பெண்களுடைய விஷயத்தில் மூடநம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த வசனம்
டாக்டர் ஷேக் சையது M.D
نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ …’
‘உங்களது மனைவிகள் உங்களுக்குரிய விளை நிலங்களாகும். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள்.” (அல் குர்ஆன்: 2:223)
இந்த வசனத்தில் பெண்களை ஆண்களின் விளை நிலங்கள் என்று குறிப்பிடுகிறான். இதனை பார்க்கும் சிலர், பெண் உரிமையின் கழுத்து நெறிக்கப்படுகிறதே| என ஓநாய் கண்ணீர் வடிக்கிறார்கள். பெண்களை வெறும் விளைநிலங்களுக்கு ஒப்பிட்டு அவர்களின் சுயமரியாதை சாகடிக்கப்படுகிறதே இஸ்லாத்தில் என்று கூச்சலிடுகின்றன இந்த ஓநாய் கூட்டங்கள்.
இவர்களது மயக்கு வார்த்தையில் மதியிழந்த, புதுமைப் பெண்ணுலகம் படைக்கப்போவதாக வாய்சவடால் அடிக்கும் சில அபலைப் பெண்கள் கர்பப்பை சுதந்திரம் வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள். அதனுடைய பின்விளைவுகளின் பரிணாமத்தை புரிந்து கொள்ளாமலேயே வெற்றுக் கோஷம் எழுப்பும் இவர்கள், இந்த இறைவசனத்தின் அர்த்தத்தை சரியான முறையில் சிந்தித்து புரிந்து கொண்டால், சில வார்த்தைகள் கொண்ட இந்த வரியில் இவ்வளவு ஆழமான அர்த்தம் மறைந்திருக்கிறதா? என வியந்து போய்விடுவார்கள். தான் ஏமாற்றப்பட்டு, சுரண்டப்படுவதையும் புரிந்து கொள்வார்கள்.
புதுமைப் பெண்ணே! உன்னைத் திரும்பிப்பார்!
குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு, புதுமைப்பெண்ணே! நீதான் காரணம் என்று எத்தனை கொடுமைகளுக்கு உள்ளாக்கபட்டாய்! உன் கண் எதிரேயே நீ பெற்ற உன்னைச்சார்ந்த இனம் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டதே!
பெண்ணுரிமை பேசப்படும் இந்த நவீன கம்யூட்டர் யுகத்தில், பெண்ணுக்கு ஆண் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில்தான் உன் நிலை உயர்ந்திருக்கிறதா? நீ பெற்ற பெண் சிசுவை உன் கரத்தாலேயே கொலை செய்யப்படும் அளவிற்கல்லவா நீ துன்புறுத்தப்படுகிறாய்! ஏன்?
பெண்குழந்தை பிறப்பதற்கு நீதான் காரணம் என்று இந்த ஆண்வர்க்கம் கருதிக் கொண்டிருப்பதால் தான். உண்மையில் அவர்கள்தான் காரணம் என்பதை அடியோடு மறைத்தே விட்டார்களே! குழந்தை பிறக்காவிட்டாலும் உனது பெண்மையில் தான் முதலில் இந்த ஆண் வர்க்கத்திற்கு சந்தேகம் ஏற்படுகிறது, மருத்துவப் பரிசோதனைக்கு உன்னைத்தான் உட்படுத்துகிறது.
இறுதியில் பிள்ளைப்பேறு இல்லாத மலடி என்று முத்திரை குத்தப்பட்டு காலமுழுவதும் தண்டனைக்கு உள்ளாவது நீதானே! இவைகள் அனைத்திற்கும் ஆண்மகன் காரணமாக இருந்தாலும் தன்னை இந்த பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை, தன்னில் உள்ள குறைகள் வெளியேறிவிடாமல் இருப்பதில் மிக கவனமாக இருக்கிறது இந்த ஆணாதிக்கம் படைத்தவவர்கள்.
இந்நிலையில் பாலைத் தீர்மானிப்பதற்கு பெண்கள் காரணமல்ல, ஆண்கள்தான் காரணம் என்ற உண்மையை இந்த வசனம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, திணறிக் கொண்டிருந்த பெண்ணினத்தை, அவர்கள் அனுபவித்து வந்த வன்கொடுமைகளிலிருந்து விடுதலைப் பெறச் செய்து, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்துள்ளது.
