குர்ஆனிய தலைமுறைதான் இன்றையத் தேவை!
மதீனத்துப் பள்ளிவாசல் மக்கள் திரளால் நிறைந்திருந்தது.
ஒரு முக்கிய அறிவிப்புக்காக மக்கள் அழைக்கப்பட்டிருக்க, கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரில் ஏறுகின்றார். ‘மக்களே! நபிகளாரின் காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த மஹ்ர் தொகையை விட அதிகமாக எவரும் வாங்கக் கூடாது. மீறி வாங்கினீர்களெனில் கூடுதலாக வாங்கப்பட்ட தொகையைப் பறித்து அரசாங்கக் கருவூலத்தில் சேர்த்துவிடுவேன்’ என்று அறிவிக்கின்றார்.
உடனே மிம்பரிலிருந்து இறங்கி பள்ளிவாசலலை விட்டு வெளியே வர யத்தனிக்கின்றார்.
அப்போது அவருடைய வழியை மறிக்கின்ற வகையில் நிற்கின்றார் ஒரு மூதாட்டி!
‘அமீருல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் தலைவரே! எதனைப் பின்பற்றி நடக்க வேண்டும்? நீர் பிறப்பிக்கின்ற சட்டத்தையா? இறைவனின் வாக்கையா?’ என்று உரத்தக் குரலில் தட்டிக் கேட்கின்றார், அந்த மூதாட்டி.*
ஒரே ஒரு கணம் கூட தாமதிக்காமல், ‘இறைவாக்கைத்தான் பின்பற்ற வேண்டும். அதிலென்ன சந்தேகம்? என்ன சொல்ல வருகின்றீர்?’ என வினவுகின்றார், உமர்ரளியல்லாஹு அன்ஹு.
இறைவனே ‘நீங்கள் அவளுக்குப் பணக் குவியலையே (மஹ்ராகக்) கொடுத்திருந்தாலும்கூட’ என்று குர்ஆனில் குறிப்பிட்டிருக்கின்ற போது, மஹ்ராக எந்தவிதமான வரையறையும் இல்லாமல் குவியல் குவியலாகப் பணத்தைத் தரலாம் என இறைவன் அனுமதித்திருக்கின்றபோது, எந்த அடிப்படையில் மஹ்ர் தொகைக்கு வரையறையை விதிக்கின்றீர்கள்?’ என்று நறுக்குத் தெறித்தாற்போல் கேட்கின்றார், அந்த மூதாட்டி.
உமர் ரளியல்லாஹு அன்ஹு உடனே மீண்டும் மிம்பரில் ஏறுகின்றார். ‘மக்களே! மஹ்ர் தொகையை அதிகமாக நிர்ணயிப்பதை நான் தடை செய்திருந்தேன். அதனை நீக்குகின்றேன். நீங்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மஹ்ர் தொகையை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று அறிவித்தார்.
இந்த வரலாற்று நிகழ்வை நாம் அனைவருமே நிறைய தடவை கேட்டிருப்போம். படித்திருப்போம். பொதுவாக இஸ்லாம் தருகின்ற கருத்துச் சுதந்திரத்தை உணர்த்துவதற்காக இந்த நிகழ்வு முன்னுதாரணமாகச் சொல்லப்படும். இஸ்லாம் பெண்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரமும் கண்ணியமும் தந்திருக்கின்றது என்பதற்குச் சான்றாகவும் இந்த நிகழ்வு முன் வைக்கப்படும்.
அவற்றையும் தாண்டி இந்த நிகழ்வு தருகின்ற செய்தி ஒன்று உண்டு. அது நீங்களும் நானும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இன்றையக் காலத்தில் பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தி.
அதுதான் குர்ஆனுடனான தொடர்பு.
அந்தக் காலத்தில் மக்கள் அனைவருமே குர்ஆனுடன் ஆழமான, நெருக்கமான, உறுதியான தொடர்பு வைத்திருந்தார்கள். இதனால் அரசாங்கம் ஒரு சட்டத்தைப் பிறப்பிக்கின்ற போது உடனுக்குடன் குர்ஆனிய வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து தவறைச் சுட்டிக்காட்ட அவர்களால் முடிந்தது.
ஒரு சாதாரண மூதாட்டியே குர்ஆனை மேற்கோள் காட்டித் தட்டிக் கேட்கின்ற அளவுக்கு அவர்கள் குர்ஆனுடன் நெருக்கமாகப் பிணைந்திருந்தார்கள்.
அத்தகைய குர்ஆனிய சமூகமும் குர்ஆனிய தலைமுறையும்தாம் இன்றையத் தேவை…!
அல்லாஹ் அருள் செய்வானாக…!
– அஜீஸ் லுத்புல்லாஹ்
Story of the photograph…
A KHATAM Al-Quran ceremony was held at The University of Kent on 29th of March 2015, hosted by Bruneian students studying in University of Kent (BruKent Society), with Brunei students from University of Sussex (BruSussex Society) participating the event, in which both societies completed the 30 juzuk (chapters) of Al-Quran.