ஸஹர் சாப்பிடுவோரின் மீது இறையருள்!
ஸஹர் நேரம் என்ற அந்த அதிகாலை வைகறைப் பொழுது என்பது மனிதரெல்லாம் ஆழ்ந்து உறங்குகின்ற அதி அற்புத நேரம்.
இரவெல்லாம் உறங்காதவர் கூட தன்னை மறந்து மறந்தே உறங்கிப் போகின்ற நேரம். உலகின் எந்த மூலையில் வாழுகின்ற மனிதனும் சாப்பிடாத – சாப்பிடப் பிடிக்காத – மனம் ஒப்பாத ஒரு நேரத்தில் அல்லாஹுவுக்காக – அல்லாஹ்வின் ரஸுலுக்காக – அவர்களின் கட்டளைக்காக தங்களை முழுமையாக அர்பணித்தவனாக சாப்பிடுகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
“அல்லாஹுதஆலாவும், அவன் மலக்குகளும், ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்”.(அறிவிப்பாளர்: ஹள்ரத் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அத்தர்ஙீப்)
ஹள்ரத் ஹாபிஸ் இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி அலைஹி புகாரி ஷரீபின் விரிவுரையில் எழுதும் போது; “ஸஹர் சாப்பிடுவதால் பல வகையான பரக்கத்துகள் கிடைக்கின்றன.
சுன்னத்தைப் பின்பற்றுதல், வேதக்காரர்களுக்கு மாறு செய்தல் இன்னும் வணக்கங்கள் செய்ய சக்தியற்றவருக்கும், வணக்கத்தால் உற்சாகம் அதிமாகுதல், பசி அதிகமானால், உண்டாகும் தீய குணத்தைத் தடுத்தல், அந்த நேரத்தில் தேவையுள்ள யாசகன் வந்தால் உதவி செய்தல், பக்கத்து வீட்டார் ஏழ்மையுடைவராக இருந்தால் அவருக்கு உதவி செய்தல், அந்த நேரத்தில் து ஆ ஏற்கப்படுதல், ஸஹரின் பரக்கத்தால் துஆ செய்யும் நல்லுதவியும் கிடைத்து விடுதல், அந்நேரத்தில் திக்ரு செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தல் போன்ற பலவகை நன்மைகள் கிடைக்கின்றன” என எழுதுகிறார்கள்.
ஸஹர் நேர உணவிற்கு அல்லாஹ் தரும் அதி அற்புத ஆற்றல் இது. அன்டைம் எனச் சொல்லப்படும் காலம் கடந்த ஒரு நேரத்தில் சாப்பிடும் உணவிற்கு செரிமானத்தையும் தந்து – குடலின் இயக்கத்தை சீராக்கி நோன்பாளிக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆக்குகிறான் அல்லாஹ்.
பசி வந்தால் பத்தும் பறந்து விடும், பசித்தால் புலியும் புல்லை திண்ணும் எனச் சொல்லுவார்கள். ஆனால் நோன்பு வைத்திருக்கும் பசியாளிகள் கொஞ்சமும் நிதானம் இழக்காமல் கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறார்கள்.
பசி நேரத்தில் மனிதன் எதைக் கொடுத்தாலும் உண்டு விடுவது பழக்கம். நல்லதா? கெட்டதா? ஹலாலா? ஹராமா? ருசியானதா? இல்லையா? என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. கிடைத்ததும் விழுங்கத்தான் எத்தனிப்பான்.
அதே சமயம் ஒரு நோன்பாளி நோன்பின் மயக்கம், தாகம் மேலிட்ட போதும் கமகமவென மணக்கும் மிகருசியான அறுசுவை உணவுகளும், மனம் லயிக்கின்ற விருப்பமான பதார்த்தங்களும் பரப்பிவைக்கப்பட்ட போதிலும் நாவும் கரமும் சுவைக்கத் துடிதுடித்த போதிலும், மனதை ஒருநிலைப்படுத்தி நஃப்ஸை அடக்கி அல்லாஹ் தடுத்து விட்ட நேரத்தில் ஹலாலான உணவுகளைக் கூட ஹராமாக்கிக் கொள்கிறான்.
பசி இல்லாத நேரத்தில் சாப்பிட வைத்து பசிக்கின்ற நேரத்தில் சாப்பிட தடை விதிக்கும் இந்த விந்தையான கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து அல்லாஹ்வை மனமுவந்து ஏற்றுக் கொள்கின்ற நிறைவான தன்மையை உலகில் அல்லாஹ்வைத் தவிர யாரால் ஏற்படுத்திட முடியும்?