இறைநேசர் உவைசுல் கர்னீ ரளியல்லாஹு அன்ஹு
பு. முஹம்மது காசீம், பெரம்பலூர்
நமது அண்ணலெம் பெருமான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் மதீனாவின் பள்ளி வாயிலில் அமர்ந்து மக்களுக்கு அறிவுரை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் தங்களின் முகத்தை எமன் நாட்டின் பக்கத்தில் திருப்பி புன்முறுவல் பூத்தவர்களாய் “திட்டமாக நான் எமன் நாட்டிலிருந்து வரும் அழகிய அன்புத்தென்றலின் மென்சுகத்தை நுகர்கின்றேன்” என்று மொழிந்தனர்.
அதன் பின்பு அவர்கள் “என்னைப் பின் தொடரும் ஒரு மனிதரின் பரிந்துரை காரணமாக ரபீஆ, முலறு ஆகிய இரு கூட்டத்தினரின் ஆடுகளின் மீதுள்ள உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள மக்கள் சுவனம் புகுவர்” என்று திருவாய் மலர்ந்தனர்.
அண்ணலாரின் இச்சொற்கள் அவர்களின் தோழர்களுக்கு அளவற்ற வியப்பை அளித்தது. “நாயகமே! அந்நல்லார் யார்? நலமெல்லாம் திரண்ட அந்தப் புனிதர் யார்?” என்று அவர்கள் பெரிதும் ஆவலுடன் வினவினார்கள்.
அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவர் அல்லாஹ்வின் நல்லடியார். எமன் நாட்டிலுள்ள “கரன்” என்னும் ஊரில் வாழ்ந்து வருகிறார்” என்று பதிலிறுத்தனர்.
“அவர் தங்களை வந்து தரிசித்துள்ளாரா?” என்று தோழர்கள் வினவ,
“இல்லை. அவர் என்னைத் தன் புறக்கண்ணால் தரிசிக்காத போதிலும், அகக்கண்ணால் தரிசித்துள்ளார்” என்று மறுமொழி பகர்ந்தனர் அண்ணல் அவர்கள்.
அப்போது அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புத் தோழர்கள் அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி, “அவர் ஏன் தங்களை தரிசிக்க வரவில்லை?” என்று வினவினார்கள்.
அதற்கு அண்ணலார் ‘அவர் இறைவணக்கத்தில் தம்மை மறந்து, தம் சுற்றம் மறந்து, தம் சூழல் மறந்து மூழ்கி இருப்பதன் காரணமாகவும், என்னுடைய வழிமுறையை (இரீஅத்தை) பேணுதலுடன் பின்பற்றி வருவதன் காரணமாகவும் அவர் என்னை தரிசிக்க வரவில்லை. அவரின் வயோதிக கண்ணிழந்த அன்னைக்கு பணிவிடை செய்தபின் ஆடு மேய்த்து அதிலிருந்து கிடைக்கும் சிறிதளவு வருவாயைக் கொண்டு அவர் தம் அன்னைக்கு உணவளித்து வருகிறார்’ என்று கூறினார்கள்.
அதன்பின் தோழர்கள் அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி “அவரை காணும் பேறு எங்களுக்குக் கிடைக்குமா?” என்று வினவினார்கள்.
‘கிடைக்காது’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமொழி பகர “அபூபக்கருக்கு?” என்று அடுத்த வினா எழுப்பினர் தோழர்கள். “அவருக்கும் கிடைக்காது” என்று திடமாக விடைபகர்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”எனினும் உங்களில் உமரும், அலியும் அவரைக் காண்பார்கள்.”
அவரின் உடலெல்லாம் உரோமம் முளைத்திருக்கும், அவரின் வலது முன் கையிலும், இடது விலாவிலும், மருக்கள் காணப்பெறும். நடுத்தர உயரமுள்ள அவர் கம்பளி உடை அணிந்திருப்பார். எப்பொழுதும் அழுது கொண்டிருப்பதன் காரணமாக அவருடைய கண்கள் கலங்கி இருக்கும். மண்ணகத்தோர் அவரை அறியார். எனினும் விண்ணகத்தோர் அவரை நன்கு அறிந்துள்ளார்கள்.
