“இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்” நூல் அறிமுகம்
“இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்” (நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை)
வண்டலூர் மெளலானா முனைவர் மஸ்ஊத் ஜமாலி அவர்கள் எழுதி 7.9.2018 அன்று சென்னையில் வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை.
*இது, ஒரு சட்டத்துறை கலைக்களஞ்சியம்* *பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி* இஸ்லாமியச் சட்டத்துறை தொடர்பான ஆழமானதொரு தமிழ் நூலை இப்போதுதான் நான் வாசித்தேன். நூலாசிரியர் முனைவர் *மௌலானா, P.S. சையித் மஸ்வூத் ஜமாலி* அவர்களின் வாழ்நாளில் இந்த ஒரு நூலே போதும் என்று சொல்கின்ற அளவிற்கு, நூல் அற்புதமாகவும் தரமாகவும் அமைந்துள்ளது. பாராட்டுகள்!
இஸ்லாத்தில் இறைவழிபாடு, குடும்பம், சிவில், குற்றவியல், நீதி, நிர்வாகம், பொருளாதாரம்ஸ என ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட சட்டங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது இம்மார்க்கத்தின் தனிச் சிறப்பாகும். எந்தவொரு வினாவுக்கும் இங்கே விடை உண்டு. செல்லும்-செல்லாது; உண்டு-இல்லை; விரும்பத் தக்கது-தகாததுஸ எனத் தெளிவான வரையறைகள் மிகக் கவனமாக வகுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயல்பூர்வமான துறைச் சட்டங்களுடன், நம்பிக்கை சார்ந்த கொள்கைகளையும் உள்ளடக்கியதே ‘ஷரீஆ’ எனும் மார்க்க நெறியாகும். செயல்கள் தொடர்பான சட்ட விதிகளுக்கு, ‘ஃபிக்ஹ்’ என்று பெயர். இந்த வேறுபாட்டைத் தொடக்கத்திலேயே நூலாசிரியர் விவரித்துவிடுவது சிறப்பு.
இறைமார்க்கத்திற்கும் அதன் சட்டங்களுக்கும் மூலாதாரமாகவும் அடிப்படை சான்றாகவும் எது இருக்க முடியும்? இறைவேதம்; அந்த வேதத்தைப் போதிக்கவும் நடைமுறைப்படுத்தவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பெற்ற இறைத்தூதரின் வாழ்க்கை (ஹதீஸ்); அந்த வாழ்க்கை முறையை அருகிலிருந்து நேரில் பார்த்த அத்தூதருடைய தோழர்களின் கூற்று (இஜ்மாஉ); இவற்றையெல்லாம் உள்வாங்கி, சட்டத் தரவுகளை முன்வைத்துச் சட்ட வடிவம் கொடுத்த வல்லுநர்கள், இமாம்கள் ஆகியோரின் ஆய்வு (கியாஸ்) –இவையெல்லாம்தான் மூலாதாரங்களாகும்.
இந்த மூலாதாரங்களின் நான்கு பிரிவுகளில் ஒவ்வொன்றும் மூலாதாரமாக இருப்பதன் தகைமை, அவை ஒவ்வொன்றிலிருந்தும் சட்டங்கள் எடுக்கப்பட்டதன் பின்னணி, அக்காலச் சூழ்நிலை, சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டதற்கான அவசியம், சட்டத்தை அதன் மூலாதாரத்திலிருந்து பெயர்ப்பதில் ஒவ்வோர் இமாமுக்கும் இருந்த அணுகுமுறை, இச்சட்டத் தொகுப்புகள் வெவ்வேறு நாடுகளில் நடைமுறைக்கு வந்தவிதம்ஸ என ஒவ்வொரு கட்டத்தையும் வரலாற்றுரீதியாகவும் தர்க்கரீதியாகவும் ஆசிரியர் நிறுவியிருப்பது புதுமையானது; வியக்கவைப்பது.
இந்தப் பாரம்பரியம் அன்றோடு முடிந்துவிடவில்லை என்பதையும் இன்றளவும் தோன்றுகின்ற புதுப்புதுப் பிரச்சினைகளுக்குச் சட்டத் தீர்வு காணும் பணி, சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களால் தொடர்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் நம் முனைவர் விவரித்திருப்பது, அவரது பரந்துபட்ட ஆய்வை நமக்கு உணர்த்துகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மார்க்கச் சட்டங்களைக் கையாள்வதில் அறிஞர்களிடமும் சமுதாயத்திடமும் இருக்க வேண்டிய நெகிழ்வுத் தன்மை குறித்தும் இறுக்கம் இருக்கலாகாது என்பதில் தமக்குள்ள சமூக அக்கறை குறித்தும் ஆசிரியர் வெளியிட்டுள்ள கருத்துகளும் யோசனைகளும் நம்மைச் சிந்திக்கவைக்கின்றன.
அவரவர் தத்தமது மத்ஹபைப் பின்பற்றுவதில் குறைகாண முடியாது. அதே நேரத்தில், சூழ்நிலையின் இறுக்கம், பிரச்சினையின் தீவிரம், சுமூக முடிவுக்கான தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மற்றொரு மத்ஹபின் சட்டத்தைத் தத்தெடுத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்ற ஆசிரியரின் சிந்தனை,
இன்றைய நெருக்கடிகளுக்கு ஒரு விடிவாகும் என்பதை மறுக்க இயலவில்லை.
