தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி
CNM சலீம்
இக்கால இளைய சமுதாயத்தை மனதில் கொண்டு அவர்களை, அனுதினமும் ஐந்து வேளை தொழுகின்ற, தொழுகையாளிகளாக ஆக்கிடவும், மேலும் நம்மிலே தொழுபவர்கள் தங்களின் தொழுகையை உயிரோட்டத்துடன் தொழுதிடவும் – ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு ‘நீடூர் S.A.மன்சூர்அலி’ அவர்களால் பல ஊர்களில் “தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி” (SUCCESS THROUGH SALAAH)” என்ற தலைப்பில் பல முறை பயிலரங்கங்கள் நடத்தப்பட்டன.
அதில் கலந்து கொண்ட மக்கள், பயனடைந்ததைக் கருத்தில் கொண்டு, இது தமிழ் பேசும் அனைத்து முஸ்லிம்களிடமும் போய்க்சேரவேண்டும் என்ற நோக்கத்துடன், அங்கு கூறப்படும் கருத்துக்களைத் தழுவி, அதை எழுத்து வடிவில் கொண்டுவருவதே என் முயற்சி. (எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக!)
தொழுகையின் முக்கியத்துவம்: தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள்.
தொழுகை மார்க்கத்தின் தூண் – உமர் ரளியல்லாஹு அன்ஹு தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல் – ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும் போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராக அமையவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸுனன் அபூதாவுத்)
இது போன்ற தொழுகையை வலியுறுத்தும் பிற நபிமொழிகளும் நாம் நன்கு அறிந்த ஒன்றே. மேலும் பல சொற்பொழிவுகள், புத்தகங்கள், காட்சிகள் மூலமாகவும் தொழுகைக்கு எந்த அளவு இஸ்லாத்தில் முக்கியத்துவமும் , சிறப்பும் இருக்கின்றது என்றும் அது ஐந்து வேளை கடமையாக்கப்பட்டுள்ளது என்பதும் எல்லா முஸ்லிம்களும் அறிந்த ஒன்றே!
ஆனால் இன்று உலகளவில் ஐந்து வேளை தொழுகையை தவறாது தொழுபவர்கள், நமக்குத் தெரிந்தவகையில் 10% லிருந்து 20% (சதவிகிதம்) மட்டுமே. பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையின் போதும் ரமளான் நேரத் தொழுகையின் போதும் நிரம்பி வழியும் கூட்டம், கடமையான தொழுகைகளின் போது காணப்படுவதில்லை, குறிப்பாக ஃபஜ்ர் நேரத்தின் போது ஒரு வரிசை கூட முழுமை அடைவதில்லை.
வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும் போது மட்டுமே தொழுகையாளிகளாக இருப்பவர்களும் உண்டு. இளைஞர்களை விட முதியோர்களே அதிகம் தொழுகையாளிகளாக உள்ளனர். பள்ளிக் கூடத்திற்காக தமது பிள்ளைகளை எழுப்பும் பெற்றோர்கள், தொழுவதற்காக எழுப்புவதில்லை.
இது ஒருபுறம் இருக்க, தொழுகைக்காக மக்களை அழைக்கும் பணியில் பல மார்க்க அறிஞர்கள், இன்னும் பிற சமூக ஆர்வலர்கள் பலவழிமுறைகளைக் கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டுதான் உள்ளனர் ஆனால் மாற்றம்???
தொழுகைக்கு அழைப்பவர்களைக் கண்டால், புதிய தலைமுறையினர் தப்பித்தால் போதும் என்று ஏன் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்? பிரச்சனை அழைக்கப்படும் முறையில் இருக்கிறதா? அழைக்கப்படுபவர்களிடத்தில் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய நாம் மூன்று காரணங்களை எடுத்துக்கொள்வோம்.
ஒன்று : நமது நம்பிக்கையில் உறுதியின்மை.
நம்மில் பலருக்கு நமது நம்பிக்கைகள் குறித்தும், நமது வழிபாடுகள் குறித்தும், நமது மார்க்கச் சட்டங்கள் குறித்தும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. உறுதியற்ற நம்பிக்கை, தொழுகைக்கு நம்மைத் தூண்டுவதில்லை!
இரண்டு : தொழுகையாளிகளின் முன்னுக்குப்பின் முரணான செயல்பாடுகள்.
தொழுபவர்கள் முன்மாதிரி முஸ்லிம்களாக விளங்கிடவில்லை. அவர்களில் பலர் வேடதாரிகளாக விளங்குகிறார்கள். (தொழாதவர்களில் பலர் நல்லவர்களாக விளங்குவதும் நிதர்சனமான உண்மையே!). தொழுகையாளியாகிய தந்தை கருணையோடு நடப்பதில்லை, பொய் கூறாமல் இருப்பதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் தொழுகை நம்மிடையே ஒரு வெற்றுச் சடங்காகப் போய்விட்டிருக்கின்றது! அது நமக்குள் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை! தொழுகையாளிகளில் பலர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது ஒரு மவுனமான வெறுப்பு!
மூன்று : புதிய தலைமுறையினரிடம் கலந்துரையாடுவது எப்படி என்பதை இன்னும் சரிவரக் கற்றுக் கொள்ளாமை.
அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதுபோல, புளித்துப்போன பேச்சாகப் போய்விட்டது நமது அழைப்பாளர்களின் பேச்சு. மார்க்கச் சொற்பொழிவாளர்களுக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டு இளைஞர்களுக்கும் மத்தியில் அறிவு சார்ந்த இடைவெளி (intellectual gap) அதிகமாகிவிட்டது.
இந்த நவீனகாலத்தில், கல்வி உட்பட எல்லாத்துறைகளிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நமது சமூகத்தை சீர்திருத்திடவும் மேம்படுத்திடவும் புதிய வழிமுறைகள் தேவைப்படும் காலம் இது!
ஆனால் இன்றைய முஸ்லிம் இளைஞர்களிடம் உரையாடுவது எப்படி என்று இன்னும் நாம் கற்றுக்கொள்ளவில்லை. நமது சொல்லை கேட்பவரின் மனநிலையைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களின் சந்தேகங்களைப் புரிந்து கொள்ளாமல், பேசுவது என் கடமை என்று பேசுவதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது.
நாம் மக்களை அழைக்கும் முறையிலேயே மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றால் அது மிகையில்லை!
மாற்றத்தை நோக்கி….
source: http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/1226