ஒரு நவீன காரீஜ்ஜியின் வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்.. ஒரு பார்வை!
எஸ். ஹலரத் அலி
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு வெடித்துக் கிளம்பிய ஏகத்துவ புரட்சியின் நாயகனாக, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற முஜ்தஜிதாக, இஸ்லாத்தின் போர்வாளாக, அனாச்சார, மெளடீக சடங்குகளுக்கு சாவு மணி அடித்த புரட்சி புனலாக, பொங்கு வெள்ளமாக காட்சி தந்த அண்ணனின் நிலைமை இன்று, ஊர் சிரித்து ஒடுங்கிப் போக காரணம் என்ன?
அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே!) நீங்கள் அவர்களுக்கு (பல்ஆம் இப்னு பாஊரா) என்னும் ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்து கண்ணியமாக்கி வைத்திருந்தோம். எனினும் அவன் (பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனை பின் தொடர்ந்து சென்றான். (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழி தவறி விட்டான்.
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலக வாழ்வையே சதமென மதித்து, தன் இச்சைகளையே பின்பற்றினான். அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கை தொங்க விடுகிறது அல்லது அதை விட்டு விட்டாலும் நாக்கை தொங்க விடுகிறது. இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணம் ஆகிறது. ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெரும் பொருட்டு இத்தகைய வரலாறுகளை கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:175,176)
இந்த இரு வசனங்களில் கூறப்படும் பல்ஆம் இப்னு பாஊரா என்பவருக்கு அல்லாஹ் ஏராள மான சான்றுகளை கொடுத்திருந்தான். அவருக்கு தனது மகத்தான பெயரை (அல் இஸ்முல் அஹ்லம்) கற்றுக் கொடுத்தான். அந்தப் பெயர் கூறி பிரார்த்தித்தால் கேட்டது கிடைக்கும். ஆனால் அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்த அருட்கொடையை, அல்லாஹ்வுக்கு மாறு செய்யப் பயன்படுத்தினார். அல்லாஹ்வின் படைகளுக்கும், இறை நம்பிக்கை கொண்ட மக்களுக்கும் எதிராக அதைப் பயன் படுத்தி இழிநிலையை அடைந்தார். (தப்ஸீர் இப்னு கஸீர் : 3, பக். 778)
ஆம்! தக்லீது, தரீக்கத் மதரஸாவில் படித்து, தட்டு, தகடு, தாயத்து, மெளலூது ஓதி மார்க்கம் பேசி காசு பார்த்த மெளலவிகளில் ஒருவராக இருந்தவருக்கு அல்லாஹ், ஞானத்தையும், கல்வியையும் அளித்து கண்ணியப்படுத்தி, ஏகத் துவ தீபமாக்கினான். அதன் ஒளியால் தமிழகத்தில் அசல் இஸ்லாத்தை ஓங்கச் செய்தான். அந்தோ பரிதாபம்! கூட்டம் சேரக் சேர அண்ணன் இப்லீஸின் பிடியில் மாட்டியும், இயக்க வலையில் சிக்கியும் இவ்வுலக ஆசா பாசங்களுக்கு அடிமையாகி அசிங்கப்பட்டு அம்பலப்பட்டு போனார்.
நம் தமிழகத்து பல்ஆம் இப்னு பாஊரா, அண்ணன் அவர்களை அப்படியே பிரதிபலித்திடும் ஹதீஃத் ஒன்றும் நம் கண்ணில் தெரிகிறது.
ஹுதைபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் உங்கள் மீது மிகவும் அஞ்சுவது ஒரு மனிதரைப் பற்றித்தான். அவர் குர்ஆனை ஓதுவார். அதன் பொலிவு அவரிடம் காணப்படும். அவர் இஸ்லாத்திற்கு பக்கபலமாக இருப்பார். (இந் நிலையில்) அல்லாஹ் அவரை தான் நாடிய வாறு மாற்றிடுவான். அவரிடமிருந்து அந்த பொலிவு கழன்று விடும். அவர் அதை தன் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு, தான் அண்டை வீட்டாரை வாளால் (தாக்க) முயற்சி செய்வார். அவரை “இணை வைப்பாளர்” என்று குற்றம் சாட்டுவார் என்று கூறினார்கள்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! குற்றம் சாட் டியவர், குற்றம் சாட்டப்பட்டவர் ஆகிய இரு வரில் இணை வைப்புக்கு மிகவும் ஏற்றவர் யார்?” என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “குற்றம் சாட்டியவர்தான்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான், தப்ஸீர் இப்னு கஸீர்: 3, பக். 774)
ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லி, இஸ்லாத்திற்கு பக்கபலமாக இருந்த மனிதர் இறுதியில் தனி இயக்க முஸீபத்தில் வீழ்ந்து, தான் இயக்கம் சாராத முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள், கபூர் முட்டி என்று பட்டம் சூட்டி, குற்றம் சாட்டி இன்று அவரே இணைவைப்பாளர் நிலைக்கு வந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரம் மற்றும் பகட்டின் பக்கம் சாய்ந்து, அதன் இன்பங்களையும், சுகபோகங்களையும் எதிர்நோக்க ஆரம்பித்தார். இறுதியில் இவ்வுலகம் அவரை ஏமாற்றி விட்டது.
