பொய்யுரைத்து கட்டாய மதமாற்றம்
பன்னாட்டு நிறுவனமான ஆப்கோ (APCO) விற்கு பலகோடிகள் பித்தலாட்டங்களை செய்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய இந்துத்துவம் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமாய் தனது சித்து வேலைகளை அரங்கேற்றி வருகின்றது.
முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் ஆசை வார்த்தைகளை கூறியும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியும் கட்டாய மதமாற்றங்களை நாடு முழுவதும் செய்து வருகின்றது. இந்த மனித தன்மையற்ற செயலின் ஒரு முகமாக கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி
“ஆக்ராவில் 57 குடும்பங்களை சர்ந்த 200 முஸ்லீம் களை அவர்களின் தாய் மதமான இந்து மதத்திற்கு மாறிவிட்டார்கள் என மதமாற்ற விழாவினை நடத்திய இந்து தர்ம ஜாக்ரன் மஞ்ச் மற்றும் பஜ்ரங்கள் ஆகிய அமைப்புகள்தெரிவித்தன.” (Times Of India. 9,12, 2014)
இந்நிலையில் திங்கள் கிழமை ஆக்ராவில் நடைபெற்றதாக கூறப்படும் கூட்டு மதமாற்ற நிகழ்வில் பங்கேற்று ராஜ்குமார் எனப்பெயர் சூட்டி இந்துவாக தன்னை மாற்றிக் கொண்டார் என்று சங்கபரிவார அமைப்புகளால் பரப்புரைச் செய்யப்படும் இஸ்மாயில் சித்திக் என்பவர் கூறுகையில்
‘ரேசன் கார்டுகளை ஏற்பாடுச் செய்து தருவதாக கூறி அவர்கள் எங்களை அழைத்துச் சென்றனர். ஆனால் அது மதமாற்றத்திற்கான சடங்கு என்பது எங்களுக்கு தெரியாது. அவர்கள் எங்களை இந்து மதத்தில் சேர்த்ததாக பின்னர் தாம் அறிந்தோம். ஆனால் நாங்கள் மதம் மாறவில்லை இப்போதும் நாங்கள் முஸ்லீம்கள் தாம் முஸ்லீம்களாகவே தொடர்வோம் என்றார்.”
“வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பட்டியலில் உட்படுத்தி குடும்ப அட்டைககளையும், இதர ஆவணங்களையும் ஏற்பாடு செய்து தருகின்றோம் என வாக்குறுதி அளித்து இரண்டு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சடங்கிற்கு அழைத்துச் சென்றதாக நிகழ்விற்கு சென்ற நூர் முஹம்மது மற்றும் அவரது அண்டை வீட்டுக்காரர் ஜஹாங்கீர் ஆகியோர் தொவித்தனர்”. (Hindusthan Times.9,12, 2014)
பீகார் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து குடியேறி ஆக்ராவின் வேத் நகரின் சேரிப்பகுதியில் வாழும் முஸ்லீம் களைத்தான் மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் ஏமாற்றி மத மாற்ற சடங்கில் பங்கேற்க வைத்துள்ளது. இதன் மூலம் முஸ்லீம்கள் தாங்களாகவே தங்கள் விருப்பபடி இந்து மதத்திற்கு மாறினார்கள் என்ற சங்கப்பரிவாரத்தின் பரப்புரைகள் பசபசத்துப் போனது.
“சிறுபான்மையினர் இங்கே வாழவேண்டுமாயின் அவர்கள் தேசிய இனமான இந்துக்களின் மதம், மொழி மற்றும் கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு இந்த தேசத்தில் எந்த உரிமையும் இல்லை, ஏன் அவர்கள் இந்துஸ்தானின் குடிமக்களாக கூட கருதப்பட மாட்டார்கள்”.
(கோல்வால்கர்; எழுதிய We and our Nationhood defined பக்கம் – 47)
கோல்வால்கரின் இந்த வார்த்தைகளை தான் ஆட்சிக்கு வந்தவுடன் இந்துத்துவ ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
இப்படியான மனிதனின் எண்ணத்திற்கு மதிப்பளிக்காமல், இந்துத்துவத்தின் கட்டாய மதமாற்றத்திலிருந்தும் நாட்டில் நடக்கும் அவலங்களும், அக்கிரமங்களையும் ஒடுக்கி பாசிசத்தின் பிடியிலிருந்து பாரதத்தை பாதுகாக்க வேண்டுமாயின் அது இஸ்லாத்தால் மட்டுமே முடியும்.
ஏனெனில் இஸ்லாத்தின் பென்னம் பெரிய ஆட்சியில்தான் அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழந்தனர்.
இஸ்லாம் என்றைக்கும் அடக்குமுறைகளையும் கட்டாய மதமாற்றத்தையும் ஆளும் பகுதியில் உள்ள மக்களிடம் உட்புகுத்தியதில்லை அப்படி உட்புகுத்தியிருந்தால் முஸ்லீம்களின் 800 ஆண்டு கால ஆட்சியில் என்றோ இந்தியா முஸ்லீம் நாடாக மாறியிருக்கும்.
