தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் (நூல்)
ஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவதுமில்லை.
மனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி.
இந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய உயிரினங்களினதும் இயக்கங்களை நிர்வகிக்கின்ற பிரபஞ்ச நியதிகளை ஆராய்ந்து கற்கும் அறிவியல் முயற்சிகளை முஸ்லிம்கள் கைவிட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.
இதன் விளைவாக அவர்கள் வாழும் உலகமோ அவர்களைப் பூண்டோடு புதை குழிக்கு அனுப்ப விரும்பும் எதிரிகளிடமிருக்கிறது என்ற பேருண்மையையும் இந்நூல் ஆழமான கவலையோடு சொல்லிச் செல்கின்றது சிந்திக்கத் தூண்டுகின்றது.
நீண்ட நெடும் தஃவா வரலாற்றின் உடனடித் தேவையை நிறைவேற்றி வைக்கும் வகையிலும் எதிர்கால அழைப்பியல் வரலாற்றை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றபிரக்ஞையோடும் எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது.
தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் (நூல்)
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தமிழ் பேசும் இஸ்லாமிய உலகத்தில் நன்கு அறியப்பட்டவர். இலங்கையின் தஃவாக் களத்திலும் கலாசாரத்திலும் அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் தாக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அவர் எழுத்துலகிற்கு புதியவர் அல்ல. புதிய பார்வை கொண்டவர்.
அவரது அழைப்பின் நிலம், நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு, பெண்: நீதமும் நிதர்சனமும் உள்ளிட்ட எட்டு நூற்கள் வசகர் மத்தியில் ஆழ்ந்த கவனயீர்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன மனித மனங்களை ஈர்த்திருக்கின்றன மனித உள்ளங்களோடு உரையாடுகின்றன. இந்தத் தொடரில் ஒன்பதாவது நூலாக அரபு மொழியில் கலாநிதி மஜ்தி முஹம்மத் ஆஷூர் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலைத் தழுவி தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் எனும் நூலை யாத்துள்ளார் நூலாசிரியர்.
அல்ஹம்துலில்லலாஹ். இதனை அல்ஹஸனாத் வெளியீட்டகம் வெளியிட்டு வைத்திருக்கின்றது. நூலின் பக்க வடிவமைப்பு, தளக் கோலம், அட்டைப் படம் என்பன தரமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன. திரும்பும் திசையெங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கெதிராகவும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்ற பெரும் துயரங்கள் ஏராளம்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு பலத்த நெருக்கு வாரங்களுக்கு முஸ்லிம் சமூகம் உட்பட்டிருக்கின்றது. விடியல் கிடையாதா, உலகில் நீதி தலையெடுக்காதா, உள்ளமும் உலகமும் அமைதிப் பூங்காவாகபூத்துக் குலுங்காதா? என ஏங்கும் மனித மனங்களுக்கு ஆறுதலாகவும் மீண்டுமொருமுறை தம்மை, தமது பணியை, செல்லும் திசையை, கையாளும் வழிமுறையை, எடுக்கும்முயற்சியை, வகுக்கும் திட்டத்தை அகல் விரிவான பார்வைக்கு உட்படுத்தவேண்டும் என்பதை வரிக்கு வரி, பக்கத்திற்குப் பக்கம் வலுவூட்டிக் கொண்டேசெல்கிறது தனி மனித, சமூக வாழ்வில் இறை நியதிகள் எனும் புதிய வரவு.
நீண்ட நெடும் தஃவா வரலாற்றின் உடனடித் தேவையை நிறைவேற்றி வைக்கும் வகையிலும் எதிர்கால அழைப்பியல் வரலாற்றை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றபிரக்ஞையோடும் எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது.
எண்திசையெங்கும் பிரபஞ்ச சிருஷ்டி கர்த்தாவின் வாக்கு மேலோங்க வேண்டும், பூமிப் பந்தெங்கும்சத்தியப் பேரொளி பரவ வேண்டும், முஸ்லிம் உம்மத் உலகில் தலை நிமிர்ந்திடவேண்டும், தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்கின்ற ஆசையும் ஏக்கமும் ஆதங்கமும் இந்த நூல் முழுவதும் இழையோடியிருப்பதை நிச்சயமாய் வாசகர்கள் உணர்வார்கள். நான் உணர்ந்ததை விட அது நிச்சயமாக மேல் நிலையிலிருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை. இக்கருத்தைத்தான் நூலாசிரியர் தனது முன்னுரையில் பின்வருமாறு மொழிகின்றார்:
அல்குர்ஆனின் கணிசமான பகுதி முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகின்ற ஒரு முக்கிய விடயமாக இறை நியதிகள் இருந்த போதிலும், அவற்றுக்கு சமூக வாழ்வில் உரிய இடம் வழங்கப்படாதிருந்தமைக்குக் காரணம் இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தனியான ஆக்கங்கள் வெளிவராதிருந்தமையே. அந்த இடைவெளியை இந்த ஆக்கம் ஓரளவேனும் நிரப்ப வேண்டும் என்பது எனது அவா.
