பாஜக எழுச்சியால் இலக்கு வைக்கப்படும் இந்திய முஸ்லிம்கள்
ஃபாரா நக்வி, பிபிசிக்காக
[ செழுமையான சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்பவர்கள் இந்தியாவின் கடந்தகால வரலாற்றில் சின்னம் மட்டுமல்ல, ஜனநாயக எதிர்காலத்திற்கும் இன்றியமையாதவர்கள். இதனை புரிந்துக் கொண்டால்தான், இந்தியாவில் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் மெளனத்தை தகர்க்க முடியும்.]
உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றே என இஸ்லாம் கூறுகிறது. அதாவது இஸ்லாமை கடைபிடிக்கும் அனைவரும் ஒன்றே, சமமானவர்களே என்று இஸ்லாமிய மதம் கூறினாலும், இந்திய இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்திருக்கின்றனர். இது இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளை மறுப்பதாக இருக்கிறது.
இந்தியாவில் சுன்னி, ஷியா, சுஃபி, போஹ்ரா, அகமதியா என பல பிரிவுகளாக இஸ்லாம் பிரிந்து கிடக்கிறது.
இந்து மதத்தினரைப் போலவே இஸ்லாமியர்களும் சாதிகளின் அடிப்படையில் பிளவுண்டு இருப்பது நிதர்சனமான உண்மை என்றாலும், இஸ்லாமிய மத குருமார்கள் அதனை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்திய முஸ்லிம்களில் உயர் சாதியினர் அஷ்ராஃப் என்றும், நடுத்தர சாதியினர் அஜ்லாஃப் என்றும், பிற சாதியினர் அர்ஜால் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பரந்து விரிந்த இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள், வாழும் இடங்களின் அடிப்படையிலும் (மாநிலங்கள் மற்றும் புவியியல் ரீதியாக) பிரிந்துள்ளனர். தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் தமிழ் பேசினால், கேரளாவில் வசிக்கும் இஸ்லாமியர் மலையாளம் பேசுவார். வட இந்தியா முதல் ஹைதராபாத் வரையிலான பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களில் பெரும்பாலனவர்கள் உருது மொழி பேசுகின்றனர்.
இதைத்தவிர, தெலுங்கு, போஜ்புரி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி என வசிக்கும் மாநிலத்தின் மொழிகளையும் பேசுகிறார்கள்.
அவர்கள் வாழும் இடத்துக்கு ஏற்றவாறு கலாசாரம் மற்றும் உணவு பழக்கவழக்கங்களும் மாறுபடுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் வசிப்பவர்கள் பிற பெங்காலிகளைப்போல மீன் விரும்பி உண்பவர்களாக இருப்பதைப் போல நாட்டின் பல்வேறு பாகங்களில் வசிக்கும் முஸ்லிம்களின் விருப்பங்களும், தெரிவுகளும் மாறுபடுகின்றன. பிற மாநிலங்களில் வசிக்கும் தங்கள் மதத்தினரைவிட, தங்கள் பகுதியில் வசிப்பவர்களுடன் அவர்கள் ஆழமான உறவு கொண்டுள்ளனர் என்றே சொல்லலாம்.
உருவாகியபோதே இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு நேர்மாறாக ஜனநாயக நாடான இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் பெருமையுடன் வாழ்கின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எல்லா மதத்தினரும் சம உரிமை பெற்றவர்களே.
ஆனால் தற்போது நிலைமை மாறிவருகிறது. இந்த செல்ஃபி யுகத்தில், தோற்றங்களே நிதர்சனத்தை முடிவு செய்கிறது, அதற்கான விலையும் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் தனித்துவமான பன்முகத்தன்மையை அடியோடு மாற்றிவிட்டு, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு இருக்கும் பிம்பத்தை கட்டமைக்கும் விதத்தில் தங்களை மாற்றிக்கொண்டு புகைப்படங்களை பதிவிடுகின்றனர்.
