ஃபர்ளும் நஃபிலும்
இஸ்லாமிய நம்பிக்கை அமைப்பில் அல்லாஹ்வுடைய கட்டளைகள், முன்னுரிமையின் தர வரிசையை ஒப்பிடும்போது சில அதிக முக்கியத்துவம் பெற்றவைகளாக இருக்கின்றன.
ஒரு ஹதீஸ் குத்ஸியில் (அல்லாஹ்வால் கூறப்பட்டவை) அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பில், அல்லாஹ் கூறுகிறான்:
“என்னுடைய அடியான் என்னை நெருங்குவதில் மிகவும் விருப்பமானவை நான் அவன் மீது விதித்துள்ளவைகளை நிறைவேற்றுவது தான். என்னுடைய அடியான் நஃபில் வணக்கங்களை (கடமையான வணக்கங்கள் மற்றும் நற்செயல்கள் தவிர, கூடுதலானவை) நிறைவேற்றுவதன் மூலம், எனக்கு அவன் மீது உள்ள அன்பினால் அவன் கேட்கும் செவிப்புலனாகவும், அவன் பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கக் கூடிய கையாகவும், அவன் நடக்கக் கூடிய கால்களாகவும் நான் ஆகும் வரை என்னை மேலும், மேலும் நெருங்குகிறான். மேலும், அவன் என்னிடம் கேட்டால் நான் அவனுக்கு அளிப்பேன். (புகாரி)
இந்த ஹதீஸின் மூலம் ஃபர்ள் (கட்டாயமானவை) மற்றும் நஃபில் (கூடுதலானவை அல்லது பரிந்துரை செய்யப்பட்டவை) என்று இரு வகையான வணக்கங்கள் இருப்பதும், நஃபில் வணக்கங்களை விட ஃபர்ளான வணக்கங்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அதிகம் என்பதும் தெளிவாகிறது. ஆனால் இவையிரண்டுமே அல்லாஹ்வின் திருப்தியையும், நிரந்தரமான உதவியையும், ஒருவருடைய துவாக்களுக்கு அவனுடைய பதிலையும் பெற்றுத் தரும்.
நவாஃபில் வணக்கங்களின் சிறப்பை விளக்கும் விதமாக, மனைவியார், முஃமின்களின் அன்னை உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: ஒரு முஸ்லிமான அடியான் அல்லாஹ்வுக்காக, கடமையான தொழுகைகளோடு பன்னிரண்டு ரக்’அத்துக்கள் (சுன்னத்) தொழுகை தினமும் தொழுதால் அல்லாஹ் (சுபஹ்) அவனுக்காக ஒரு வீட்டை சுவனத்தில் கட்டுவான். (முஸ்லிம்)
இதன்படி நாம் முன்னுரிமையில் இரண்டு நிலைகளைப் பார்க்கிறோம் – ஃபர்ள் என்ற கடமையான வணக்கங்கள், மற்றும் கடமையான வணக்கங்களின் தொடர்ச்சியான (பரிந்துரை செய்யப்பட்ட அல்லது கூடுதல் வணக்கங்களான) நஃபில் வணக்கங்கள். முக்கியமாக, கூடுதல் வணக்கங்கள் தொழுகையில் பிரதிபலிக்கப்படுகின்றன.
தொழுகையை குறையின்றி சரியாக தொழுவது நம்முடைய நோக்கமாக இருந்தாலும், நடைமுறையில் இதை அடைய முடியாமல் போகலாம். ஃபர்ளான தொழுகைகளில் தவறுதலாக ஏற்படும் குறைபாடுகளை ஈடு செய்வது தான் நஃபில் தொழுகைகளின் வேலை. தாங்கள் தொழும்போது முழுக்கவனத்துடனும், மிகுந்த பணிவுடனும், உலகக் காரியங்களில் மனம் ஈடுபட்டு கவனம் சிதறாமலும், தொழுகிறேன் என்று உண்மையாக யாராவது கூற முடியுமா?
