இயலாமையைத் தாண்டித் தன்னைத்தானே விரும்புதல்
ஒருவர் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து வித்தியாசமான பிரதிபலிப்பை விரும்பும் நேரங்கள் உள்ளன: நான் உயரமாக, ஒல்லியாக, இன்னும் வெள்ளையாக இருக்கவேண்டும், எனது முடி அடர்த்தியாக, கண்கள் பெரிதாக இருந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன். இது பொதுவான எண்ணம்தான். நம்மில் பலர் இதைக் கடந்திருப்போம்,
குறிப்பாக வளரும் ஆண்டுகளில். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உணர்வு இன்னும் கூட்டப்படுகிறது. முழுமையற்ற உணர்வு, உடைந்த உணர்வு மற்றும் சில நிலைகளில் “சமூகத்தின் அழகு வரையறையில்” கட்டமைப்புநிலையில் பொருந்தாமை போன்றவை ஒருவருடைய நம்பிக்கை மற்றும் உடல்தோற்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்தலாம்.
எலும்பு சார்ந்த இயலாமை கொண்ட ஒரு குழந்தையாக நான் என்னுடைய பெற்றோரால் வளர்க்கப்பட்டேன், அவர்கள் எனக்கு “நான் அதற்கு மதிப்புடையவன்”, “நான் இருக்கும் முறையிலே சிறப்பானவர்” என்று கற்பித்தனர். ஆகவே, நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
நான் வித்தியாசமாக இருப்பது வழக்கமானதுதான், நான் அது குறித்துப் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் பருவ வயதை அடைந்தவுடன், நான் மெதுவாக வித்தியாசத்தை உணரத் தொடங்கினேன். நான் விளையாட்டில் பங்கெடுக்க இயலவில்லை, நான் எடையை இழந்துகொண்டிருந்தேன், நான் குள்ளமாக இருந்தேன் மேலும் நான் என்னை எந்த வகையில் அழகாக நினைக்கவில்லை.
எனது தோற்றம் குறித்த எந்த பாராட்டும் ஆச்சரியத்துடன் எதிர்கொள்ளப்பட்டது. என்னை யாரும் எந்த வகையிலும் விரும்ப முடியாது என்பது போல் உணர்ந்தேன். நான் மற்ற களங்களில் நம்பிக்கையுடன் இருந்தாலும், என்னைப் பற்றிய இந்தத் தோற்றம் தொடர்ந்தது அல்லது இன்னும் தொடர்கிறது. அது மிகுந்த அக்கறையிலிருந்து அக்கறையின்மை வரை ஊசலாடுகிறது.
எனது பதின்பருவத்தில் ஒரு நிலையில், நான் எப்போதும் உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தேன், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து என்னைப் பட்டினி போட்டுக்கொண்டேன். தீடீரென பசி வேட்கை வரும், நான் முழுமையாக உணவுக்கட்டுப்பாட்டை விட்டு விடுவேன். பின் எடை அதிகரிக்கும், நான் மனச்சோர்வடைந்து இது எப்படி எனக்கு நடக்கலாம் என்று என்னை நானே தண்டித்துக்கொள்வேன்.
கடந்த சில ஆண்டுகளாக எனக்கு நானே “இது வழக்கமானதுதான், நான் எப்படித் தோன்றுகிறேனோ அது வழக்கமானதுதான்” என்று சொல்லக் கற்றுக்கொண்டேன். நான் இந்தப் பிரச்னையை முழுமையாகத் தாண்டிவிட்டேன் என்று நினைக்கவில்லை. ஆனால் அது ஒரு முன்னேற்றம். இன்று நான் அமைதியாக உணர்கிறேன், நிச்சயமாக இன்னும் அதிக நம்பிக்கையை.
அது கண்டிப்பாக ஒரு கடினமான பயணமாக இருந்தது – உங்கள் குறைகளுடன் உங்களை ஏற்றுக் கொள்வது ஒருபோதும் எளிதல்ல. இத்துடன் ஊனமும் சேர்ந்துகொள்கிறது, ஒருவர் எடையைக் குறைக்க விரும்பினால், அவர் எவ்வளவு சிரமப்பட்டாலும் அது இன்னும் கடினமாக இருக்கிறது. இந்த வலியைத் தாங்கத்தான் வேண்டுமோ என்றும் யோசிக்கிறேன். நான் இதை யாருக்கு நிரூபிக்கவேண்டும்?
எதிர்மறை உடல்தோற்றக்கருத்து கொண்டிருப்பதன் பிரச்னை, ஒருவர் ஏற்கெனவே உள்ள அழகைக் கவனிப்பதை நிறுத்துகிறார். எதிர்மறைச் சிந்தனை நேர்ச் சிந்தனையை வென்றுவிடுகிறது என்று நான் நினைக்கிறேன். ஊனம் கொண்ட ஒரு நபர் தொடர்ச்சியாகத் தனக்குத்தானே தன்னுடைய நேர் அம்சங்களை(தோற்றத்தைப் பொறுத்தவரை)ப் பார்க்கவேண்டும் என்று நினைவூட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இப்படி அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருக்கவேண்டியிருப்பதே ஒருவரைக் குறைவாக உணரச்செய்யலாம். ஊடகங்களில் அழகு மற்றும் ஊனம் ஆகியவை காட்டப்படும் முறை பிரச்னையை இன்னும் அதிகமாக்குகிறது-சில மாற்றுத்திறனாளிகளே நடிகர்களாக உள்ளனர் மேலும் அழகு மற்றும் ஊனம் ஆகியவற்றின் கருத்தாக்கம் அரிதாகவே பொருந்திவருகிறது.