எந்த ஒரு நல்ல முஸ்லிமும் கவாரீஜ்கள் வழி சென்றால் கடைசியில் கழிசடையாகிவிடுவார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம். “அப்துல் ரஹ்மான் இப்னு முல்ஜம்” என்ற குர்ஆனை உடையவர்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியின்போது எகிப்தில் கவர்னராக இருந்த அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நன்கு குர்ஆனை கற்றறிந்த ஒரு மனிதரை எகிப்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டபோது, கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்துல் ரஹ்மான் இப்னு முல்ஜம்மை அனுப்பி, இவ்வாறு கடிதம் எழுதினார். “”நான் இவரை அனுப்புகிறேன், இவர் மதீனாவிற்கு தேவையானவராக இருப்பினும் உமக்காக அவரை எகிப்துக்கு அனுப்பி வைக்கிறேன். ஆகவே அப்துல் ரஹ்மான் இப்னு முல்ஜம் முக்கு உரிய இடம் கொடுத்து மக்களை குர்ஆனை போதிக்கும் அவருக்கு உரிய கண்ணியம் கொடுக்கவும்.”
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் குர்ஆனை உடையவர் என்று கண்ணியப்படுத்தப்பட்ட ஒரு மனிதர் பின்பு வழிகேட்டில் வீழ்ந்ததற்கு காரணம் கவாரீஜ்களுடன் சேர்ந்ததே. அலிரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியின் போது அவரின் படையில் சேர்ந்து போரிட்ட இந்த மனிதர், மூஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், சமா தானம் பேசியதை எதிர்த்து, வழிகெட்ட கவா ரிஜ்களுடன் சேர்ந்து, அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கொல்லவும் திட்டமிட்டான். திட்டத்தை செயல்படுத்த கூபா வந்த மனிதரின் பார்வையில் ஒரு பேரழகி சிக்கினாள்.
அவள் பெயர் கத்தம் பின்த் அஸ்-ஸஜ்னா, இவள் ஒரு கவாரீஜ் பெண்மணி நஹர்வான் யுத்தத்தில் தனது தந்தையையும், தனயனையும் போரில் இழந்தவள். அதற்கு பழிக்குப் பழியாக அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்றால் அவரது தலையை மஹராக கொடுத்து என்னை மணக்கலாம் என்ற ஆசையை தூண்டி விட்டாள். அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கொல்வதற்கு அல்லாஹ்வே இப்பெண்ணை தனக்கு பரிசாக கொடுத்ததாக மகிழ்ச்சியடைந்தான் மதிகெட்ட முல்ஜம், ஒரு பஜ்ர் தொழுகைக்கு இமாமத் செய்ய வந்த அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை திட்டமிட்டபடி வாளால் வெட்டி பிடிபட்டான்.
காயத்தின் காரணமாக மூன்று நாட்களுக்குப்பின் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்தபின், முல்ஜம்முக்கு மரண தண்டனை கொடுக்க அவனை இழுத்து வந்தனர். அப்போது அவனது இரண்டு முட்டுக்காலிலும், நெற்றியிலும், கருத்து காய்த்துப் போய் இருந்தது. அவன் அதிகமதிகம் ஓதியும் தொழுததால் ஏற்பட்ட அடையாளம். அழகாக குர்ஆனை ஓதி, மக்க ளுக்கு மார்க்க விளக்கம் கொடுத்த மனிதர் ஷைத்தானின் தீண்டுதலால் கவாரிஜ்களிடம் சிக்கி சீரழிந்தார்.
இந்த கூட்டத்தாரைப் பற்றியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவித்தார்கள்:
“இறுதி காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞராக இருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாக இருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (அல்குர்ஆன் வசனம், தவ்ஹீத்) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டை பிராணியின் உடலிலிருந்து அம்பு வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறை நம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்று விடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்”. (அறிவிப்பவர் : அலி ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புஹாரி : 3611)
நமது தவ்ஹீது இயக்க நாயகரும் குர்ஆனுக்கு விரிவுரை எழுதியும், திருகுர்ஆன் விளக்க வகுப்பு எடுத்தும் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். “”இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பாப்புலர் ஆனார். அல்லாஹ்வின் சிறந்த சொல்லான ஏகத்துவ “”தவ்ஹீது” பெயரிலேயே பிரிவினை ஜமாஅத் ஏற்படுத்தி அதன் நிறுவனரும் ஆனார். அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளுக்கு மர்கஸ் எனும் புதுப்பெயர் சூட்டி அழகு பார்த்தார். அந்தோ பரிதாபம்! ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்கினார்.
