ஹிஜ்ரத் 1440
[ ஒரு ஊரைத் துறந்து வேறு ஒரு ஊருக்கும், ஒரு நாட்டைத் துறந்து வேறு ஒரு நாட்டிற்கும், ஒரு இடத்தைத் துறந்து வேறு ஒரு இடத்திற்கும் சென்று குடியேறுவதற்கு ஹிஜ்ரத் என்று பெயர். ஹிஜ்ரத் என்ற வார்த்தைக்கு குடிபெயர்ந்து செல்லல் என்பது பொருத்தமான பொருள்.]
ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து எண்பத்து ஒன்றாவது தலைமுறையில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததாக சில சரித்திரங்கள் கூறுகின்றன.
ஆயினும் தலைமுறையின் எண்ணிக்கையிலும், தலைமுறையில் உதித்த மூதாதையர்களின் பெயரிலும் ஏகமனதான அபிப்பிராயங்கள் கூறப்படவில்லை. ஆனால், அத்னானிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையிலுள்ள தலைமுறையில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
அத்னானிலிருந்து பதினான்காவது தலைமுறையில் தோன்றியவர் கஃபு என்பவர்.இவர் குறைஷியரில் மிக செல்வாக்குப் பெற்றவர். ஆதலால், இவர் பிறந்த வருடத்திலிருந்து யானைச்சண்டை வரை கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகள் வரை கஃபு சகாப்தம் அதாவது நாள்கணக்கு (ஆண்டுக்கணக்கு) கணிக்கப்பட்டு வந்தது.
ஒரு ஊரைத் துறந்து வேறு ஒரு ஊருக்கும், ஒரு நாட்டைத் துறந்து வேறு ஒரு நாட்டிற்கும், ஒரு இடத்தைத் துறந்து வேறு ஒரு இடத்திற்கும் சென்று குடியேறுவதற்கு ஹிஜ்ரத் என்று பெயர். ஹிஜ்ரத் என்ற வார்த்தைக்கு குடிபெயர்ந்து செல்லல் என்பது பொருத்தமான பொருள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் முஸ்லிம்கள் திருமக்காவை விட்டு மும்முறை குடிபெயர்ந்து சென்றனர்.
முஸ்லிம்களுக்குக் குறைஷியர் செய்த கொடுமைகள் எல்லையை மீறிவிட்டன. இக்கொடுமைகளின் காரணமாக முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அபிசீனியாவிற்குக் குடிபெயர்ந்து சென்றனர். இதனைப் பார்த்தும் கூட குறைஷியர் தங்கள் கொடுமைகளைத் தளர்த்தவில்லை. எனவே இரண்டாம் முறையாக அபிசீனியாவிற் குடியேறினர். இதனைக் கண்டும் அவர்கள் கருணை காட்டவில்லை. ஆதலால் எஞ்சியுள்ளவர்கள் யதுரபு (மதீனாவு) க்கு ச் செல்ல நேரிட்டது.
திருமக்காவுக்கு வெளியே முஸ்லிம்களுக்கு நண்பர்களும் தோழர்களும் ஏற்பட்டிருக்கின்றனர். அங்கு முஸ்லிம்கள் சென்று ஒன்று கூடுகின்றனர். அவர்களுக்கு நாளுக்கு நாள் பலம் கூடிக்கொண்டிருக்கிறது. இவர்களை விட்டு வைத்தால் அதன் எதிரொலி பலமாக இருக்கும். ஆதலால், அவர்கள் சம்பந்தமாக இனி நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து அவர்கள் தங்களுடைய சபையாகிய தாருன்னத்வாவில் கூடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொன்று விடவேண்டும் என்று முடிவு செய்தனர்.
குறைஷியர் தங்கள் ஆலோசனை சபையில் செய்த முடிவை இறைவன் ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அறிவித்து திருமக்காவை விட்டு (மதீனாவுக்கு) யதுரபுக்குச் செல்லுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமக்காவை விட்டு ரபீஉல் அவ்வல் மாதம் முதல் தேதி வியாழக்கிழமை இரவில் புறப்பட்டு பன்னிரண்டாம் தேதி (கி.பி. 28-6-622) திங்கட் கிழமை லுஹர் நேரத்தில் திருமதீனாவிற்குப் பக்கத்திலுள்ள குபா வந்து சேர்ந்தார்கள்.
இதுவரை யானை ஆண்டு கணக்கில் இருந்ததை ஹஜ்ரத் உமர் ஃபாரூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மாற்றி ஹிஜ்ரத் ஆண்டாக கணக்கிட ஆரம்பித்தார்கள். ஹிஜ்ரத் வருடப் பிறப்பு ரபீஉல் அவ்வல் மாதமாக இருந்தது.
இஸ்லாமிய அரசின் கவர்னர்கள் ஹஜ்ஜுக்கு வந்து விட்டு மீண்டும் தங்கள் இருப்பிடம் சென்று திரும்பியும் மதீனாவுக்கு வந்து வரவு செலவு விபரங்களை கலீஃபாவிடம் தாக்கல் செய்து வந்தனர். இது கவர்னர்களுக்கு பெரும் சிரமமாக இருந்ததால் ஹஜ்ஜுச் செய்த பின்னர் வரவு செலவு விபரங்களையும் தாக்கல் செய்து விட்டுச் செல்லட்டும் என்று முஹர்ரம் மாதத்தை ஆண்டின் ஆரம்பமாக மாற்றப்பட்டது.