பாலினப் பிரிவு பிரச்னையை இன்னும் பெரிதாக்குகிறது-நீங்கள் மாற்றுத்திறனாளிப் பெண்ணாக இருந்தால், ‘சிறந்த உடற்கட்டு’ என்ற சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பெண்கள் பொதுவாக அதிகம் உள்ளாவதால், பிரச்னை இன்னும் பெரிதாகிறது. பாலியல் விழைவைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் பாலியல் விருப்பமற்றவர்களாக நம்பப்படுகிறார்கள். அவர்கள் தங்களுடைய உடலையோ பிறருடைய உடலையோ ஓரளவே அறிந்திருக்கக்கூடும். ஆகவே, உடல் என்பது வெறுமனே செயல்பாட்டுக்கானது, வாழ்வதற்கு அல்லது அனுபவிப்பதற்கானதில்லை என்கிற உடல் தோற்றத்தை இது உருவாக்குகிறது.
பெறப்படும் ஊனத்தின்போது, ஒருவர் தீடீரென்று இழப்பு உணர்வினை அனுபவிக்கிறார் மேலும் அது உடல்பற்றிய நேர்வித பெரும் சரிவுக்கு இட்டுச் செல்லலாம். எனவே ஒருவர் ஊனத்தைப் பெறும் காலகட்டம் சிக்கலானது-ஒருவர் அதனை ஏற்றுக் கொண்டு வழக்கத்துக்குத் திரும்புவதற்கு, அதற்கான வருந்துதல் செயல்முறையை முழுமையாகக் கடக்க வேண்டும்.
பல நேரங்களில், இயலாமை கொண்ட நபர்களுக்கு அவர்களுடைய உடல் குறித்த பாராட்டுகள் ஓர் “ஈடுசெய்யும்” விளைவைக் கொண்டுள்ளன. “உனது கைகள் செயல்படவில்லையென்றால் என்ன? நீ அற்புதமான சிரிப்பைக் கொண்டுள்ளாய்” என்று ஒருவர் சொன்னால், அது அவருடைய நம்பிக்கையை மேலும் கீழே கொண்டுவந்து, ஊனமுற்ற வலியை உணரச்செய்கிறது.
பார்வைத் திறனற்றோருக்கான உடல் தோற்றக்கரு குறித்து அடிக்கடி கேள்விகள் எழுகின்றன: அவர்கள் அதை உணர்வார்களா? அவர்கள் எல்லாவற்றையும் அறிந்திருப்பார்களா? ஒருவருடைய உடல் தோற்றக்கரு என்பது பார்வைக்குத் தெரியும் உடலியல் சுயம் என்பது மட்டுமல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும். உடல்தோற்றக்கரு பல உருவங்கள் கொண்டது: ஒவ்வொரு உணர்வுகளும் தோற்றத்தை எப்படி உணர்கின்றன – தொட்டுணர்தல், கேட்டல், தசை உணர்வு, இன்னும் பல. இவற்றின் கலவை, நமது உடல் தோற்றக் கருவை நாம் உணர்வதற்கு உதவுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்வித உடல்தோற்றக்கருவை வளர்ப்பது நிச்சயமாகக் கடினமாக இருக்கும் அதே வேளையில், அது கண்டிப்பாகச் சாத்தியமானதே. அதன் அடிப்படைச் சாரம் அந்த நபரைச் சுற்றியுள்ள ஆதரவு அமைப்பில் உள்ளது. குடும்பம் மற்றும் நண்பர்கள் அந்த நபர் இருக்கும் முறையிலே அழகாக உள்ளார் என்று வலுவூட்ட வேண்டும். (ஒருவர் அடிக்கடி காணும் இரக்கம் மற்றும் ஆறுதல்படுத்தல் இன்றி).
பாலியல் போன்ற கருத்துகள் இயலாமை கொண்ட குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட வேண்டும்; பெரும்பாலும், செயல்படும் உடல் கொண்ட மற்ற குழந்தைகள் போன்று அவர்களுக்கு இந்தத் தலைப்புகளில் ஏதும் சொல்லித்தரப்படுவதில்லை. ஆகவே, அவர்கள் பாலியல் வாழ்க்கையை அனுபவிக்கப்போவதில்லை, அவர்களுக்கு ஒரு கூட்டாளி அமையப்போவதில்லை என்று சமூகம் நம்புவதாகப் பொருளாகிறது. இது அவர்களுடைய எதிர்மறை உடல்தோற்றக்கருவை மேலும் வலுவாக்கலாம். நிறைவாக, ஒருவர் இருக்கும்விதத்தில் பெருமை கொள்ளும் பொறுப்பு, நிச்சயமாக மாற்றுத்திறனாளிகளிடமே உள்ளது. ஆனால் இவற்றில் சில விசயங்கள் அதற்கு உதவுகின்றன.
ஆனால் நேர்வித உடல் தோற்றக்கருவை நோக்கி ஒருவர் நகர எடுக்க வேண்டிய உறுதியான படிகள் எவை?
மும்பையைச் சேர்ந்த மனநல நிபுணர் ஷ்ரேயா ஶ்ரீதரன்-மாத்ரே உடல்தோற்றப் பிரச்னைகளை விளக்குகிறார், மேலும் நேர்வித உடல்தோற்றத்தை நோக்கிய பயணத்தை எப்படித் தொடங்குவது என்று நமக்குச் சில குறிப்புகளைக் கொடுக்கிறார்.
[ மதுமிதா வெங்கடராம் ஒரு மனித வள நிபுணர், மற்றும் பன்முகத்தன்மை, உள்ளடக்குதல் பரப்புரையாளர்.]