இவருக்கு முன்பு இயக்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டு வெளியேற்றியதாகவும் அறிக்கை விட்ட நிறுவனரே, அடுத்து அதே படுகுழியில் வீழந்து விட்டார்.
இதனால் நாயகர் நிலைகுலைந்தார். தமிழகத்தில் உள்ள அநேக இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகளின் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டு, இந்த இயக்க ஆலிம்களின் மீது மட்டும் சுமத்தப்படக் காரணம். இவர்கள் தேர்ந்தெடுத்த பாதை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தராத பாதை-வழிகெட்ட கவாரிஜ்கள் சென்ற பாதை-முத்தஸிலா மூடர்கள் போன பாதை, நரகத்தின் நாய்கள் நடை பயின்ற பாதை என்பதே.
கவாரிஜ் வழி இயக்கதாரிகளின் அடிப்படை கொள்கையே பாலியல் படுகுழிக்கான பாதையை விரித்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளம் காட்டிய கவாரீஜ்கள் ஒழிந்து விட வில்லை. அவர்கள் வெவ்வேறு பெயர்களில் இறுதி நாள் வரும் வரை வந்து கொண்டே இருப்பார்கள். நபியவர்கள் சொல்லிச் சென்ற அடையாளத்தை இன்றைய நவீன கவாரீஜ்களிடம் இன்றும் காணலாம்.
முஸ்லிம்களை காபிராக பிரகடனப் படுத்துதல், அதே சமயம் காபிர்களை கண்ணியப்படுத்துதல், ஆம்! சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்கள் இணை வைத்து காபிராகிவிட்டார்கள். ஆகவே மாற்று மதத்தினரை “இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் மூலம் கண்ணியப்படுத்தி அழைப்பார்கள்”.
பெண்களையும் போராட்ட களத்துக்கு கொண்டு வந்து இது ஜிகாத் என்று கூறி பித்னாவுக்கு வழி அமைத்தல், இஸ்லாத்தில் பெண்கள் போர்க்களம் செல்ல அனுமதியில்லை. ஆனால் கவாரிஜ்களுக்கு பெண்களும் ஜிகாத் போர் செய்வது கட்டாயம் ஆகவே தான் காரீஜிய தலைவனான வலீத் இப்னு தரீப் அல் ஷைபானீ (கி.பி. 795) இறந்தவுடன் அவனது மனைவியான லைலா பிந்த் தரீப் என்பவள் தளபதி பதவி ஏற்று, அப்பாசிய கிலாபத்திற்கு எதிராக போர் செய்தாள். இந்த வழிமுறையை அப்படியே பின்பற்றியே பெண்களையும் ஆர்பாட்ட, போராட்ட களத்தில் இறக்கியவர்கள் நவீன காரீஜியாக்கள்.
மார்க்கம் அனுமதிக்காத ஆர்பாட்ட, போராட்ட களம் அமைத்து அதில் கண்ணியம் சிதைத்து, சமுதாயத்தில் ஆனையும், பெண் ணையும் நேருக்கு நேர் சந்திக்கச் செய்து சீர்கேட்டை உண்டாக்கினால் இதுதான் நடக்கும்.
மர்கஸ் பள்ளியில் முறையான, மறைவான தடுப்பு இன்றி ஒருவரை ஒருவர் சந்திக்க, சிந்திக்க வகை செய்தல். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தடுப்பு இரண்டடி அகலமுள்ள துப்பட்டா, பெண்களை அப்பட்டமாக பார்க்க ஒரு அழகிய ஏற்பாடு.
தாங்கள் நடத்தும் பெண்கள் மதரசா மற்றும் பள்ளிகளில் பணி புரியும் பெண் ஆசிரியை, மாணவிகளுடன் ஆண் நிர்வாகிகளின் சந்திப்பு ஏற்படுத்துகிற ஆபத்து.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவித்தது போல், அவர்கள் சிறு வயது இளைஞராக இருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாக இருப்பார்கள். இன்று தவ்ஹீது இயக்க இளைஞர்கள் அனைவரும் இளவட்டங்கள் தான். இவர்களின் அறிவு முதிர்ச்சி அண்ணனின் ஆன்மீக உரை மட்டுமே!
இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளை சிதைத்து, தான்தோன்றித்தனமாக சிந்தித்து செயல்படுபவர்களை அல்லாஹ் அடையாளம் காட்டி கேவலப்படுத்தி விடுவான் என்பதை வரலாற்று சம்பவங்களில் அல்லாஹ் காட்டி விட்டான். இதை அறிந்தும் மறந்த மனிதர்களை நமது சமகால சான்றாக காட்டுகின்றான் என்பதற்கு இன்றைய இயக்கதாரிகளே உதாரண புருஷர்களாக உள்ளனர் என்பதில் எவருக்கும் ஐயமுண்டோ?
(இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அத்தலைவர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள். இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டு விடும். (அல்குர்ஆன்: 2:166)
– எஸ். ஹலரத்அலி, திருச்சி-7.
source: http://www.readislam.net/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81