அவருடைய இறைஞ்சுதல் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் பேறு பெற்றது. மறுமையில் நல்லடியார்களைப் பார்த்து “சுவனம்செல்க” என்று கூறப்படும் பொழுது அவரை நோக்கி, “நீர் இங்குதங்கிப் பாவிகளுக்காகப் பரிந்துரையும்” என்று கூறப்படும். அதன் காரணமாக ரபிஆ, முலறு ஆகிய இரு கூட்டத்தினரின் ஆடுகளின் மீதுள்ள உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள மக்கள்சுவனம் புகுவர்.
இவ்வாறு கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன்பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும், அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் நோக்கி, நீங்கள் இருவரும் அவரைச் சந்திக்குங்கால் என்னுடைய சலாத்தை அவருக்கு தெரிவித்து, என்னுடைய மேலங்கியை அவருக்கு அன்பளிப்பாய் வழங்கி, என்னைப் பின்பற்றியவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுமாறு அவரிடம் கேளுங்கள்.
”அவர் இறைநேசர்களில் மேலானவர். நன்மையைப் பின்பற்றுபவர்களில் சிறந்தவர். (உவைஸ் கர்னீபி இஹ்ஸான்)” என்று சொன்னார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
ஆண்டுகள் நகர்ந்தன. உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு எப்போது நிறைவேறுமோ? உவைசுல் கர்னீ என்னும் நல்லாரை என்று காண்போமோ! என்று ஏங்கிக் கொண்டிருந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்த கரன் வாசிகளைச் சந்தித்து உவைசுல் கரனீ அவர்களின் இருப்பிடம், அவரின் செயல்பாடுகள் குறித்து விவரமாக கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
ஹஜ்ஜுக் கடமைகளை எல்லாம் செவ்வனே நிறைவேற்றிவிட்டு அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு அவர்கள் எமன் நாட்டை அடைந்து கரன் என்னும் சிற்றூரை அடைந்தார்கள்.
அவ்விருவரும் அதன் அருகிலிருந்த ஓடைக்குச் சென்றார்கள். அங்கு தம் ஒட்டகங்களை மேய விட்டு விட்டு ஒரு மர நிழலில் கம்பளி உடை அணிந்த ஒருவர் அமைதியாக நின்று தொழுது கொண்டிருந்ததைக் கண்டார்கள். கண்டதும் இவர் தாம் உவைஸுல் கர்னீயாக இருப்பாரோ என்ற எண்ணம் மேலிட ஒட்டைகைகளிலிருந்து கீழே இறங்கி அவரை நோக்கிச் சென்றனர்.
எவரோ தன் அருகில் நடமாடுவதை உணர்ந்த அப்பெரியார் தொழுகையை முடித்துக் கொண்டு ஸலாம் உரைத்து.
“தாங்கள் யார்?” என்று வினவினார். அப்பொழுது அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் சுட்டிக் காட்டி “இவர்கள் அமீருல் மூமீனீன் உமர் இப்னு கத்தாப் ஆவர். நான் அலி இப்னு அபூதாலிப் ஆவேன்” என்று மறுமொழி பகர்ந்தனர்.
அதைக் கேட்டதும் அவ்விருவருக்கும் மரியாதை செய்யும் பொருட்டு எழுந்து நின்ற அப்பெரியார் “இறைவன் தங்களுக்குப் பேரருள் பாலிப்பானாக” என்று கூறி அவர்களை வாழ்த்தினார். அப்பொழுது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பெரியாரைநோக்கி, “தாங்கள் யார்? தங்களின் பெயர்யாது?” என்று கேட்டார்கள்.
”உவைஸ்”
உவைஸ் என்ற பெயரைச் செவியுற்றதும் அவர்களின் உடலெல்லாம் இனித்தது, உள்ளமெல்லாம் இனித்தது, அவரகள் சற்று நேரம் இன்ப வாருதியில் மூழ்கித் திளைத்தார்கள்.
அதன்பின் அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அடையாளங்கள் அவர்களின் உடலிலே காணப்படுகிறதா என்பதை அறிய “நல்லது, தங்களின் வலதுமுன் கையை நீட்டுங்கள், பார்ப்போம்” என்று அவர்கள் இருவரும் கேட்டார்கள்.
