நன்மை பயக்கும் நபிமொழி – 85
o ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து வெட்கமும், வேதனையும் அடைந்தார். ”நம் கதி என்னவாகுமோ?” என நினைத்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார்.
செய்த தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.
”பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.” (திருக்குர்ஆன் 11:114)
இதைக் கேட்ட அந்த மனிதர் ”எனக்கு மட்டும்தானா?” என வினவினார். ”இல்லை! இது என்னைப் பின்பற்றும் உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்” என நவின்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி, முஸ்லிம்)
========================
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள்.
உங்கள் மத்தியில் இருக்கும் வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, ”நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று அவன் வினவுவான்.
அதற்கவர்கள், ”நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு வந்தோம்” என்பார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)
========================
o (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உரையின் போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கு ஏற்ப புகழ்ந்து விட்டு,
“அல்லாஹ், யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை.
அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை.
செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும்.
வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும்.
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.
புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும்.
ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689)
========================
o அபூமூஸா அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒரு அடியான் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் அவருக்கு, அவர் உடல் ஆரோக்கியத்துடன் ஊரில் இருந்த சமயம் செய்தது போலவே (கூலி) எழுதப்படும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி).
========================
o அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்விடம் தவறுகளை அழிக்கவும், பதவிகளை உயர்த்தவும் காரணமாக உள்ள செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்.
‘சரி! இறைத்தூதர் அவர்களே! என்று நபித்தோழர்கள் கூறினர்.
‘சிரமமான நேரங்களிலும் உளுவை முழுமையாக செய்வது, பள்ளிவாசல்களுக்கு (நடப்பது மூலம்) அதிக காலடிகள் வைப்பது, ஒரு தொழுகை முடிந்து மறு தொழுகைக்காக காத்திருப்பது (ஆகியவையாகும்). இதுதான் இறைவனின் பாதையில் (வழிபாடுகளில்) உள்ளவையாகும்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்)
========================
o (அபூமஸ்ஊத் என்ற) உக்பா இப்னு அம்ரூ அல்அன்சாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நல்லதை ஒருவர் பிறருக்கு அறிவித்துக் கொடுத்தால், அதை செய்தவனின் கூலி போன்றது அவருக்கும் உண்டு” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).
========================
o நீ எவரைப்பற்றிப் புறம் பேசினாயோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று இறைவனிடம் நீ இறைஞ்சுவது புறம் பேசியதற்கான பிராயச்சித்தங்களில் ஒன்றாகும்.
அது, “இறைவா! நீ என்னையும் அவரையும் மன்னித்தாருள்வாயாக!” என்று இறைஞ்சுவதாகும். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: மிஷ்காத்)
========================
o “ஓர் அடியயான் பொய் சொன்னால் அவனுடைய பொய்யின் துர்வாடையினால் மலக்கு அவனை விட்டு ஒரு மைல் தூரம் தூரமாகிவிடுகிறார்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லா ஹிப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
========================
o ”எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
========================
o “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிந்தாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிந்தாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5709)
========================