ஹுருல்ஈன் யாருக்கு?
சகோதரி மதீனத்துல் முனவ்வரா
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 44:51)
சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
(அல்குர்ஆன் : 44:52)
ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 44:53)
இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
(அல்குர்ஆன் : 44:54)
அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 44:55)
முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
(அல்குர்ஆன் : 44:56)
(இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும்.
(அல்குர்ஆன் : 44:57)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
(அல்குர்ஆன் : 44:58)
ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 44:59)
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 52:17)
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
(அல்குர்ஆன் : 52:18)
(அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”
(அல்குர்ஆன் : 52:19)
அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
(அல்குர்ஆன் : 52:20)
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் – ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 52:21)
இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
(அல்குர்ஆன் : 52:22)
(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
(அல்குர்ஆன் : 52:23)
அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
(அல்குர்ஆன் : 52:24
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
(அல்குர்ஆன் : 56:10)
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
(அல்குர்ஆன் : 56:11)
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
(அல்குர்ஆன் : 56:12)
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
(அல்குர்ஆன் : 56:13)
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் –
(அல்குர்ஆன் : 56:14)
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது –
(அல்குர்ஆன் : 56:15)
ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 56:16)
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 56:17)
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
(அல்குர்ஆன் : 56:18)
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 56:19)
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் –
(அல்குர்ஆன் : 56:20)
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
(அல்குர்ஆன் : 56:21)
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
(அல்குர்ஆன் : 56:22)
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
(அல்குர்ஆன் : 56:23)
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
(அல்குர்ஆன் : 56:24)
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 56:25)
“ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
(அல்குர்ஆன் : 56:26)
இன்னும் வலப்புறத்தார்கள் – வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
(அல்குர்ஆன் : 56:27)
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;
(அல்குர்ஆன் : 56:28)
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;
(அல்குர்ஆன் : 56:29)
இன்னும், நீண்ட நிழலிலும்,
(அல்குர்ஆன் : 56:30)
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
(அல்குர்ஆன் : 56:31)
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் –
(அல்குர்ஆன் : 56:32)
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை –
(அல்குர்ஆன் : 56:33)
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
(அல்குர்ஆன் : 56:34)
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
(அல்குர்ஆன் : 56:35)
அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
(அல்குர்ஆன் : 56:36)
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
(அல்குர்ஆன் : 56:37)
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
(அல்குர்ஆன் : 56:38)
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
(அல்குர்ஆன் : 56:39)
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
311. அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
(சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் பற்றி) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் யாரெனில், அவரது முகத்தை அல்லாஹ் நரகத்திலிருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பிவிடுவான்; மேலும், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், “என் இறைவா! இந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழலில் இருக்க வேண்டும்” என்பார்.
-பிறகு இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பில் உள்ளவாறே காணப்படுகிறது.-
ஆனால், “மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்?” என்பதிலிருந்து இறுதிவரையுள்ள மற்ற தகவல்கள் இதில் இடம்பெறவில்லை. “இன்னின்னதை நீ கேட்கலாம்!”என்று அவருக்கு அல்லாஹ் நினைவூட்டுவான். (அவ்வாறே அவர் ஆசைப்பட்டுக் கேட்பார்.) இறுதியில் ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது,
“இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னும் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று இறைவன் கூறுவான்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
பிறகு அந்த மனிதர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது அவருடைய “ஹூருல் ஈன்” எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் எங்களுக்காக உங்களையும், உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்”என்று கூறுவார்கள். அப்போது அந்த மனிதர் “எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப் படவில்லை” என்று (மகிழ்ந்து) கூறுவார்.
இதை நுஅமான் பின் அபீஅய்யாஷ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1).
5450. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று (அழகாகத்) தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று
காட்சியளிப்பார்கள். சொர்க்கத்தில் அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். எச்சில் துப்பவுமாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களுடைய துணைவியர் கண்ணழகுக் கன்னியர் (அல்ஹூருல் ஈன்) ஆவர். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணமாகவே அமைந்திருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 51. மறுமை சுவர்க்கம் நரகம்)
2796. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது.
உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது.
சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்;
பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். ன அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 56. அறப்போரும் அதன்..)
3254. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும்
நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது.
ஒவ்வொரு மனிதருக்கும் ‘ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.
ஸஹீஹ் புகாரி
சகோதரி மதீனத்துல் முனவ்வரா அவர்களின் தொகுப்பு…..
source: www.eadislam.net/