குழந்தை பிறப்பதற்கு பெண் காரணம் அல்ல. அவள் ஒரு விளை நிலம். விதை விதைப்பவன் ஆண்மகன். அவன் எதை விதைக்கிறானோ அதனை அறுவடை செய்துக் கொள்வான். பெண் விதை விதைத்தால், பெண்ணையும், ஆண் விதை விதைத்தால் ஆணையும் அறுவடை செய்து கொள்வான், தன்னில் எந்த விதை விதைக்கப்படுகிறோ அதனை சரியாக பாதுகாப்பாக விளைவிப்பது மட்டும்தான் ஒரு பெண்ணின் பங்காக இருக்கமுடியும் என்ற உண்மையை இந்த இறைவசனம் தெளிவு படுத்துகிறது.
வினையை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான், திணையை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான் என்ற முதுமொழிக்கு ஏற்ப, எதை விதைக்கிறானோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
புல்லை விதைத்த ஒரு விவசாயி நெல்லை அறுவடை செய்ய வேண்டும் என ஆசைப்படுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நெல்லை அறுவடை செய்ய முடியவில்லையே, வீணாப்போன இந்த நிலம் நெல்லை விளைவிக்க வில்லையே என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தால் அவனை பைத்தியக்காரன் என்று நாம் ஏசமாட்டமோ?
பெண் ஒரு விளைநிலம். நீ எதை விதைக்கிறாயோ அதனையே பெற்றுக் கொள்ள முடியும், அதற்கு மாற்றமாக எதையும் பெற்றுக்கொள்ளமுடியாது என்ற இந்த உண்மையை முதன் முதலில் உலகிற்கு சொன்னது இறைவேதம் குர்ஆன் அல்லவா? இதன் மூலம் எத்தனை கோடிப்பெண்களுக்கு உயிர் வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று புதுமைப் பெண்ணே! சிந்தித்துப்பார்!.
மூட நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த வசனம்
சில வார்த்தைகளைக் கொண்ட இந்த சிறிய வசனம் பல்வேறு சமூகப்பிரச்சனைகளுக்கும், தீர்வு காண முடியாமல், நீதி மன்றங்களில் நிலுவையில் தேங்கிக் கிடக்கும் பல வழக்குகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் சரியான தீர்வு சொல்லிக் கொண்டிருக்கிறது.
பின்புறமாக முன் பக்கத்தில் உடலுறவு கொள்வதால் பிறக்கும் குழந்தை பார்வை குறையுள்ளதாக (மாலைக் கண்) இருக்கும் என்று மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் மதத்தின் பெயரால் சொல்லி மதீனா வாழ் மக்களை நம்பவைத்து, பயமுறுத்தி வந்தார்கள். இந்த மூட நம்பிக்கையைத் தகர்ப்பதற்காகத்தான் இந்த வசனம் அருளப்பட்டது என்று பல விரிவுரையாளர்கள் கருத்துக் கூறுகிறார்கள். இதன் படி மதத்தின் பெயரால் வதந்திகளை பரப்பி வருபவர்களுக்கு மிகப் பெரும் சாட்டையடியாக இந்த வசனம் அமைகிறது.
பெண்கள் பல ஆண்களை மணக்கலாமா?
ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களை மணக்க முடியாது என்று இஸ்லாம் கூறிவருகிற சட்டத்திற்கு சரியான காரணத்தை இந்த வசனம் எடுத்துரைக்கிறது. உலக நடை முறையில் ஒரு விளை நிலத்தில் ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே பயிரிட முடியும். பலர் சேர்ந்து சாகுபடி செய்தால் எந்த பயிர் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் பல பிரச்சனைகளும், சண்டை சச்ரவுகளும் உருவாகிவிடும். விதைவிதைத்த ஒவ்வொருவரும் உரிமை கேட்டுப் போராடுவார்கள். சமூத்தில் வேண்டாத பிரச்சனைகள் தோன்றுவதற்கு அது காரணமாக ஆகிவிடும்.
அது போல விளைநிலமாக இருக்கும் ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆண்மகனைத்தான் மணம் முடிக்க முடியும். அவ்வாறில்லாமல் ஒரே நேரத்தில் ஒரு பெண் பல ஆண்களை மணமுடித்துக் கொள்ள நேர்ந்தால், அந்த பல கணவன்களும் அவளுடன் ஒரே நேரத்தில் இல்வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். அப்போது அவளுக்கும் பிறக்கும் குழந்தை எந்தக் கணவனுக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்வதற்குள் அமர்களமான போர்களமே உருவாகிவிடும்.