அங்கி, தாடி, தொப்பி, தொழுகை, மதரஸாக்கள், ஜிகாத் என இஸ்லாமிய அடையாளங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். பார்த்தவுடனே முஸ்லிம் என்று தோன்றுமாறு தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாறிவரும் சூழ்நிலையானது, சில குறிப்பிட்ட கருத்துக்களை வலியுறுத்தி ஒப்பீட்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் வேலையை சுலபமாக்கிவிடுகிறது.
உலகம் முழுவதுமே, தீவிர, தேசியவாத, வலதுசாரி இயக்கங்களுக்கு இரண்டாவது அணி ஒன்று தேவைப்படுகிறது. அது எதற்காக? மக்கள் கூட்டத்தை கூட்டவும், அவர்களை தூண்டிவிட்டு தங்கள் வசம் ஈர்க்கவும் அப்படி ஒரு எதிரணி தேவைப்படுகிறது. வரலாற்று ரீதியாக யூதர்கள், கருப்பினத்தவர்கள் மற்றும் குடியேறிகள் இப்படி இரண்டாவது அணியாக சுட்டிக்காட்டப்பட்டு, இலக்கு வைக்கப்பட்டனர்.
பாரபட்சமான அணுகுமுறை
ஆனால், இந்தியாவில் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி எழுச்சியடைந்ததன் விளைவாக முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு, இலக்கு வைக்கப்படுகின்றனர்.
இந்த வெறுப்புணர்வின் ஆணிவேர் தோன்றியதும் இந்தியாவில்தான். நமது காலனித்துவ வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வு, இப்போது பரிணாம வளர்ச்சி கண்டு, உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அச்சத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிட்டது.
இந்தியாவில் இது தேசியவாதத்தின் பெயரில் அரசியல் விவகாரமாக உருவெடுத்திருக்கிறது. இந்த நவீன யுகத்தின் யுத்தம், இதற்கான முழக்கத்தை முன்னெடுத்து, டிவிட்டரில் முழங்குகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ஆனால், இந்திய இஸ்லாமியர்களுக்கான பிரச்சனை 2014 தேர்தலுக்கு பிறகுதான் தொடங்கியதா? இல்லை, உண்மையில் அதற்கு பல காலம் முன்பே தொடங்கிவிட்டது. வளர்ச்சியை முன்னோக்கிய இந்திய அரசியலமைப்பு கொடுத்த பிரகாசமான வாக்குறுதிகள் நீண்டகாலத்திற்கு முன்பே வீழ்ச்சியடைய தொடங்கிவிட்டன.
சாதி-மத பிரிவினைகள் சமூகத்தில் வெளிப்படையாக தெரியத் தொடங்கின. உண்மை என்னவென்றால், இவை ஏற்கனவே நமது சமூகத்தின் மரபணுக்களின் (டி.என்.ஏ) ஒரு பகுதிதான். முந்தைய ஆட்சிக்காலத்தில், குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமியர்கள் மென்மையாக, கருணையுடன் அணுகப்பட்டாலும், அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
முந்தைய அரசுகளும் இஸ்லாமியர்களிடம் பாகுபாடு காட்டின. அரசியல் கட்சிகளும் அரசாங்கங்களும் சமத்துவம், நீதி, வளர்ச்சி என்ற பெயரில் முஸ்லிம்களின் வாக்குகளை கோரவில்லை. அவர்களது மத அடையாளத்தை பாதுகாப்பது என்ற உணர்வுபூர்வமான விஷயத்தை முன் வைத்துத்தான் வாக்குவங்கி அரசியலை நடத்தின.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த காலகட்டத்தில், முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சி முடங்கியது. பயிற்சி, வேலை, சுகாதாரம், நவீனத்துவம் போன்ற விஷயங்களில் தேசிய நீரோட்டத்தில் இருந்து முஸ்லிம்கள் பின்தங்கிவிட்டனர்.