இந்த நெகிழ்விற்கு வலுசேர்க்கும் வகையில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கையாண்ட மூன்று முத்தான காரணிகளை இந்நூல் வரிசைப்படுத்துகிறது. ‘கியாஸ்’ எனும் நான்காவது அம்சத்திற்கு அப்பால், ‘மஸ்லஹா’ (பொதுநலன்), ‘இஸ்திஸ்ஹாப்’ (தடை செய்யப்படாதவையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை –என்ற கோட்பாடு), ‘தராயிஉ’ (காரணிகள்- விலக்கப்பட்டதற்கு வழிகோலும் காரணியும் விலக்கப்பட்டதே- என்ற கோட்பாடு) ஆகிய இம்மூன்று அம்சங்களையும் கருத்தில் கொண்டே இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சட்டம் சொல்லியிருக்கிறார்கள்.
இரண்டாம் பகுதியில் இமாம்களின் பங்களிப்புபற்றி உரையாடும் நூலாசிரியர் தரமான தரவுகளை வழங்கியிருப்பது, நம் அறிவுப் பசிக்கு நல்லதொரு சத்தான தீனி. பிரசித்தி பெற்ற நாற்பெரும் இமாம்களின் வாழ்க்கை வரலாறு, சட்டத்துறைக்காக அவர்கள்தம் வாழ்நாளை அர்ப்பணித்த விதம், கல்வியைத் தேடி அவர்கள் மேற்கொண்ட கரடுமுரடான பயணங்கள், சட்டத் தீர்மானங்களின்போது, இமாம்கள் கடைப்பிடித்த தார்மிக நெறிகள், அறிஞர்களின் அடுத்த தலைமுறை உருவாக்கத்தில் இமாம்கள் காட்டிய ஆர்வம், என ஒவ்வொன்றையும் நூலாசிரியர் அழகுபடச் சித்தரிக்கிறார். இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இராக் தலைநகர் பக்தாதில் இருந்தபோது சில சட்டங்களை இயற்றினார்கள். அப்போது அன்னாருக்கு மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே நபிமொழி ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
பின்னர் எகிப்து சென்றபின் கிடைத்த புது ஆதாரங்களையும் விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு சட்டங்களைக் கண்டறிந்தார்கள். இதனால், பக்தாத் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டியதாயிற்று. இதனாலேயே, இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடமிருந்து இருவேறு தகவல்கள் சட்டங்களில் காணப்படுவதுண்டு. முந்தியது பழையது (கதீம்) என்றும், பிந்தியது புதியது (ஜதீத்) என்றும் பின்வந்த அறிஞர்களால் இனங்காணப்படுகிறது.
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், நபிமொழிகளில் முத்தவாத்திர், மஷ்ஹூர், அஸீஸ் ஆகியவற்றைக் கவனத்தில்கொள்வார்கள். இதன் அறிவிப்பாளர்கள் பலராக இருப்பதால் இவற்றுக்குப் பலம் அதிகம் என்பதே காரணம். ஓரிருவர் அறிவிப்பில் வந்துள்ள ஹதீஸைவிட, மதீனாவாழ் மக்களின் வழக்கிலிருந்த நடைமுறைக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள்.
இங்கே, சில சிக்கலான பிரச்சினைகளுக்கு தற்கால அறிஞர்கள் வெளியிட்டுள்ள தீர்வுகளும் ஃபத்வாக்களும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். இவற்றை எடுத்துக்காட்டுவது மட்டுமே ஆசிரியரின் நோக்கம் எனத் தெரிகிறது.
ஆக, ஆழமான, விரிவான, அற்புதமான, அவசியமான கருத்துக் கருவூலமாக இந்நூல் அமைந்திருப்பது மனநிறைவைத் தருகிறது. இதை ‘சட்டத்துறை கலைக்களஞ்சியம்’ என்றே தாராளமாகக் குறிப்பிடலாம். அது மிகையன்று.
மார்க்க அறிஞர்கள் ஒவ்வொருவரும் இந்நூலை ஒருமுறையாவது கவனத்தோடு வாசிக்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். அப்போதுதான், ஃபிக்ஹ் சட்டங்களின் நெளிவுசுளிவுகள் புரியும்; அத்துடன் சட்டங்களைச் சொல்வதிலும் செயல்படுத்துவதிலும் ஓர் இங்கிதம், நெகிழ்வு உண்டாக வழி பிறக்கும்; இமாம்களின் தியாகம், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவை நமக்கு வழிகாட்டும். வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் ஏன், பொதுமக்கள் உள்பட அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய அறிவுப் புதையல்தான் இந்தப் புத்தகம்.
நூலாசிரியரும் பெரிய கல்விமானும் பண்புள்ள முனைவரும் எனக்கு மூத்தவராக இருந்தாலும் நல்ல நண்பருமான *முனைவர் மௌலானா மஸ்வூத் ஜமாலி* அவர்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர். அன்னாருக்கு அல்லாஹ் மேன்மேலும் நல்லாற்றல்களை வழங்கி, இதுபோன்ற பல நூல்களை வழங்க அருள் புரிவானாக! இந்நூலால் சமுதாய விழிப்புணர்வு ஏற்பட தவ்ஃபீக் செய்வானாக!
சென்னை-14. *அ. முஹம்மது கான் பாகவி* 10.04.2018
source: http://khanbaqavi.blogspot.com/2018/09/blog-post_10.html