ஸகாத் பெட்டி
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
[ ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் சிலர் மட்டுமே முறைப்படி ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தீனிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐநூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத். இது முறையா?
ஐவேளைத்தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப் போலவே ஒவ்வொரு பள்ளியிலும் “ஸகாத் பெட்டி” ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் முறை. ஏனென்றால் தொழுகை, ஸகாத் இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். அவ்விரண்டையும் பிரிக்கக்கூடாது.
தொழுகைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதுபோலவே ஸகாத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை ஆலிம்கள் தாம் முன்னின்று செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆலிமும் ஒவ்வொரு பள்ளியிலும் “நான் ஸகாத் வாங்க மாட்டேன். உங்கள் ஸகாத்தை இதோ இந்த “ஸகாத் பெட்டியில் போடுங்கள்” என்று அறிவிப்புச் செய்து பாருங்கள். அதன்பின் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு உங்கள் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்படும்.]
ஸகாத் பெட்டி
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
இமாமாக உள்ள ஒவ்வொருவரும் தாம் பணியாற்றும் பள்ளிவாசலில் அவ்வப்போது ஏதாவது அறிவிப்புச் செய்யாமல் இருக்க முடியாது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகைக்குப் பிறகு அறிவிப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தனை அறிவிப்புகளிலும் எனக்குப் பிடித்த அறிவிப்பு ஒன்று உண்டு. அது ரமளானில் நான் செய்த அறிவிப்பாகும்.
“மக்களே! நீங்கள் உங்களுடைய ஸகாத், ஸதகா ஆகிய எதையும் இப்பள்ளியின் இமாமாகிய எனக்குக்கொடுக்க வேண்டாம்.
நான் ஸகாத், ஸதகா வாங்கமாட்டேன். அன்பளிப்பை மட்டுமே ஏற்றுக்கொள்வேன்.
எனவே ஸகாத், ஸதகா ஆகியவைகளை உங்களின் நெருங்கிய உறவினர்களுள் யாரேனும் ஏழைகளுக்குக் கொடுங்கள் அல்லது உங்கள் வீட்டருகில் உள்ள, உங்கள் தெருவில் உள்ள ஏழைகளுக்குக் கொடுங்கள்.
அப்படி ஏழைகள் யாரும் உங்களுக்குத் தென்படவில்லையானால், இதோ நம் பள்ளியில் உள்ள “ஸகாத் பெட்டி”யில் உங்கள் பணத்தைப் போடுங்கள்.
அதில் போடப்படுகின்ற பணம் அனைத்து நம் மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கும், கணவனை இழந்த கைம்பெண்களுக்கும், அநாதைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும்” என்று அறிவிப்புச் செய்தேன்.
இவ்வாறு அறிவிப்புச் செய்தபின் ஸகாத், ஸதகா இரண்டுமாக ஒரு பெருந்தொகை சேர்ந்தது. அதை எங்கள் மஹல்லாவில் உள்ள ஏழைப்பெண்களுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் பிரித்துக் கொடுத்தோம். ஏழைகள் வாழ்த்தினார்கள். துஆச் செய்தார்கள்.
ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுல் சிலர் மட்டுமே முறைப்படி ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தீனிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐநூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத்! இது முறையா?
இதற்கு முறையான வழிகாட்டுதலை யார் வழங்க வேண்டும்? ஒவ்வொரு பள்ளியிலும் “ஸகாத் பெட்டி” உண்டா? இத்தகைய அறிவிப்பு உண்டா? மக்கள் வழங்கும் ஸகாத், ஸதகாவை ஆலிம்கள் பலர் தாமே வாங்கிக் கொள்கின்றார்கள். சரி, அவர்களுல் மிகவும் ஏழைகளாக இருந்தால் வாங்குவது பரவாயில்லை. ஆனால் அவர்களுள் ஸகாத், ஸதகா வழங்க தகுதியுள்ளோரும் எதுவும் பேசாமல் வாங்கிக்கொள்கிறார்களே, ஏன்?