அவர்கள் அவ்வாறே நீட்ட அதனை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தூண்டித் துருவிப் பார்த்தார்கள்.
ஆ! என்ன வியப்பு! அதிலே அண்ணல் அவர்கள் கூறிய அடையாளம் அப்படியே காணப்பட்டது. அவ்வளவுதான். அம்மலர்க்கரத்தை அவர்கள் தம் மலர் விழிகளிலே ஒற்றி ஒற்றி மகிழ்ச்சிக் கண்ணீர் உகுத்தார்கள்.
உகுத்து, உகுத்து அவர்களின் கரத்தில் தங்களின்கண்ணீரைக் காணிக்கையாக வைத்தார்கள். இதன்பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீண்டும் பேச்சைத் துவங்கினார்கள்.
“பெரியவரே! அண்ணல் பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுக்கு அவர்களின் சலாத்தை தெரிவிக்குமாறு பணித்தார்கள். எனவே முதற்கண் அவர்களின் சலாத்தை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டாவதாக அவர்கள் தங்களின் மேலங்கியைத் தங்களுக்கு அன்பளிப்பாக நல்குமாறு வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதோ அவ்வங்கி உள்ளது. அதனைப் பெற்று மகிழுங்கள். மூன்றாவதாக முஸ்லிம்களுக்காக தாங்கள் இறைவனிடம் இறைஞ்ச வேண்டுமென்று கூறியுள்ளார்கள்”. இவ்வாறு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பேசினார்கள்.
இப்பொழுது உவைஸுல் கரனீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, “அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இட்ட அருட்பணியை நிறைவேற்றுவது என் தலையாயக் கடமை. அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கிய அவர்களின் சீராரும் மேலங்கியைத் தாருங்கள். நான் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்” என்று கூறி எழுந்து சற்று தொலைவு தூரம் சென்றார்கள். அங்கு ஓரிடத்தில் தலையைத் தரையிலே வைத்து முஸ்லிம்கள் அனைவருக்காகவும் இறைவனிடம் மன்றாடினார்கள்.
“தாங்கள் அண்ணலெம் பெருமானின் அன்புத் தோழர்கள் தாமே! அண்ணலெம் பெருமானுக்கு உஹத் போர்க்களத்தில் வைத்து பல் முறிந்து (இஹீதாகி) விழுந்த பொழுது, தாங்கள் அவர்களின் உண்மையான தோழர்களாயிருப்பின் தாங்களும் ஏன் அதுபோன்று தங்களின் பல்லை விழச் செய்யவில்லை.
நட்பு என்றால் அஃதன்றோ உண்மையான நட்பு! என்னைப்பாருங்கள்! நான் என் பற்கள் அனைத்தையும் பிடுங்கி விட்டேன். நான் ஒரு பல்லைப் பிடுங்க, அது எம்பெருமானுக்கு வீழ்ந்த பல்லாக இல்லாதிருக்குமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட, அடுத்த ஒரு பல்லை நான் பிடுங்க, அதேபோன்ற ஐயம் எனக்கு மீண்டும் முளையிட, அவ்வாறு நான் என் பற்கள் அனைத்தையும் பிடுங்கி விட்டேன்” என்று கூறித் தம் பொக்கைவாய் திறந்து புன்னகை பூத்தனர் அப்பெரியார்.
அது கண்டு நபித் தோழர்கள் இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். உண்மையான முஹப்பத்தின் அர்த்தத்தையும், உண்மையான முஹம்மதின் தாற்பரியத்தையும் உவைஸ் கர்னீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சிறப்பான வாழ்விலிருந்து நாம் அறிந்து கொண்டோம். அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புப்படி உவைஸ்கரனீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சியுள்ள காரணத்தால் ரபீஆ, முலறு ஆகிய இரு கூட்டத்தினரின் ஆடுகளின் மீதுள்ள உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள மக்கள் சுவனம்புகுவர் என்பது திண்ணம். அந்த நல்லடியார்களின் கூட்டத்தில் ஹக்கு சுப்ஹானஹு தஆலா நம் அனைவரையும் சேர்த்து பேரருள் புரிவானாக ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
– பு. முஹம்மது காசீம், பெரம்பலூர்