தவிர நிரந்தர தீர்வுக்கான வழியல்ல.
மதரஸாக்களின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
1. மக்தப்களின் வீழ்ச்சி
2. மதரஸாவில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளக்குறைவு
3. ஆலிம்களின் எதிர்காலம் பற்றிய அச்சம்
4, மார்க்க கல்வி விஷயத்தில் சரியான விழிப்புணர்வு இல்லை
5. மதரஸாக்களின் பொருளாதார பளஹீனம்.என பல காரணங்களை ஆய்வுசெய்வதிலேயே நம் காலங்கள் கடந்துகொண்டிருக்கிறது.
மதரஸாக்களின் மறு எழுச்சிக்கு ஒரு போர்க்கால நடவடிக்கை தேவை.
என்ன செய்யப்போகிறோம்? எப்படி நம் பாரம்பரிய கல்விக்கூடங்களை மீட்டெடுக்கப்போகிறோம்?
இதற்கான முதல் தீர்வு: மார்க்க கல்வி பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். அதற்காக ஜும்ஆக்கள், பொதுமேடைகள், இணையதளங்கள் என அனைத்து மீடியாக்களையும் உச்சகட்டமாக பயன்படுத்தவேண்டும்.
இஸ்லாமிய பார்வையில் கல்வி இருவகை
ஒன்று: العلم بخلق الله அல்லாஹ்வின் படைப்பை தெரிவது.
இரண்டாவது: العلم بامرالله அல்லாஹ்வின் ஏவலை அறிவது.
வானவியல், புவியல், விலங்கியல், தாவரவியல் சமுத்திரவியல், பொறியியல், மருத்துவம் இவை போன்றவை முந்தியவகை அறிவைச் சார்ந்தவை.
இரண்டாவதுவகை அறிவு மத்ரஸாக்களில் போதிக்கப்படுகிறது.
முதல்வகையான இல்மை அல்லாஹ் ஆதம் அலை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தான் என்பதை பின்வரும் வசனம் பேசுகிறது
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
ஆதமுக்கு அனைத்து பொருட்களின் பெயர்களையும் கற்றுக்கொடுத்தான். பின்பு மலக்குகளுக்கு அவைகளை எடுத்துக்காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவைகளின் பெயரை அறிவியுங்கள் என்று சொன்னான்.
இதன்விளைவாக அல்லாஹ் ஆதம் அலை அவர்களுக்கு வானவர்களை சிரம்பணிய வைத்து சிறப்பாக்கினான். அதேசமயம் சுவனத்தில் அல்லாஹ்வின் العلم بامرالله எனும் ஏவல் கல்விக்கு மாற்றம் செய்தபோது அல்லாஹ் என்ன செய்தான் என்பது தெரியாதா?
கல்வியை பற்றி இஸ்லாம் உயர்த்திப்பேசியளவுக்கு வேறு எந்த மதமும் பேசியதில்லை. கல்வியை ஒரு முஃமின் தொலைத்த பொருள் என்றார்கள்.
ஒரு ஹதீஸில் வணக்கவழிபாடுகளை விட கல்வியை உயர்த்திக்காட்டுகிறார்கள்.
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: அإِنَّكَ إِذَا تَعَلَّمْتَ بَابًا مِنَ الْعِلْمِ كَانَ خَيْرًا لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ تَطَوُّعًا مُتَقَبَّلَةٍ، وَإِذَا عَلَّمْتَ النَّاسَ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ بِهِ فَهُوَ خَيْرٌ لَكَ مِنْ أَلْفِ رَكْعَةٍ تُصَلِّيهَا تَطَوُّعًا مُتَقَبَّلَةٍ
கல்வியில் ஒரு பாடத்தை நீ கற்றுக்கொண்டால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆயிரம் இரக்கஅத் நஃபில் தொழுவதை விட சிறப்பானது. அவ்வாறு நீ கற்றதை பிறருக்கு கற்றுக்கொடுத்தால் அதுவும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆயிரம் இரக்கஅத் நபில் தொழுவதை விட சிறப்பானது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (தர்கீப்)
அப்படிப்பட்ட அல்லாஹ்,ரஸூலின் அன்பையும் பொருத்தத்தயும் பெற்ற மதரஸாக்களையும், மாணவர்களையும், உலமாபெருமக்களையும் மக்கள் கண்ணியமாக நடத்தியவரை இஸ்லாமிய சமூகம் இவ்வுலகில் தலைநிமிர்ந்து வாழ்ந்தது.
இதோ வரலாற்றில் ஒரு அற்புதமான நிகழ்வு.