கடமையான செயல்களை, கூடுதல் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட செயல்களைச் செய்வதற்கு முன்னால் நிறைவேற்ற வேண்டும். கடமையான செயல்கள் எப்படி முக்கியத்துவத்தின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளனவோ, அதே போல, கூடுதல் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட செயல்களுக்கும் பல படித்தரங்கள் உள்ளதால் நாம் அதன் அடிப்படையில் அச்செயல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கட்டாயக்கடமைகளில் ஏற்படும் குறைபாடுகளை ஈடு செய்வதற்காக நஃபில் தொழுகைகளை அருளியுள்ளது அல்லாஹ்வின் அளவற்ற கருணையையும், கொடைவழங்கும் தன்மையையும் மட்டுமே. கூடுதல் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட செயல்களை நஃபில் என்ற தலைப்பின் கீழ் அடக்கலாம்
முதலில் நாம் எதைப் பற்றி கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்?
அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்;
“மறுமை நாளில் மக்கள் முதன் முதலில் கணக்குக் கேட்கப்படுவது அவர்களுடைய தொழுகையைப் பற்றித்தான். நம்முடைய ரப், அவன் நன்றாக அறிந்திருந்தாலும், தன் வானவர்களிடம், ‘என்னுடைய அடியான் தொழுகைகளை முழுமையாக, குறையின்றி நிறைவேற்றினானா அல்லது அலட்சியமாக இருந்தானா என்று பாருங்கள்.’ என கூறுவான்.
அதனால், அவன் சரியான முறையில் நிறைவேற்றியிருந்தால், அது அவனுக்கு நன்மையாக பதிவு செய்யப்படும். ஆனால், அவன் அலட்சியமாக இருந்திருந்தால், அல்லாஹ் கூறுவான், ‘என்னுடைய அடியான ஏதாவது கூடுதல் தொழுகைகளை நிறைவேற்றியிருக்கிறானா என்று பாருங்கள்.’
அதன் பின் அவன் கூடுதல் தொழுகை தொழுதிருந்தால், அல்லாஹ் கூறுவான், ‘என் அடியானின் கடமையான தொழுகைகளில் உள்ள குறைபாடுகளை அவனுடைய கூடுதல் தொழுகைகளைக் கொண்டு ஈடு செய்யுங்கள்.’ என்று கூறுவான். அதன் பிறகு, அவனுடைய எல்லா செயல்களும் அதே போல் சோதிக்கப்படும்.” (அபு தாவூது)
அதனால், நமக்கு இரு வகையான செயல்கள் உள்ளன. ஒன்று, ஃபர்த் (கடமையானவைகள்) மற்றொன்று நஃபில் (கூடுதல் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட செயல்கள்). இஸ்லாமிய அறிஞர்கள், கடமையானவற்றை செய்யாமல் இருத்தல் அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றுத்தரும் என்பதில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளார்கள். அதே சமயம், நவாஃபில் செயலை செய்யத் தவறுவது, அதை விடக் குறைவான கண்டிப்பு அல்லது நற்கூலிகளின் இழப்பையும் விளைவிக்கும். அல்லாஹ் (சுபஹ்) விலக்க வேண்டிய (ஹராம் அல்லது தடுக்கப்பட்டவை) அல்லது வெறுக்கப்பட்டவை (மக்ரூஹ் அல்லது வெறுக்கப்பட்டவை) இவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென கட்டளையிட்டுள்ளான்.
தடுக்கப்பட்டவை (ஹராம்) மற்றும் வெறுக்கப்பட்டவை (மக்ரூஹ்) இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் குறிக்கும் விதமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்து விஷயங்களை வெறுத்தார்கள் (அவற்றை வரிசையாகக் கூறினார்). ஆனால் அவற்றை தடை செய்யவில்லை. (அபு தாவூது)
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,
கடமையானவற்றிற்கு (ஃபர்ள்) எதிர்ப்பதம் தடை செய்யப்பட்டவை (ஹராம்),
கூடுதல் அல்லது பரிந்துரை செய்யப்பட்டவற்றிற்கு (நஃபில்) எதிர்ப்பதம் விரும்பத்தகாதது (மக்ரூஹ்).
