தாயின் பாச வலையா, ஈமானா? வென்றது எது?
சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட 10 ஸஹபாப் பெருமக்களில் ஒருவராகவும் திகழக் கூடிய நற்பேற்றைப் பெற்றவராகத் திகழ்ந்த சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொழுது அவர் இளமை ததும்பும் வாலிபப் பருவம் கொண்ட இளைஞர். இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இவரது தாயார் மிகவும் கவலையடைந்தார்.
நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு தன் மகன் சென்று விட்டானே என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார், அழுது புலம்பினார், தன்னுடைய மகனை எப்பாடுபட்டாவது தன்னுடைய பழைய மார்க்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடிதுடியாய்த் துடித்தார்.
அதற்காக வழக்கமாக தாய்மார்கள் கடைபிடிக்கும் அனைத்து வித முயற்சிகளையும் செய்து பார்த்தார். ஆனால் எதிலும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இணங்கிப் போகவில்லை. இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருந்தார்கள்.
இறுதியாக, ”சஅதே..! நீ மீண்டும் நமது முன்னோர்களின் பழைய மார்க்கத்திற்கு வரவில்லை என்று சொன்னால், நான் சாகும் வரை உண்ண மாட்டேன், பருக மாட்டேன்..! என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சபதமிட்டார். இறுதியாக..! என்னுடைய மகனை ஒரு முஸ்லிமாகப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் செத்து மடிவதே மேல்” என்றார் அவரது தாயார்.
தாயினுடைய இந்த தந்திரங்களுக்கெல்லாம், சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மசிந்து இடங்கொடுத்து, விட்டுக் கொடுத்துப் போகவில்லை, உணர்ச்சிகளுக்கு அடிமையாகவில்லை. அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்த அந்த இஸ்லாமிய வேர், இறைநம்பிக்கை என்னும் மரமாக வளர்ந்திருந்ததன் காரணமாக, எத்தகைய புயல் காற்றும் கூட.., அவரது பாதத்தின் உறுதியைப் பெயர்த்து, அந்த மரத்தை அசைக்கக் கூட யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது சாகும் வரை உண்ண, பருக மாட்டேன் என்ற சபதமெடுத்த சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது தாயார் பசிக் கொடுமையின் காரணமாக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார்.
தனது தயாரைப் பார்த்து, தனது இறைநம்பிக்கையின் உறுதியை இவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார்:
“என்னுடைய தாயாரே! உங்களுக்கு ஒரு நூறு உயிர்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு உயிராக உங்களிடம் பறிக்கப்பட்டுப் போய்க் கொண்டிருந்தாலும், நான் என்னுடைய இறைநம்பிக்கையிலிருந்து, நான் கொண்டிருக்கும் ஈமானின் வேகத்தில் ஒன்றையேனும் நான் இழக்கத் தயாராக இல்லை, நான் எனது இறை மார்க்கத்தை விட்டு விட்டு, உங்களது உயிரைப் பாதுகாக்க நான் முன்வரப் போவதில்லை, எனவே இந்த உங்களது தந்திரங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது தாயார் அவர்களே! நீங்கள் உண்ணுவதும் அல்லது உண்ணாமல் இருப்பதும், இன்னும் பருகுவதும் பருகாமல் இருப்பதும் உங்களது விருப்பம். நான் என்னுடைய இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களை விட்டும் நான் வர மாட்டேன்” என்று கூறி விட்டார்.
நம்முடைய தந்திரங்கள் எதுவும் பலனிளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்தத் தாய், தன்னுடைய உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். அவரது இந்தத் துணிவும் உறுதியும் இன்றைக்கும் நமக்கொரு சிறந்த பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
இதனைப் பற்றி இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் : “ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள் (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”(31:15)