கல்வி என்றைக்கும் பணம்,பதவிக்கு முன் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுத்ததில்லை
قدم هارون الرّشيد المدينة، وكان قد بلغه أن مالك بن أنس عنده அالموطأஞ يقرؤه على النّاس، فوجّه إليه البرمكيّ فقال: أقرئه السلام وقل له: يحمل إليّ الكتاب ويقرؤه عليّ، فأتاه البرمكيّ فقال: أقرئه السلام، وقل له: إن العلم يؤتى ولا يأتي، فأتاه البرمكيّ فأخبره، وكان عنده أبو يوسف القاضي، فقال: يا أمير المؤمنين، يبلغ أهل العراق أنك وجّهت إلى مالك في أمر فخالفك، اعزم عليه، فبينما هو كذلك، إذ دخل مالك، فسلّم وجلس، فقال له الرّشيد: يا ابن أبي عامر أبعث إليك وتخالفني؟ فقال: يا أمير المؤمنين، أخبرني الزّهري، عن خارجة بن زيد، عن أبيه قال: كنت أكتب الوحي بين يدي رسول الله- صلى الله عليه وسلّم- لا يَسْتَوِي الْقاعِدُونَ من الْمُؤْمِنِينَ 4: 95 [النساء: 95] وابن أمّ مكتوم عند النّبيّ- صلّى الله عليه وسلّم- فقال: يا رسول الله انى رجل ضرير، وقد انزل الله عليك فى فضل الجهاد ما قد علمت، فقال النبي صلى الله عليه وآله وسلم: அلا ادرىஞ وقلمي رطب ما جف، ثم وقع فخذ النبي صلى الله عليه وآله وسلم على فخذي، ثم أغمي على النبي صلى الله عليه وآله وسلم ثم جلس النبي صلى الله عليه وآله وسلم فقال يا زيد اكتب غَيْرُ أُولِي الضَّرَرِ 4: 95 [النساء:
95] .
ويا أمير المؤمنين حرف واحد بعث فيه جبريل والملائكة- عليهم السلام- من مسيرة خمسين ألف عام، ألا ينبغي لي أن أعزّه وأجلّه، وإن الله تعالى رفعك وجعلك في هذا الموضع بعملك، فلا تكن أنت أول من يضيع عزّ العلم فيضيع الله عزّك، فقام الرّشيد يمشي مع مالك إلى منزله ليسمع منه அالموطأ
.
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உலமாக்களின் முன்னோடி
92 ஆண்டு கால பரிசுத்தமான வாழ்வுக்கு சொந்தக்காரர்.
ஹஜ் உம்ராவை தவிர வேறு எதற்கும் மதீனாவை விட்டு வெளியே போகாதவர் என்பது ஆச்சரியமல்ல, 92 ஆண்டில் ஒருநாள் கூட மரியாதை கருதி மதீனா பூமியில் வாகனித்ததில்லை.
மதீனா மண்ணை மதித்ததற்காகவே மிதித்துநடந்தார்.
ரவ்லாவில் 70 ஆண்டுகள் தீன்கல்வி போதித்தவர்.
14 இஸ்லாமிய கலீபாக்கள் காலத்தில் வாழ்ந்த மாமேதை.
குறிப்பாக மாமன்னர் ஹாரூன் ரஷீத் காலத்தில் வாழ்கிறார்.
ஒரு தடவை மன்னர் ஹாரூன் ரஷீத் மதீனா வருகிறார்.வந்த இடத்தில் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் முஅத்தா எனும் ஒரு அற்புதமான ஹதீஸ்நூல் ஒன்றை தொகுத்து,அதை அவர்களே மக்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் எனவும் கேள்விப்பட்டார்கள்.
தன் பணியாள் பர்முகியை அனுப்பி, இமாம் அவர்களுக்கு ஸலாம் கூறி- தாங்கள் இராக் வந்து அர்சருக்கு அந்த ஹதீஸ் நூலை கற்றுத்தரவேண்டும் என்பது அரசரின் வேண்டுகோள் என்று சொல்லியனுப்பினார்கள்.
அதற்கு இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், மன்னருக்கு என் ஸலாமை சொல்லுங்கள். மேலும் கல்வியை நீங்கள் தேடி வரவேண்டும்.அது உங்களை தேடி வராது என்பதையும் தெரிவித்துவிடுங்கள் என்று தைரியமாக சொல்லி அனுப்பினார்கள்.
அப்போது அந்த சபையில் இருந்த அபூயூஸுப் காழி அவர்கள் மன்னர் அவர்களே! இமாம் மாலிகிடம் நீங்கள் வேணியதையும், இமாம் அவர்கள் உங்களுக்கு அனுப்பிய பதிலையும் இராக்வாசிகள் கேள்விப்பட்டால் சரியாக இருக்காது. எனவே உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னபோது- அச்சபைக்கு இமாம் மாலிக் ரஹ் அவர்கள் வருகை தருகிறார்கள்.