2006 ஆம் ஆண்டு சச்சார் கமிட்டியின் அறிக்கையில்தான் முஸ்லிம்களின் நிலை குறித்த எச்சரிக்கை முதன்முறையாக உரத்த குரலில் விடுக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியானதற்கு பிறகு இஸ்லாமியர்கள் பின் தங்கியிருப்பதைப் பற்றிய விவாதங்கள் சூடுபிடித்தன. நிலைமையின் தீவிரம் புரிந்தது.
கல்வியில் நீண்ட இடைவெளி
2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இஸ்லாமிய சமூகத்தினரின் கல்வியறிவு 59.1 சதவிகிதம். இது இந்தியாவின் பிற சமூகத்தினரைவிட மிகவும் குறைவானது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 68.5% ஆக உயர்ந்தாலும், இந்தியாவின் பிற சமூகத்தினருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதே. 6-14 வயதுக்கு உட்பட்ட இஸ்லாமிய குழந்தைகளில் 25 % பள்ளிக்கு சென்றதே இல்லை, அல்லது தொடக்கத்திலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார்கள். நாட்டின் புகழ்பெற்ற கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கு சேர்பவர்களில் இஸ்லாமியர்கள் வெறும் 2 சதவிகிதத்தினர் மட்டுமே.
முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதும் குறைவு என்பதும், அவர்களின் சராசரி தனி நபர் செலவினமும் தேசிய சராசரியில் மிகவும் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு உயர் பதவிகளில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு ஏறக்குறைய இல்லை என்றே சொல்லிவிடலாம். இந்தியாவின் மக்கள் தொகையில் 13.4 % என்ற அளவில் இருக்கும் இஸ்லாமியர்களில் 3 % மட்டுமே நிர்வாகப் பணிகளில் இருக்கின்றனர். வெளியுறவுத் துறை (வெளிநாட்டு) சேவையில் 1.8% மற்றும் போலிஸ் துறையில் 4% என்ற அளவில்தான் முஸ்லிம்களின் பங்கு இருக்கிறது.
சச்சார் கமிட்டி அறிக்கைக்கு பிறகு, பல்வேறு அரசியல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவை போதுமான பலன்களை வழங்கவில்லை. சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் எந்த அளவு செயல்படுத்தப்பட்டது என்றும் முஸ்லிம்களின் நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2013ஆம் ஆண்டில் பேராசிரியர் அமிதாப் குண்டு தலைமையிலான கமிட்டி ஒன்றை ஏற்படுத்தியது.
முன்னேற்றத்தின் அளவை மதிப்பிட அமைக்கப்பட்ட குண்டு கமிட்டியின் (Kundu committee) அறிக்கையோ, நிலைமை சற்றும் மேம்படவில்லை என்ற வருத்தமான தகவலையே வழங்கியது. நாட்டின் சராசரி வறுமை நிலையைவிட, இஸ்லாமியர்களின் வறுமை நிலை அதிகமாகவே இருந்தது. முஸ்லிம் சமுதாயத்தினரின் வருமானம், செலவு மற்றும் நுகர்வு, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு முந்தைய இடத்தில், பட்டியலில் கீழிருந்து மேலாக மூன்றாவது இடத்தில் இருந்தது. 2014 பொதுத் தேர்தலுக்கு முன்னரே வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் அதிகரித்தன.
அரசுப்பணிகளில் மத அடிப்படையிலான புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கு மோதி தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்டது. எனவே, அரசுப் பணிகளில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை கணிக்க முடியாது. ஆனால், அரசாங்க வேலைகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை நான்கு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்காது என்று குண்டு கமிட்டி குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து குண்டு கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டது எதிர்காலத்தில் உண்மையானது. தனது அறிக்கையின் இறுதியில் குண்டு கமிட்டி இவ்வாறு கூறியிருந்தது, “சிறுபான்மை இஸ்லாமியர்களின் வளர்ச்சியானது அவர்களின் பாதுகாப்பின் அடிப்படையில் இருக்கவேண்டும். செயற்கை துருவ முனைவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தேசிய அரசியல் உறுதிமொழிகளை அமல்படுத்தி அவர்களுக்கு நாம் நம்பிக்கை அளிக்கவேண்டும்”. இந்த கணிப்பு உண்மை என்று நிரூபணமானது.
