தொழுகையில் கண்குளிர்ச்சி
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்; “எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் உள்ளது” (நஸாஈ).
இந்த கண்குளிர்ச்சி நமக்கும் வேண்டும்தானே! ஆனால் அதற்காக நாம் முயற்சிக்கிறோமா? பெரும்பாலானோர் கடமைக்காக தொழுதுவிட்டு செல்வதைத்தானே காண்கிறோம்.
‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (புகாரி). இந்த எண்ணம் தொழும்போது உள்ளத்தில் அழுத்தமாக பதிந்திருக்க வேண்டும்.
“தொழுகையில் கண்குளிர்ச்சி” யைப் பெற சில காரணிகளை பார்ப்போம்.
1. தொழுகையின் ஒவ்வொரு கட்டத்தையும் நிதானமாகச் செய்ய பழக வேண்டும். எக்காரணத்தையும் கொண்டு சிறிதும் அவசரப்படக் கூடாது.
2. ஓதும் திக்ரின் கருத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டு ருக்குஊ, சுஜூது செய்ய வேண்டும்.
3. தலையை சுஜூதில் வைக்கும்போது இதைவிட வாழ்க்கையில் உன்னதமான செயல், எதுவுமில்லை எனும் எண்ணம் வரவேண்டும். முழு இறை அடிமைத்தனமும் மனதில் உருவாக வேண்டும்.
4. இதை கடைப்பிடிக்கும்போது தரையில் நெற்றியை வைத்துவிட்டு திரும்பவும் தரையிலிருந்து நெற்றியை எடுக்கவே மனம் வராத நிலைமை உண்டாகும்.
எப்பொழுது தொழுகையில் ருக்குஊ, சுஜூது செய்துவிட்டு தலையை உயர்த்த மனம் வரவில்லையோ அப்போது உணரமுடியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன “தொழுகையில் கண்குளிர்ச்சி!”
முயன்று பாருங்கள் இன் ஷா அல்லாஹ் அந்த “அற்புத சுகம்” கிடைக்கும்.
-M.A.முஹம்மது அலீ