அப்போது இமாம் அவர்களை நோக்கி மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள், ”என் உத்தரவுக்கு நீங்கள் ஏன் மாறு செய்தீர்?” என வினவியபோது –
”நபித்தோழர் ஜைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வஹி எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது- لا يَسْتَوِي الْقاعِدُونَ من الْمُؤْمِنِينَ 4: 95 [النساء: 95 (இந்த தீனுக்காக போரில் கலந்துகொள்பவர்களும் கலந்து கொள்ளாதவர்களும் நன்மையில் சமமாகிவிடமாட்டார்கள்) எனும் வசனம் இறங்கியது.
அந்நேரம் பார்வை தெரியாத ஸஹாபியான இப்னு உம்முமக்தூம் ரளியல்லாஹு அன்ஹு அங்கிருந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பார்வை தெரியாதவன். என் போன்றோரின் நிலை என்ன என வினவினார்.
அதற்கு பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணிவாக அதுபற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை இறைச்செய்தியை என் பேனா எழுதி முடித்துவிட்டது என்று கூறினார்கள்.
சிரிதுநேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார்கள். அதாவது வஹி வருகிறது. என்னை அழைத்து
غَيْرُ أُولِي الضَّرَرِ 4: 95 [النساء(நோயாளிகளை தவிர) என்ற ஒரு எழுத்தை அதில் சேர்த்து எழுதச்சொன்னார்கள்
அமீருல் முஃமினீன் அவர்களே! ஒரு எழுத்துக்காக அதன் கண்ணியம் கருதி ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை,மற்றும் பல வானவர்களையும் 500 ஆண்டின் தொலைவிலிருந்து அல்லாஹ் அனுப்பி வைத்தான். அப்படிப்பட்ட அல்லாஹ்வின் கல்விக்கு நான் மரியாதை செய்யவேண்டாமா?
அல்லாஹ் உங்களின் உயர்வான செயலால் உங்களை இந்நிலையில் வைத்துள்ளான். கல்வியின் கண்ணியத்தை கெடுத்தால் அல்லாஹ் உங்களின் கண்ணியத்தை கெடுத்து இந்த இடத்தைவிட்டும் இறக்கிவிடுவான்” என்றார்கள்.
அதைக்கேட்ட இமாம் அவர்களின் இல்லம் தேடிவந்து முஅத்தா எனும் ஹதீஸ் நூலை மாமன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் கற்றதாக வரலாறு.
கடந்து செல்லும் மேகத்தை பார்த்து, நீ எங்கு மழையை சுமந்துகொண்டு கொட்டினாலும் அது என் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவே இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு விசாலமான ஆட்சியை பெற்ற மன்னர் ஹாரூன் ரஷீத் அத்தகைய ஆட்சியை பெற கல்வியின் மீது அவருக்கு இருந்த மரியாதயே காரணம்.
இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் எப்படியாவது மாணவராக சேர்த்துவிட வேண்டுமென மக்காவின் கவர்னர், மதீனாவின் கவர்னர் பரிந்துரை செய்தும் அதை கொஞ்சமும் பொற்படுத்தவில்லை.இந்த கல்வியை தேடி மக்காவில் உள்ள என் வீட்டை அடமானம் வைத்து என் தாய் என்னை அனுப்பியுள்ளார்கள் என்று சிறுவர் ஷாபிஈ ரஹ் அவர்கள் சொன்னபோதுதான் அவரை ஏற்றார்கள்.
சில தரம் கெட்ட தறுதலை ஜமாஅத்களின் வருகையால் மதரஸாக்களும், மார்க்க மேதைகளும் எள்ளி நகையாடப்பட்ட போதும், உடனடியாக அதை தடுக்கவேண்டிய மக்கள் நமக்கேன் வம்பு என்று என்றைக்கு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்களோ அன்று முதல் முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியைநோக்கி பயணிக்கத் துவங்கியது.
கல்விக்கேந்திரமான பக்தாத் :
பக்தாத் இஸ்லாமிய உலகத்தின் கோட்டை என்று வர்ணிப்பார்கள்.இமாம் கஸ்ஸாலி,இமாம் ஷீராஸி,இமாம் கதீபுல் பக்தாதி,அப்துல்காதிர் ஜைலானி போன்ற உலகப்புகழ் பெற்ற அறிஞர்களை தந்த நிழாமிய்யா மத்ரஸா கோலாச்சிய நகரம்.இன்றும் உலகம் முழுவதும் அந்த மத்ரஸாவின் பாடத்திட்டத்தைக்கொண்டே பல்லாயிரக்காக்கான மதரஸாக்கள் இயங்குகிறது
அப்படிப்பட்ட பக்தாத் நகரத்தின் இன்றைய நிலை மிகவும் பரிதாபமானது.