2014ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்போது, நாட்டின் சூழ்நிலையும் முழுமையாக மாறியது. இன்று முஸ்லிம்களைப் பற்றிய விவாதங்களில், அவர்களின் பிள்ளைகள் பாதியில் படிப்பை நிறுத்துவதோ, அவர்களின் வருமானம் குறைவது பற்றியோ பேசப்படுவதில்லை.
மாறாக அவர்களின் உயிரையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பது அவர்களுக்கு நீதி தேவை என்று பேசும் நிலையே நீடிக்கிறது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்ச்சியால் அவர்களுக்கு எதிரான பல குற்றச் சம்பவங்கள் வெளியாகின.
முஸ்லிம்களை அடித்துக் கொல்வது, பிறகு அந்த சம்பவத்தை காணொளி காட்சியாக பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்து, இந்த வெட்கக்கேட்டை வெற்றியாக கொண்டாடும் சம்பவங்கள் நடந்தேறின. முஸ்லிம்கள் என்பதாலும் அல்லது முஸ்லிம்கள் போன்று இருந்ததாலும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மக்கள் தாக்கப்பட்டனர்.
மாட்டுக்கறி வாங்கிச் செல்வதாக எவர் மீதாவது சந்தேகம் எழுந்தால் அவர் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. இது கும்பலின் நியதி, சட்டத்தின் விதிமுறை அல்ல.
அதேபோல் மாட்டுச் சந்தைகளில் இருந்த சட்டப்பூர்வமாக மாடுகளை வாங்கிச் செல்பவர்களும் தாக்கப்பட்டனர். வேளாண்மையை முதன்மைத் தொழிலாக கொண்ட இந்தியாவில் விலங்குகள் வியாபாரம் என்பது மிகவும் முக்கியமானது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
ஆரம்பத்தில் காவல் துறையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம் சாட்டி, பசு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், (இந்தியாவின் 29 இல் 24 மாநிலங்களில் இதுபோன்ற சட்டம் இருக்கிறது) வழக்கு பதிவு செய்தது. பொதுவாக போலிசிடம் இதற்கான ஆதாரமாக இருப்பது கும்பல்களின் கூக்குரல் மட்டுமே.
பிறகு அழுத்தம் அதிகரித்தபோது, வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும் போலிசார் சந்தேக நபர்களுக்கு எதிராக தயக்கத்துடனே வழக்கு பதிவு செய்தனர். வெறுப்புணர்ச்சியால் தூண்டப்பட்டு நடைபெறும் வன்முறையால் இறப்போ அல்லது பாதிப்போ ஏற்பட்டால், வழக்கு பதிவு செய்வதில் போலிசார் அசிரத்தை காட்டினார்கள்.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை என்பது புதிதல்ல. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை இயல்பானதாக எடுத்துக் கொள்வதும், அரசின் முழுமையான மெளனமும் புதிதாக இருக்கிறது. முன்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இதுபோன்ற நிகழ்வுகள் இன்று தினசரி வாடிக்கையாகிவிட்டது.
வெறுப்புணர்வு
இந்து பெண்களை மயக்கி அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி பின்னர் அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கும் சர்வதேச சூழ்ச்சிகளில் தற்போது இந்திய முஸ்லிம் இளைஞர்களும் சேர்ந்துவிட்டது போன்ற எண்ணம் மக்களிடையே உருவாக்கப்படுகிறது. இதனை ‘காதல் ஜிகாத்’ என்று வலதுசாரி இந்து பிரசாரகர்கள் அழைக்கின்றனர்.