அதனால், கடமையானவற்றை செய்யத் தவறுவது தடுக்கப்பட்டது (ஹராம்), கூடுதல் அல்லது பரிந்துரை செய்யப்பட்டவைகளை (நஃபில்) செய்யத் தவறுவது விரும்பத்தகாதது.
தூண்கள்
ஒரு விசுவாசியின் மீது கடமையாக இருந்தாலும், கட்டாயக் கடமைகளும் அடிப்படை இஸ்லாமிய பொறுப்புகளும் ஒரே அளவு முக்கியத்துவம் பெற்றவை இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம், அல்லாஹ் ஏகன் என்பதில் நம்பிக்கை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்தில் நம்பிக்கை, தொழுகை, ஸகாத், ரமதானில் நோன்பு நோற்பது, மக்காவில் உள்ள கபாவிற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது என்ற ஐந்து தூண்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை தான் மற்ற அனைத்திற்கும் முன் நிபந்தனை. அது இல்லையென்றால், மற்ற தூண்களை பின்பற்றுவதில் பொருள் இல்லை. அதற்கு அடுத்ததாக தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், தொழுகையை நிலைநாட்டும் ஒரு தனி மனிதர் தன்னுடைய தீனை நிலைநாட்டுகிறார். எவர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ, அவர் தன் தீனை விட்டுவிடுகிறார். இஸ்லாமுக்கும், நிராகரிப்பு(குஃபுரு)க்கும் உள்ள வித்தியாசம் தொழுகையை விட்டு விடுவது என்று கூறும் எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன.
தொழுகைக்கு (ஸலாஹ்) அடுத்து வருவது, ஒரு விசுவாசியை தூய்மையாக்கக் கூடிய ஸகாத். குர்’ஆனில் என்பத்தியிரண்டு இடங்களில் தொழுகையும், ஸகாத்தும் சேர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கலிஃபா அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸகாத் கொடுக்க மறுப்பவர்கள் மற்றும் தொழுகையையும், ஸகாத்தையும் வெவ்வேறாக பிரிப்பவர்கள் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார்கள். அவர் இந்த முடிவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பின்வரும் சொற்களின் அடிப்படையில் எடுத்தார்: மக்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர், என்று கூறி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தைக் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.; (புகாரி, முஸ்லிம்)
துரதிர்ஷ்டவசமாக, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வேறுபாடுகளை நம்மில் பல முஸ்லிம்கள் பாராட்டுவதோ, அவற்றின்படி செயல்படுவதோ இல்லை. அதனால், அவர்களுடைய வாழ்வு முரண்பாடுள்ளதாக உள்ளது. சிலர் ரமளானில் நோன்பு நோற்கத் தவறலாம், ஆனால் ஈத் தொழுகைக்கு செல்வார்கள்.
சிலர் ரமளானில் நோன்பு நோற்று, ஜும்மா தொழுகையில் கலந்து கொள்வதில் அலட்சியமாக இருப்பார்கள்.
சிலர் ஜும்மா தொழுகைக்கு வருவார்கள் ஆனால், தினசரி ஐவேளைத் தொழுகைகளில் குறை வைப்பார்கள்.
இவை அனைத்தும் நிறைவேற்றப் பட்டாலும், நஃபில் தொழுகைகளைக் கடைபிடிக்காமல் இருக்கும்போது அல்லாஹ்வின் பார்வையில் அவர்களுடைய தரம் குறைந்து போகலாம்.
சிலர் ஐவேளைத் தொழுகைகளை தினமும் தொழுவார்கள், ஆனால், ஸகாத் கொடுக்கத் தவறி விடுவார்கள். இன் ஷா அல்லாஹ், நாம் ஃபர்ள் மற்றும் நஃபில் இரண்டையும் அறிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.