ஆம்! அங்கு மத்ரஸாக்ளின் அடையாளம் கூட இன்றி துடைக்கப்பட்டுவிட்டது. அனைத்து மத்ரஸாக்களும் ஸ்கூல்களாக, காலேஜ்களாக மாற்றப்பட்டுவிட்டது.
அங்கே தீனை கற்றுக்கொள்ள யுனிவர்சிட்டிகளுக்கு செல்லவேண்டிய அவலமான நிலை.எப்படி அமெரிக்கா,கனடா, யூரோப் போன்ற நாடுகளில் எப்படி தீன் யுனிவர்சிட்டி மூலம் தீனின் மரியாதை தெரியாதவர்களால் கற்றுக்கொடுக்கப்படுகிறதோ அதேநிலையே கல்விப்பாரம்பரியமான பக்தாதி லும் என்பது வேதனையாக இல்லை?
இதன் விளைவு அமெரிக்க வேட்டைநாய்களின் நரபலிக்கு தினமும் பல உயிர்கள் கொத்து கொத்தாக அறுவடை செய்யப்படுகிறது.தீய தலைமை, பொருளாதார நெருக்கடி,பயமான வாழ்க்கை,நிம்மதியில்லா வாழ்க்கை என அவர்களின் வாழ்வு மிகவும் பரிதாபத்திற்குறியது.
அல்லாஹ் இந்த தீனுடைய கல்வியின் மூலம் சிலருக்கு கண்ணியத்தை கொடுப்பான்.இன்னும் சிலருக்கு பொருளாதார வசதியை வழங்குவான்.வேறு சிலருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவான்.
وَفِي صَحِيحِ مُسْلِمٍ عَنْ نَافِعِ بْنِ عَبْدِ الْحَارِثِ الْخُزَاعِيِّ وَكَانَ عَامِلَ عُمَرَ عَلَى مَكَّةَ أَنَّهُ لَقِيَهُ بِعُسْفَانَ فَقَالَ لَهُ مَنِ اسْتَخْلَفْتَ فَقَالَ اسْتَخْلَفْتُ بن أَبْزَى مَوْلًى لَنَا فَقَالَ عُمَرُ اسْتَخْلَفْتَ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ عَالِمٌ بِالْفَرَائِضِ فَقَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ قَدْ قَالَ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் மக்காவின் அதிகாரியாக இருந்த ஒருவரை உஸ்பான் எனும் இடத்தில் சந்தித்தார்கள். அப்போது மக்காவில் உங்களின் கலீஃபாக யாரை நியமனம் செய்து வந்தீர்கள் என வினவியபோது ”எங்களின் அடிமை இப்னுஅப்ஸா என்பவரை” என பதில் கூறினார்கள்.
”அடிமையையா?” என உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆச்சரியமாக கேட்டபோது, ஆம் அவர் அல்லாஹ்வின் வேதத்தை அறிந்தவர் மேலும் ஷரீஅத்தின் வாரிசுரிமை சட்டங்கள் பற்றிய அறிவும் அவருக்கு உண்டு என்று கூறினார்.
அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”நிச்சயமாக அல்லாஹ் இந்த வேத்த்தின் மூலம் சிலரை உயர்த்துவான். இன்னும் சில்ரை தாழ்த்துவான் என உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என்று கூரினார்.
குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்வை தருவான், காரணம் அல்லாஹ் அவர்களின் இல்முக்காக அறியாபுறத்திலிருந்து பரக்கத்செய்வான்.உலகில் எங்காவது ஒரு ஆலிம் தற்கொலை செய்தார் என்று காட்டமுடியுமா? ஒரு லட்சரூபாய் மாதம் வருமானம் பெறுபவர் அழுக்காடையுடன் வருவார்
பத்தாயிரம் வருமானம் பெறும் ஆலிம் எப்போதும் வெண்மையாக இருப்பார். இதுவே ஒரு ஆலிமின் பரக்கத்தான வாழ்வுக்கு உதாரணம். உங்களின் பிறப்பிலிருந்து இறப்புவரை கப்ர் முதல் சுவனம்வரை உலமாக்கள் உங்களுக்கு தேவைப்படுவார்கள்.
உலகில் மூன்று வாழ்க்கை மட்டுமே பாக்கியமானது
1. ஆலிமாக ஆகிவிடு
2. மாணவனாக மாறிவிடு
3. கல்விக்கு உதவியாளனாக ஆகு
4 … ஆகிவிடாதே.
இதை சொன்னவர் பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
ஆக்கம்: அமலி உஸ்மானி