இதுபோன்ற இயக்கங்களை சேர்ந்தவர்கள், பொது இடங்களிலேயே வெளிப்படையாக இளம் ஜோடியினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இஸ்லாமிய இளைஞர்களை திருமணம் செய்த இந்து பெண்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, அவர்களை ‘ஜிகாதி தொழிற்சாலைகள்’ என்றும், அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்களும், அமைச்சர்களும் வெறுப்பு நிறைந்த அறிக்கைகளை வெளியிடுவது சாதாரணமாகிவிட்டது. இப்படி பேசுவது அதிர்ச்சியையோ வியப்பையோ தற்போது ஏற்படுத்துவதில்லை. இஸ்லாமியர்கள், அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டு, இந்துக்களிடம் இருந்து இந்தியாவை பறிக்கத் திட்டமிடுவதாக ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார். முஸ்லிம் குடும்பங்களில் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும் என்று அவர் கோருகிறார்.
மற்றொரு மத்திய அமைச்சரோ ஒரு படி மேலே போய் வார்த்தை ஜாலங்களால் இஸ்லாமியர்களை தாக்கினார். ஹிந்தி மொழியில் சொன்ன அந்த தாக்குதல்களின் பொருள் இதுதான். “வாக்காளர்களிடம் இரண்டு தெரிவுகள் உள்ளன. இந்துக்களின் கடவுளான ராமனின் குழந்தையாக இருக்க வேண்டுமா அல்லது முறையற்றவர்களின் குழந்தையாக (முஸ்லிம்களின்) இருக்க வேண்டுமா?”.
இது போன்ற வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களுக்கு எதிரான சட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வழிமுறைகளும் திறந்து விடப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றன. பாடப்புத்தகங்கள் திருத்தி எழுதப்படுகின்றன. சாலைகளின் பெயர்கள் மாற்றப்படுகின்றன, வரலாறோ வெளிப்படையாக திரிக்கப்படுகிறது. நாட்டை ஆண்ட அரசர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை தீர்மானிப்பதற்கான அளவுகோள் அவர்கள் இந்துவா அல்லது இஸ்லாமியரா என்று மாறிவிட்டது.
முஸ்லிம்கள் வேலை கேட்டாலும், நீதி கேட்டாலும், பல்லடுக்கு அங்காடிகளுக்குச் சென்றாலும், ரயிலில் பயணித்தாலும், இணையதளத்தில் கருத்துகள் பதிவிட்டாலும், ஜீன்ஸ் போட்டாலும், அது கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவர்கள் ஜனநாயக உரிமைகளை கோருவதும் அவர்களுக்கே ஆபத்தாகலாம். அவர்கள் சமூக ஊடகங்களில் சீண்டப்படலாம் (ட்ரோலிங்), கும்பல் வன்முறைக்கு ஆளாக்கப்படலாம்.
இவை அனைத்திற்கும் காரணம் என்ன?
இதை தூண்டுவது எது? இந்திய சமூகத்தில் ஏற்பட்டுவரும் சீரற்ற வளர்ச்சியே இதற்கு காரணம் என்று கூறலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களின் வசம் நாட்டின் 58 சதவிகித சொத்துகள் உள்ளன. (Oxfam International’s global inequality report 2018). இத்தகைய சூழ்நிலையில் சமூக நல்லிணக்கம் எப்படி ஏற்படும்?
இந்தியாவில் இன்று மூன்று கோடிக்கு அதிகமானவர்கள் வேலை தேடிக் கொண்டிருக்கின்றனர் (Centre for Monitoring Indian Economy). 2
018 மே மாதம் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, புதிய பட்டதாரிகளின் மற்றொரு குழுவும் வேலைவாய்ப்புச் சந்தையில் களம் இறங்கும் போது மற்றொரு அதிர்ச்சி ஏற்படும். இதுபோன்ற மோசமான நிலையில் பொருளாதார வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மற்றவர்கள் மீது வெறுப்பு கொண்டு அவர்களை தாக்குவதில் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
அதுவும் தேசநலனுக்காக என்று சொல்லப்படும்போது, அது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. அதிலும், இந்தியாவை பிரித்தவர்கள் என்றும், தற்போது இந்தியாவின் மாபெரும் எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ‘ஜிகாதி முஸ்லிம்கள்’ இலக்காக இருந்தால், கேட்கவே வேண்டாம்!
