கடவுளை மறுக்க எந்த நிருபிக்கப்பட்ட ஆதார சான்றுகளும் இதுவரையிலும் நாத்திகர்களிடம் இல்லை
கடவுளின் இருப்பை பொய்ப்பிக்க வேண்டுமானால்.. உலக படைப்பின் துவக்கம் முதல் இன்று வரையிலும் இப்பிரபஞ்ச பெருவெளியில் நிகழும் அனைத்து இயக்கங்களுக்கும் காரணங்களையும், அவசியங்களையும், ஆதாரத்தோடு அறிவியல் கையில் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் இன்றைய பல கேள்விகளுக்கு அறிவியலிடமும், அதை கடவுளாக்க முயற்சிக்கும் அறிவிலிகளிடமும் பதில் இல்லை.
நேர்த்தியாக படைக்கப்பட்டதற்கு காரணம் கேட்டால் அங்கே அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பதில் பதிவு செய்யப்படுவதில்லை. திடிரென இயற்கை ஏற்படுத்தியாக சில அறிவார்ந்த(?) பதிலும் அங்கே சொல்லப்படுவதுண்டு.
எதற்காக கடவுளை மறுப்பதாக சொல்கிறார்களோ அதே காரணத்தை அறிவியலாக்க முயல்வது தான் நாத்திகர்களின் தெளிவான முரண்பாடு!
கேள்விகள் விரிந்துக்கொண்டே தான் இருக்கின்றன இப்படி.,
o சூரியன், விண்மீன் (Galaxy) மண்டலத்தை 225 (~) மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அந்த விண்மீன் மண்டலம் அண்ட மையத்தை 550km/s என்ற வேகத்திலும் சுற்றிவருகிறது, ஆனால் அந்த அண்ட மையம் எதை மையமாக வைத்து சுற்றுகிறது- பதில் வரா கேள்வி?
o பூமியும், பிற கோள்களும் அதனதன் ஈர்ப்பு விசையில் தனக்கான பாதைகளை அமைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக சுற்றி வருகிறதே அந்த எல்லைக்கோடுகளை உருவாக்கியது எந்த அறிவியல்?
o சூரியனிடமிருந்து தீங்கு விளைவிக்கும் வகையில் வெளியாகும் புற ஊதா கதிர்களை (UV – Ultra Violet ) தடுத்து நிறுத்தும் கேடயமாக பூமியின் ஓசோன் படலம் இருக்கிறது. ஓசோன் மட்டுமில்லையென்றால் இப்புவியில் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. உயிர்களின் பாதுக்காப்பு கவசமான ஓசோன் தேவையான இடைவெளியில் 15 முதல் 45 கி.மி உயரத்தில் மட்டும் வளிமண்டத்தில் ஏற்படுத்தப்பட்டது எப்படி?
o சந்திரனில் வெப்பம் அதிகம், வியாழனில் 350 மடங்கு ஈர்ப்பு விசை அதிகம். இன்னும் சில கிரகங்களில் வெப்பமும் ஈர்ப்பு விசையும் குறைவு, காற்று இல்லை, தண்ணீர் இல்லை இப்படி உயிர்வாழ எந்த தகுதிகளும் ஏனைய கோள்களில் இல்லா நிலையில் பூமியை மட்டும் உயிர் வாழ உகந்த அளவில் தயார் படுத்தியது யார்?
இன்னும் சொல்லப்போனால் இறந்த காலத்திற்கு கூட இவர்களிடம் தெளிவான சான்று இல்லை. உலகப்படைப்பின் ஆரம்பமான பெருவெடிப்புக்கொள்கை எப்படி ஏற்பட்டது? என விவரித்து சொல்லும் அறிவியல் ஏன் ஏற்பட வேண்டும்? என்ற ஒற்றை கேள்வியில் தன் இயலாமையை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு தான் இன்னும் இருக்கிறது.
இந்த கேள்விகள் பரிணாமம் வரையிலும் தொடரத்தான் செய்கிறது. எந்த உயிரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுப்பட்டு பற்பல உடற்கூறுகளையும், சிக்கலான மூலக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்படி தொடர்பற்ற உயிரின வரிசைகள் எந்த சூழலில் எதுவாக மாற்றமடைந்ததன?
ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து மட்டுமே விவரிக்கிறார்களே ஒழிய ஏன் ஏற்பட வேண்டும் என்பதற்கு இதுவரை பதிலில்லை. உதாரணமாய், தாவரங்கள் எந்த உயிரின மூலத்திலிருந்து தோன்றியது என்பதற்கோ, அதன் தொடர்ச்சியாக எந்த உயிரினம் பரிணாமம் அடைந்தது என்பதற்கோ எந்த ஆவண- ஆதாரப்பூர்வ சான்றுகளும் பரிணாம ஆதாரவாளர்களால் பதிவு செய்யப்படவில்லை.
எதற்கெடுத்தாலும் அறிவிலை ஆதாரமாக்குவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். அறிவியல் எதையும் உருவாக்குவதில்லை. மாறாக ஒன்றை கண்டறிந்து மட்டுமே சொல்கிறது. ஆகவே தான் பலக்கோடி உருவாக்கத்திற்கு பதில் இல்லையென்றாலும் அங்கே அறிவியல் முரண்பாட்டை நாத்திகர்கள் கற்பிப்பதில்லை.
ஒரு விசயம் மட்டும் தெளிவு. விடையில்லா கேள்விகள் நாத்திகர்களிடம் முன்னிருத்தப்பட்டால் விரைவில் விடை கண்டுப்பிடிக்கப்படலாம் என எதிர்க்காலத்தின் பக்கம் கை காட்டுகிறார்கள்.அல்லது இயற்கை இறந்த காலத்தில் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.
கடவுளை மறுக்க இதை ஒரு அறிவார்ந்த விளக்கமாக வேறு சொல்கிறார்கள். மொத்தத்தில், கடவுளை மறுக்க எந்த நிருபிக்கப்பட்ட ஆதார சான்றுகளும் இதுவரையிலும் நாத்திகர்களிடம் இல்லை.
அடிப்படை அறிவற்ற ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு சூழலுக்கும், இடத்திற்கும் தகுந்தார்ப்போல் தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் நாத்திகம் – தவறான புரிதலுடன் கடவுளை மறுக்க முற்படுவது தான் அபத்தமான ஆச்சரியம்!
-Luthfullaah
புரிதலில் உதவி
பிரபஞ்சம்- ஓர் அறிவியல் பார்வை (Book)