மனித வரலாறு நீண்டது. அந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டத் தொடங்கினால் மனிதன் வியந்து நிற்கும் இரு பெரும் நிகழ்வுகளை அங்கு காணலாம். ஒன்று, செல்வாக்கும் அதிகாரமுமிக்க தனி மனிதர்கள், சமூகங்கள், சாம்ராஜ்யங்கள். அவை பெரும் சேனைகளுடனும் பரிவாரங்களுடனும் இருந்திருக்கின்றன. தம்மை மிகைக்கும்சக்திகள் எதுவும் கிடையாது என எண்ணியிருந்தன. மனித இனத்தை வருத்தி சாறு பிழிந்தன. மனிதர்களை கொத்தடிமைகளாக அடக்கி ஆண்டிருக்கின்றன. ஏன் மாட்சிமைபொருந்திய இரட்சகன் நாமே எனவும் சொல்லத் துணிந்தன. அவை பேரழிவை சந்தித்துஇருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின அழிந்து கொண்டிருக்கின்றன.
பிர்அவ்ன் கட்டியெழுப்பிய எகிப்திய சாம்ராஜ்யம், ஜூலிய சீஸர் நிர்மாணித்த ரோமப்பேரரசு, நவீன சோவியத் ரஷ்யா, மரணத்தின் வாயிலை அடைந்திருக்கும் அமெரிக்க வல்லரசு இதற்கு உதாரணங்களாகும்.
இரண்டாவது, பலவீனமான தனிமனிதர்கள், சிறிய கூட்டம், இறையுணர்வுடன் வந்துபோன அதிகாரமிக்க ஆட்சியாளர்கள். இவர்களை வரலாறு மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து மனித இனத்தின் எழுச்சி மிக்க நாகரிகத்தின் முன்னோடிகளாகப் போற்றுகின்றது. நானிலமெங்கும் அமைதித் தென்றலை வீசச் செய்தவர்கள் என கௌரவிக்கின்றது. அவர்கள் நாமம் உச்சரிக்கப்படும் பொழுதுகளில் அவர்களுக்காய் மனித மனங்கள் பிரார்த்திக்கின்றன. மீண்டுமொரு முறை அவர்களின் வருகை அமையமாட்டாதா என உள்ளங்கள் ஏங்குகின்றன.
இவ்விரண்டு வரலாற்றுப் பக்கங்களிலும் தென்படுகின்ற மனித சமூகத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்புலமாயிருந்த இறை நியதிகளை மிகத் தெளிவாக வஹியின் வார்த்தை வரிகளோடு இந்நூல் விளக்கும் பாங்கு அலாதியானது.
இப்பிரபஞ்சப் பெருவெளி இறை நியதிகளால் சூழப்பட்டிருக்கின்றது. தனக்கு மேலால் அடுக்கடுக்காக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆகாயத்தையும் அதனுள் இருப்பவற்றையும் மேடு, பள்ளம், சமதரை, மலை, கணவாய்ஸ என பல வடிவம் கொண்ட புவியையும் உற்றுநோக்குமாறு அல்லாஹ் திரும்பத் திரும்ப மனிதனைப் பார்த்துச் சொல்லுகின்றான்.
தாவர உலகை அவதானிக்க வேண்டாமா என வினவுகிறான். மிருக உலகின் படைப்புக்குப்பின்னாலிருக்கும் அறிவை, ஞானத்தை, திட்டத்தை மனிதன் ஆராயக் கூடாதா எனக்கேட்கின்றான். மறுபுறத்திலே மனித இன வரலாற்றைப் படித்து படிப்பினை பெறுமாறு வழிகாட்டுகின்றான்.
இங்கு நிகழும் பிறப்பு, வாழ்வு, இறப்பு, வசந்தம், வரட்சி, எழுச்சி, வீழ்ச்சி என அனைத்தும் இறை நியதிகளால் ஆளப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வை இயக்கும் இறை நியதிகள் எல்லாக் காலத்திலும் ஒன்று போலவே இருந்திருக்கின்றன.
ஒரே உடலில் ஒரே பொழுதில் செய்யப்பட்ட இரண்டு ஸ்கேன் ரிப்போட்டைப் போல மனித வரலாற்றில் கடந்து போனவையும் கடந்துகொண்டிருப்பவையும் அமைந்துள்ளன. நிச்சயமாய் வரலாற்றின் எதிர்கால அறிக்கையும் வித்தியாசப்படப் போவதில்லை. இப்படித்தான் இந்த நூல் உறுதியாய் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
ஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவது மில்லை. மனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி.
இந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய உயிரினங்களினதும் இயக்கங்களை நிர்வகிக்கின்ற பிரபஞ்ச நியதிகளை ஆராய்ந்து கற்கும் அறிவியல் முயற்சிகளை முஸ்லிம்கள் கைவிட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.