அதிலும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தாக்குதல்காரர்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் இந்த உணர்வு மேலும் நன்றாகவே இருக்கும். “இந்தியாவின் மீது முதல் உரிமை இந்துக்களுக்குத்தான், இந்துக்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இந்துக்கள் முன் தலை குனிந்து, அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றவேண்டும்” என்ற இந்துத்வா கொள்கை இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கிறது.
இந்திய இஸ்லாமியர்களின் வாக்குகளின் முக்கியத்துவம் முடிவுக்கு வந்தது அவர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாகும். 2014 தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்கூட இல்லாத நிலையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. ஒரு முஸ்லிம் எம்.பி கூட இல்லாமல் ஒரு கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த நிகழ்வு இந்தியாவில் முதல் முறையாக நடந்தேறியது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் 4% முஸ்லிம்கள்தான் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் தொகையில் 14.2 சதவிகிதத்தை கொண்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான பிரதிநிதித்துவம். இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் 19.2 % இஸ்லாமியர்கள் இருந்த நிலையில், 2017 சட்டமன்றத் தேர்தலில் ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக்கூட நிறுத்தாமலேயே பா.ஜ.க. சுலபமாக வெற்றி பெற்றது.
ஆனால் காவி உடை தரித்த யோகி ஆதித்தியநாத்தை மாநில முதலமைச்சராக தேர்வு செய்தது வெந்த புண்ணில் உப்பை தூவும் முயற்சியாக இருந்தது. யோகி ஆதித்தியநாத் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. மக்களிடையே மத-இன ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டுகிறார் (இ.பி.கோ. 153 ஏ) என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இருக்கும் நிலையில் அவர் முதலமைச்சரானார்.
அதிகார பகிர்வு, சுதந்திரமான நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி மற்றும் நடுநிலை ஊடகங்களின் அமைப்பு இல்லாமல், பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படும் ஜனநாயக அமைப்பில் சிறுபான்மையினரின் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகள் பெரும்பான்மை சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்.
இன்றும்கூட, இந்திய அரசியலமைப்பு இந்த நாட்டிலுள்ள குடிமக்களின் மிகப்பெரிய பாதுகாப்பாக திகழ்கிறது. ஆனால், தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் ஒரு சட்டம், மதச்சார்பற்ற குடியுரிமை என்ற அடிப்படையை பலவீனப்படுத்த முடியும். முன்மொழியப்பட்ட குடியுரிமை (திருத்த) மசோதா 2016இன்படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பார்சிகள், ஏன் கிறித்துவர்களுக்கும்கூட இந்திய குடியுரிமை வழங்கும் வாய்ப்பு இருக்கின்றன. ஆனால், இந்த நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு தடை செய்யும் முன்மொழிவு வரைவு மசோதா இது.
மக்களிடையே பெருகிவரும் வெறுப்புணர்ச்சி கவலையளிப்பதாக இருக்கிறது. ஆனால், இந்தச் சூழலை மாற்றுவதற்கு, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதோடு, பொதுமக்களின் மனதிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.
செழுமையான சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்பவர்கள் இந்தியாவின் கடந்தகால வரலாற்றில் சின்னம் மட்டுமல்ல, ஜனநாயக எதிர்காலத்திற்கும் இன்றியமையாதவர்கள். இதனை புரிந்துக் கொண்டால்தான், இந்தியாவில் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் மெளனத்தை தகர்க்க முடியும்.
(குண்டு கமிட்டியின் உறுப்பினராக இருந்த கட்டுரையாளர் ஃபாரா நக்வி, புர்க்கா மற்றும் முத்தலாக்கைத் தாண்டி (மூன்று கட்டுரைகள் -2017) (Working With Muslims : Beyond Burqa and Triple Talaq) என்ற புத்தகத்தின் ஆசிரியர்)
source: https://www.bbc.com/tamil/india-44242732