நல்ல குழந்தையாக இருந்தால் ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடுவார்கள். குறையுள்ளதாக பிறந்திருந்தால் எல்லோரும் பின்வாங்கிவிடுவார்கள். அப்போது தந்தை விலாசம் இல்லாத குழந்தைகள் உருவாகி, சமுதாயத்தின் தலைவலிகளாக வளர்வார்கள். அது போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வினைத்தான் இந்த வசனம் கூறுகிறது.
இன்னொரு சட்டத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்த வசனம் வழிவகுக்கிறது. அதாவது வசதி வாய்ப்புகள் உள்ள ஒருவன் பல விளைநிலங்களுக்கு சொந்தக்காரனாகவும், அதில் பயிரிடுவதற்கும் உரிமையுள்ளவனாகவும் இருப்பதைப் போல ஒரு ஆண் பல பெண்களை திருமணம் முடித்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் இந்த வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. பல திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி என்பதற்கு எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணமுடித்துக் கொள்ளலாம் என்று சிலர் தவறாக புரிந்து கொள்ளலாம் என்பதால் அதற்கான உச்ச வரம்பு நான்கிற்குள்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இஸ்லாத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது. பல திருமணம் செய்வது அனுமதிதானே தவிர, கட்டாயமில்லை என்பதையும் இந்த இடத்தில் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
விதவைகள் விறகு கட்டைகளா?
கணவனை இழந்த பெண் விதவைகள் வாழ தகுதியில்லாதவர்கள் எனக் கருதி, கணவனுடன் சேர்ந்து உடன் கட்டை ஏற்றப்பட்டு, உயிருடன் எரித்துக் கொள்ளும் கொடுமை கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நமது நாடு இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது. விதவைகள் கணவனை எரிக்கும் விறகு கட்டைகளா என்ன? இந்த கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்த முதல் மதம் இஸ்லாம்தான். கணவனை இழந்த ஒரு பெண், உயிர் வாழும் உரிமை இழந்தவள் என ஓதுக்கப் பட வேண்டியவளல்ல. மறுமணம் முடித்து பயனுள்ள ஒரு விளை நிலமாக இன்னொருவன் விரும்பினால் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த வசனம் நமக்கு போதிக்கிறது.
ஒருவனுக்குச் சொந்தமான நிலம் அவன் தனக்குத் தேவையில்லை என விட்டுவிடும் போது, அந்த நிலத்தை வேறொருவன் வாங்கி பயன்படுத்திக் கொள்வது எவ்வாறு இயல்பானதோ, மேலும் அந்த நிலத்தை பயன்படுத்தாமல் விட்டுவிடுவது எவ்வளவு பெரிய அறியாமையோ அது போல கணவனால் வேண்டாமென கைவிடப்பட்ட, அல்லது கணவனை இழந்த ஒரு பெண்ணை விரும்பும் மற்றொருவன் மணந்து, அவளுக்கு வாழ்க்கை கொடுப்பது இயல்பானதும், சமூகச் சீரமைப்பிற்கு அவசியமானதுமாகும் மனைவி கணவனின் விளைநிலம் என்பதால் அந்த நிலத்தை பயன்படுத்தாமல் விட்டுவிடுவது சமூகக் குற்றமுமாகும் என்பதை இந்த வசனத்தின் மூலம் புரிந்து கொள்கிறோம்.
ஆலமரத்தை சுருட்டி விதையில் வைத்தவன் யார்?
மனைவிகள் உங்களின் விளைநிலம் எனச்சொல்லப்பட்டதில் நாம் புரிந்து கொண்ட அர்த்தங்கள்தான் இத்தனை என்றால், இன்னும் நாம் அறியாத அர்த்தங்கள்தான் எத்தனையோ? ஆலமரத்தைச் சுருட்டி விதையில் வைத்தவன் யாரோ அவன் இறக்கி வைத்த அருள் வாக்குதான் இந்த வசனம் என்பதை நம்மையும் அறியாமல் நமது நாவு உறக்கக் கூறிக் கொண்டிருப்பது நமது செவிகளில் விழுகிறது. இந்த குர்ஆன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற ஒரு மனிதரால் சொல்லப்பட்டிருக்க முடியாது, எல்லாம் அறிந்த இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்பதற்கு இந்த ஒரு சிறிய வசனமே போதுமான ஆதாரமாகும். இதனைச் சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு அத்தாட்சிகள் பல உண்டு.
-இஸ்லாம் கல்வி.காமில் வெளியான “இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” கட்டுரையிலிருந்து