இதன் விளைவாக அவர்கள் வாழும் உலகமோ அவர்களைப் பூண்டோடு புதை குழிக்கு அனுப்ப விரும்பும் எதிரிகளிடமிருக்கிறது என்ற பேருண்மையையும் இந்நூல் ஆழமான கவலையோடு சொல்லிச் செல்கின்றது சிந்திக்கத் தூண்டுகின்றது.
நபிமார்கள் தமது தூதுத்துவப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற அதிஅற்புதம் மிக்க இறை நியதிகளைக்கண்டறிந்து, பின்பற்றி பயனடைந்திருக்கின்றார்கள். அதல பாதாளத்திலிருந்த சமூகங்களை உயர்த்தி நிறுத்தியிருக்கின்றார்கள். அல்குர்ஆன் துல்கர்னைன் போன்ற நல்லடியார்களின் வரலாற்றை எடுத்துக்காட்டுகின்றது.
அவர்கள் இப்பூமியில் நீதியை, அமைதியை நிலைநாட்ட இறை நியதிகளைக் கண்டறிந்து செயற்பட்டதன் விளைவு என்றே அதனை வர்ணிக்கின்றது. ஏன் அல்லாஹ் தனது தனிப்பெரும் ஆற்றலினால் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களிலும் கூட தான் இப்பிரபஞ்சத்தில் ஏற்ப டுத்தியிருக்கின்ற நியதிகளின் அடிப்படையில், காரணகாரிய விதிகளுக்கூடாக நிகழ்த்தியிருப்பது எமக்கு எதனை உணர்த்த வருகின்றது!
இந்த உலகில் அனைவரும் காரணிகளினூடாக கருமமாற்றும் போது முஸ்லிம்கள் மாத்திரம் கராமத்களினூடாக கருமமாற்ற முடியாது என்பதை இந்நூல் அற்புதமாக நிறுவுகின்றது.
காரணிகளை ஒழுங்குபடுத்தி செயலாற்றியதன் பின்னர்அல்லாஹ் எம்முடனிருக்கின்றான் என்று கூறும் நபியவர்களை முஸ்லிம் சமூகம்படிக்க வேண்டும் எனச் சொல்வது இறைத் தூதரைப் பார்க்க வேண்டிய கோணத்தில்நாம் பார்க்கத் தவறி விட்டோம் என்ற குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. அந்தத்தூதர் எண்ணிலடங்கா இறை நியதிகளை பூமிக்கு கொண்டு வந்தார்.
அறியாமை மண்டிக்கிடந்த சமூகத்தை அறிவொளி பாய்ச்சும் சமூகமாக, உலகை வழிநடத்தும் தலைவர்களாகமாற்றினார்கள். இது ஓரிரு நாளில் நிகழ்த்திக் காட்டிய அற்புதமல்ல. இதற்குப் பின்னால் நபிகளார் பின்பற்றிய எண்ணிலடங்கா இறை நியதிகளை அரபுதீபகற்பத்தின் ஒவ்வொரு மண்ணும் சொல்லும்.
முஸ்லிம் சமூகம் ஏனையசமூகங்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்ற தனித்துவமான சமூகம். முழுமையாக பௌதிக காரணிகளை மட்டும் நம்பியிருக்கின்ற சமூகமல்ல. தவக்குல் எனும் அல்லாஹ்வை சார்ந்திருக்கும் சமூகம். இது குறித்தும் ஆழமாக விளக்க இந்நூல் தவறவில்லை. ஈமானியப் பண்பின் வெளிப்பாடாக இப்பண்பை இந்நூல் விவரிக்கின்றது.
இந்நூலில் 26 நியதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் காரணிகளும் காரியங்களும், வெகுமதியும் தண்டனையும், சோதனை, அல்லாஹ்வின் உதவி, சமூகங்களின் வீழ்ச்சி அல்லது அழிவு ஆகிய ஐந்து இறைநியதிகளே விலாவாரியாக விளக்கப்பட்டிருக்கின்றன.
சிந்தனை முகாம் வேறுபட்ட போதிலும் ஒவ்வோர் அழைப்பாளனும் இந் நூலை வாசிப்பது காலத்தின் தேவை எனக்கருதுகின்றேன். தனது பணியின் வெற்றிக்குரிய காரணிகளை அவர் கண்டு கொள்ள தூண்டுகோலாக இந்நூல் இருக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.
கலாநிதி மஜ்தி முஹம்மத் ஆஷூர் (மூல நூலின் ஆசிரியர்) அவர்களுக்கும் உஸ்தாத்ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கும் அல்லாஹ் அறிவு ஞானத்தை விரிவாக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம். இது போன்ற காத்திரமான ஆக்கங்களை இன்னுமின்னும் உஸ்தாத் அவர்கள் தர வேண்டும். அல்லாஹ் பணிகளை அங்கீகரித்துஅருள் புரிவானாக!
– அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம் பஸ்லுல் பாரிஸ் (நளீமி)
source: http://www.usthazhajjulakbar.org/2016/10/13/