“கப்ரு” குறித்து நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
‘கப்ரு’ தான் நிச்சயமான வீடாகும். எனினும் அதை அதிகமாக நினைப்பவர்கள் நம்மில் வெகு சிலரே! அது குறித்து ஒரு சமயம் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவாகும் இது.
‘புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைப்போற்றிப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகிறேன். மேலும், அவனிடம் பிழை பொறுக்க வேண்டுகிறேன். நம் நஃப்ஸ{களால் (மனோ இச்சைகளால்) விளையும் தீமைகளை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.
அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. அவ்வாறே அல்லாஹ் வழிதவறும்படி விதித்து விட்டவர்களை யாராலும் நேர்வழியில் செலுத்திடவும் முடியாது. மேலும் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்.
‘அல்லாஹ் அவருக்குச் சன்மார்க்கத்தைத் தந்து நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சிரிக்கை செய்பவராகவும், கியாமத்துக்குச் சமீப காலத்தில் அனுப்பியுள்ளான். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் பணிந்தவர்கள் நிச்சயம் நேர்வழி பெற்று விட்டவர்களாவார். அவர்களுக்குப் பணியாமல் மாறு செய்தவர்கள் நிச்சயம் வழி தவறியவர்களாவர்.’
‘நிச்சயமாக எல்லா இன்பங்களையும் வேரோடு பிடுங்கித் தகர்த்தெறியும் மரணத்தை மட்டும் நீங்கள் உண்மையாக சிந்தித்தீர்களானால் இன்று உங்களை மகிழ்ச்சியில் மூழ்கியிருப்பவர்களாக உங்களை நான் பார்க்க நேரிடாது. ஆகவே மரணத்தைப் பற்றிய நினைப்பை உங்கள் சிந்தனையில் அதிகமாக இறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ‘நான் (உங்கள் மக்களை விட்டும் உங்களைப் பிரித்துவிடும்) தூரத்திலுள்ள தனித்த வீடாவேன். நான் (உங்களை மண்ணோடு மண்ணாக்கும்) மண் வீடாவேன். நான் (விஷ) ஜந்துக்கள் நிறைந்த வீடாவேன்’ என்று ஒவ்வொரு நாளும் கப்ரிலிருந்து சப்தம் வந்து கொண்டே இருக்கிறது.
அல்லாஹ்வின் நல்லடியார் (முஃமின்) ஒருவர் அந்த கப்ரில் (மண்ணறையில்) அடைக்கப்பட்டதும், ‘வாருங்கள் உங்களுக்கு சுப சோபனம் உண்டாகட்டும். என் முதுகில் நடந்து திரிபவர்களில் நீங்களே எனக்கு மிகவும் உவப்பானவர். ஆகவே, இன்று நீங்கள் என்னைச் சந்திக்கிறீர்கள். நான் உங்களுக்குச் செய்யும் வரவேற்பைப் பாருங்கள்!’ என்று அந்த கப்ரு கூறும். பிறகு அந்த கப்ரு அந்த முஃமினின் பார்வைக்கு எட்டிய தூரம் வரை அவருக்கு விஸ்தீரணமாக்கப்படும். மேலும், அவருக்காகச் சுவர்க்கத்தின் ஒரு வாயிலும் திறந்து விடப்படும்.
காஃபிரான, தீய நடத்தை புரிந்த ஒருவன் கப்ரில் அடக்கப்பட்டதும், கப்ரு கர்ஜித்து அவனைப்பற்றி, ‘உனக்கு (இங்கே) சுகமோ, விஸ்தீரணமான இடமோ கிடைக்காது. என் முதுகில் நடந்து திரிந்தவர்களில் நீயே எனக்கு மிகவும் வெறுப்பளித்தவன். இன்று நீ என் பிடியில் அகப்பட்டுள்ளாய். (இப்போது) நீ என் வரவேற்பை அறிந்துகொள்வாய்’ என்று கூறி அவனைச் சுருட்டி நெருக்கும். (அதன் வேகத்தால்) அவனுடைய எலும்புகள் நொறுங்கி ஒன்றோடொன்று இணைந்துவிடும். (இவ்விதம் கூறும்போது நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இரண்டு கைகளின் விரல்களையும் கோர்த்துக் காட்டினார்கள்.)
எழுபது பெரும், பெரும் விஷப் பாம்புகள் அவன்மீது ஏவப்படும். அந்த பாம்புகளில் ஒன்று இந்த பூமியின்மீது தன் (விஷ) மூச்சை விட்டால், கியாமநாள் வரை அந்த இடத்தில் புல் பூண்டே முளைக்காது. அந்த பாம்புகள் அவனைக் கடித்துப் பிய்த்துப்பியத்துத் தின்று கொண்டிருக்கும்.
கப்ரு ஒன்றிருந்தால் அது ஓர் உல்லாச (சுவர்கப்) பூங்காவாக இருக்கும், அல்லது நரக எரி குண்டங்களில் ஓர் எரி குண்டமாய் இருக்கும். (நூல்: திர்மிதீ)