அடைக்கப்படும் அரபு நாட்டு கதவுகள்! கேள்விக்குறியாகும் தமிழக இளைஞர்களின் எதிர்காலம்!
Prof. Md ASKAR
இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னால் பர்மா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்கள் தொழில் வளத்தை இழந்தபோது ஆயிரக்கணக்கான தமிழர்கள் வேலையின்றி நாடு திரும்பினர்.
பின்னர் எழுபதுகளில் வளைகுடா நாடுகள் தங்களின் வாசல்களை அகலத் திறந்து இந்தியர்களை வேலைக்காக அழைத்தன.
அரபு நாட்டு வருமானம் இந்தியர்களுக்கு, புது வாழ்க்கையை தந்தது. என்னதான் கூலி வேலையாக இருந்தாலும் மாதமானால் எண்ணி பெரும் ரியாலும், அவை இந்தியாவில் பெற்ற மதிப்பும் கடந்த 40 ஆண்டுகளாக இளைஞர்களை அரபு நாடு நோக்கி பயணமாக செய்தது.
நம்பிச் சென்ற அரபு நாடு நம்மவர்களை ஏமாற்றாமல் வேலை வாய்ப்பையும், பொருளாதார பெருக்கத்தையும் அள்ளி வழங்கின.
அரபு நாட்டு வேலை இளைஞர்களின் மோகம் ஆகிப் போக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி பாஸ்போர்ட் எடுத்து ஃபாரினுக்குப் பறந்தார்கள். இரண்டாயிரத்துக்குப் பிறகு பட்டப்படிப்பு முடித்தவர்கள் அலுவலர்களாகவும், நிர்வாக அதிகாரிகளாகவும் அரபு நாட்டில் பணியில் அமர்ந்தார்கள்.
இன்று அரபு நாட்டில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளை பெரும்பாலும் இந்தியர்களே அலங்கரிக்கின்றனர். பல ஆயிரம் ரியால்களை ஊதியமாகவும் பெறுகின்றனர்.
“எண்ணெய் கிணறு போல ஊறிய அரபு நாட்டு வருமானத்தில் தற்போது இடி விழுந்துள்ளது. அரபு நாட்டு அரசு எடுத்த சில முடிவுகள் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பை ‘? ‘ கேள்விக்குறியாக்கி உள்ளது.
அரபு நாட்டில் சொந்தமாக நிறுவனங்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தி வந்த இந்தியர்களிடமிருந்தும் ஒப்பந்தங்கள் அரேபியர்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதனால் நிறுவனங்களை நடத்தி வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நிறுவனங்களை திரும்ப ஒப்படைத்து விட்டு பெட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் “.
அதிகாரிகளாகவும் அலுவலர்களாகவும் பணியாற்றிவரும் வெளிநாட்டவர்களின் ‘அக்காமா புதுப்பிப்பு கட்டணம் ஆண்டிற்கு, சுமார் 40 ஆயிரத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடைநிலை ஊழியர்களுக்கு அக்காமா புதுப்பிக்க 6,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பெரும் நிறுவனங்கள் தங்கள் இழப்பைத் தவிர்க்க, அதிக ஊதியம் பெறும் அலுவலர்களை பணி நீக்கம் செய்கிறது. அரபு நாட்டில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்கள் சமீபத்தில் தங்களிடம் பணியாற்றிய ஆயிரக்கணக்கான அதிகாரிகளை திரும்ப அனுப்பியுள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்களே. சிறு நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு அக்காமா கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே சிறு நிறுவனங்களும் ஆள் குறைப்பு செய்து வெளிநாட்டவரை திரும்ப அனுப்புகிறார்கள்.
அரபு நாட்டு மோகத்தால் உள்நாட்டில் கிடைக்க வேண்டிய அத்தனை வாய்ப்புகளையும் தமிழ் சமூகம் இழந்துவிட்டு நிற்கிறது. படித்த இளைஞர்கள் கூட அரசு வேலைக்கு முயற்சி செய்யவில்லை.
அரபு நாட்டு வருமானத்தை உள்ளூர் நிறுவன வருமானத்தோடு ஒப்பிட்டு பார்த்து, கிடைத்த வேலையை உதறித் தள்ளி விட்டு வெளிநாட்டிற்குச் சென்ற இளைஞர்கள் நாடு திரும்பும்போது முன்பிருந்த வேலை கூட கிடைக்காமல் நிற்கதியாய் நிற்கின்றனர்.
கடைநிலையில் வாழ்ந்தவர்கள் தாங்கள் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த தொழிலையும், வியாபாரத்தையும் விட்டுவிட்டு வெளிநாடு சென்று திரும்புகையில் தன் பழைய இடத்தில் வேறொருவன் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான்.
சென்ற நாட்டிலும் வேலையில்லை, சொந்த நாட்டிலும் வேலைக்கு வழியில்லை என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேலை இழந்து, தொழில் இழந்து நாடு திரும்பும் நமது சமூகத்தவரை நாம் என்ன செய்யப் போகிறோம்? அவர்களுக்கான வேலை வாய்ப்பையோ, தொழில் வாய்ப்பையோ எப்படி ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறோம்?
தற்போது படித்துக் கொண்டிருக்கும் இளைய சமூகத்திற்கு நாம் எந்த திசையை காட்டப் போகிறோம்? இது குறித்தெல்லாம் யார் சிந்திக்க வேண்டும்? யார் சிந்திக்கப் போகிறார்கள்?
நிராயுதபாணியாய் நாடு திரும்பும் நமது இளையோரின் எதிர்காலம் குறித்து கொஞ்சம் சிந்தியுங்கள்.
கல்வியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
அடுத்த தலைமுறையாவது தன்னை நம்பி வாழும்.