ஐவேளைத்தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப் போலவே ஒவ்வொரு பள்ளியிலும் “ஸகாத் பெட்டி” ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் முறை. ஏனென்றால் தொழுகை, ஸகாத் இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். அவ்விரண்டையும் பிரிக்கக்கூடாது.
தொழுகைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதுபோலவே ஸகாத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை ஆலிம்கள் தாம் முன்னின்று செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆலிமும் ஒவ்வொரு பள்ளியிலும் “நான் ஸகாத் வாங்க மாட்டேன். உங்கள் ஸகாத்தை இதோ இந்த “ஸகாத் பெட்டியில் போடுங்கள்” என்று அறிவிப்புச் செய்து பாருங்கள். அதன்பின் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு உங்கள் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்படும்.
இதனால் ஈருலகிலும் நன்மையுண்டு என்பதை நினைவில் நிறுத்துங்கள். இவ்வாறு செய்வதால் ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுப்போரைக் குறைக்கலாம்; பொருளாதாரத்திற்காக கற்புநெறி தவறுவோரை காப்பாற்றலாம்.
“தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் வழங்குங்கள்” (அல்குர்ஆன் 2:43) என்று அல்லாஹ் அல்குர்ஆனின் பல இடங்களில் இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறியுள்ளதை கூர்ந்து கவனியுங்கள்.
முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் யமன் நாட்டிற்கு ஆளுநராக பயணம் புறப்பட்ட நேரத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன அறிவுரைகள் நினைவுகூரத்தக்கன. அவற்றுள் ஒன்று, “நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான். அது அவர்களிலுள்ள செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு, அருகிலுள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என அவர்களுக்கு அறிவிப்பீராக!” (நூல்: புகாரீ 1496)
முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கட்டளையிடப்பட்ட இப்பணியை யார் செய்ய வேண்டும்? ஒவ்வொரு மஹல்லாவிலுள்ள இமாமும், பள்ளி நிர்வாகமும்தான் செய்ய வேண்டும். அங்குள்ள செல்வந்தர்களைக் கணக்கிட்டு அவர்களிடம் உரிய முறையில் ஸகாத்தைப் பெற்று அதை அங்குள்ள ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்குத்தான் உள்ளது.
பள்ளிவாசலில் ஓர் இமாமை நியமித்து, ஐவேளையும் கூட்டுத்தொழுகை நடைபெற நிர்வாகத்தினர் எவ்வாறு பணியாற்றுகின்றார்களோ அதுபோலவே ஸகாத்தை வசூல் செய்ய ஆள் நியமித்து அல்லது பள்ளிவாசலில் அதற்கான ஏற்பாட்டைச் செய்து வசூல் செய்வதும், அதை உரிய முறையில் ஏழைகளுக்குப் பங்கிட்டு வழங்குவதும் அவர்களையே சாரும்.
இப்பொறுப்பை யாரும் தட்டிக்கழிக்க முடியாது. இரண்டு கடமைகளுள் ஒன்றைச் செயல்படுத்துகின்ற அவர்களுக்கு இன்னொன்றைச் செயல்படுத்த என்ன தடை?
எனவே இந்த ஆண்டுமுதல் இந்த இரட்டைக் கடமைகளை ஒவ்வொரு மஹல்லா இமாமும், நிர்வாகமும் சேர்ந்து செயல்படுத்தத் தொடங்கட்டும். அதன் பயனாக நம்மிடையே உள்ள ஏழைகளின் பொருளாதார சிக்கல் தீரட்டும். சமுதாய மறுமலர்ச்சி தோன்றட்டௌம். உயர்ந்தோ அல்லாஹ் அதற்கான நல்வாய்ப்பை நமக்கு வழ்க்குவானாக.
o கட்டுரையின் சுருக்கம் மட்டுமே இங்கு இடம்பெற்றுள்ளது, முழு கட்டுரையை ”மனாருல் ஹுதா”, மாத இதழ் ஜூன், ஜூலை 2017 (பக்கம் 31-34) -ல் காணவும்.