உலகின் சரிபாதியை இஸ்லாம் ஆண்டபோது கட்டாய மதமாற்றத்தினை செய்திருந்தால் என்றோ உலகின் சரிபாதி இஸ்லாமிய மயமாகிப் போயிருக்கும். ஆனால் முஸ்லீம்கள் அப்படி செய்ததில்லை.
காரணம் அப்படி செய்வதற்கு அவர்களின் இறைவன் அவர்களுக்கு கட்டளையிடவுமில்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று யாரும் எந்த நிலையிலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். விரும்புவோர் ஏற்றுக் கொள்ளலாம், விரும்பாதவர்கள் ஏற்காமல் விட்டு விடலாம்.
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?(10:99.)
இன்னும் இறைவன் கூறுகின்றான்.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(2:256.)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
மதினாவில் யூதமதத்தை தழுவியிருந்த தன் பிள்ளையை முஸ்லிம் பெற்றோர்கள் நாங்கள் யூதர்களிடம் எங்கள் பிள்ளையை விட்டு வைக்க மாட்டோம் அவர்களை நாங்கள் இஸ்லாத்திற்கு மாற்றியே தீருவோம். என்று கூரும்போது தான் இந்த வசனம் அருளப்பெற்றது.
மேலும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
இந்த வசனம் அன்ஸாரிகளில் பனூ சாலிம் பின் அவ்ஃப் எனும் குடும்பத்தை சேர்ந்த ஹுசைனி என்பவர் தொடர்பாக அருளப்பெற்றது. இவர் ஒரு முஸ்லிம். இவருடைய இரண்டு மக்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். எனவே இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்
“மக்கள் கிறிஸ்தவ மதத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர். இஸ்லாத்தில் சேருமாறு நான் அவர்களை கட்டாயப்படுத்தலாமா? எனக் கேட்டார். அப்போது தான் அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான் என்றார்கள்.
இதுபோன்ற வசனங்களை இஸ்லாம் என்றும் ஏட்டோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அது என்றைக்குமே தன்னுடைய வார்த்தைகளை வர்ணனைகளாக வர்ணிக்காமல் அதனை வாழ்வியல் நெறியாக ஏற்று வாழ்பவர்களின் வாழ்வோடு பின்னிப்பினைத்துள்ளது.
அதற்கு ஓர் உதாரணம் தான் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்ற யுவான்னி ரிட்லி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவமாகும்.
யுவான்னி ரிட்லி தான் இஸ்லாத்தை ஏற்றவுடன் தனது பொறுப்பில் இருக்கும் தான் பெற்றெடுத்த மகளை இஸ்லாத்தை ஏற்குமாறு நிர்பந்திக்கவில்லை.
பின்பு அவரின் மகள் இஸ்லாத்தின் ஒப்பற்ற ஒழுங்கு நெறிமுறைகளையும், வனப்பான வாழ்வியல் வழிமுறைகளையும் படித்து பக்குவப்பட்டு இஸ்லாத்தை ஏற்றார்.
அல்ஹமதுலில்லாஹ்.
தனது மகள் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றதே “தனக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி” என்றார்.
ஆக தன் பொறுப்பில் இருக்கும் தான் பெற்றெடுத்த பிள்ளைகளாக இருந்த போதிலும் அவர்களை தன்னுடைய மார்க்கத்திற்கு நிர்ப்பந்திக்க கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
இஸ்லாமியர்களோ இஸ்லாமிய ஆட்சியாளர்களோ என்றைக்கும் யாரையும் கட்டாய மதமாற்றம் செய்ததில்லை. மாறாக தான் ஆட்சி செய்த பகுதியில் வாழும் மக்களோடு இஸ்லாம் பண்பாக நடந்துக் கொண்டது.
அவர்களின் ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவற்றைக் கண்டு கவர்ந்து காலப்போக்கில் இஸ்லாத்தில் தன்னை இணைத்திட வேண்டும் அதன் படி தன் வாழ்வை அமைத்திட வேண்டும். என்று மக்கள் விரும்பினர்.
பாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட இன்றைய ஆட்சியாளரிடம் மதச் சுதந்திரத்தையோ சகிப்புத் தன்மையையோ எதிர்ப்பார்ப்பதற்கில்லை. எனவே இஸ்லாம் இந்தியாவை ஆட்சி செய்தாலொழிய இந்த தேசத்திற்கு விடிவில்லை!
அதற்காக ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைப்போம். பாசிசத்தின் பிடியிலிருந்து பாரதத்தை காப்போம். இன்ஷா அல்லாஹ்.
ஜனவரி 2015 ஆம் ஆண்டு வைகறை வெளிச்சம் மாத இதழில் தலையங்கம்.
– மு குலாம் முஹம்மது ஆசிரியர் ”வைகறை வெளிச்சம்”. நிறுவனர் விடியல் வெள்ளி.
source: https://www.facebook.com/dheva.islam/posts/2108610346055049?__tn__=K-R