அநீதிக்கு உதவி செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள்
அநீதிக்கு உதவி செய்பவர்கள்
அதிகாரம் உள்ள பதவிக்கு வருபவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுகம் காண்கிறார்கள்.
மக்களின் தேவைகளையும் அவர்களின் விருப்பங்களையும் கண்டு கொள்வதில்லை.
இப்படிப்பட்ட தலைவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி அநீதிகளை தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொய்களையும் சரி காண்பவர்களும் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் தலைவர்களிடம் சில பலன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் செய்தியின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
”எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள்.
அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள்.
அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை.
நான் அவனைச் சார்ந்தவனும் இல்லை.
அவர்கள் (மறுமைநாளில்) ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வர மாட்டார்கள்.
அநீதிக்கு உதவி செய்யாதவர்
யார் அவர்களிடம் (அநீதி இழைக்கும் தலைவர்களிடம்) செல்லாமல் அவர்களின் அநீதிக்கு உதவி செய்யாமல் அவர்களின் பொய்களை உண்மைப்படுத்தாமல் இருப்பார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன். அவர்கள் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வருவார்கள்”
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதீ 2185, நஸயீ 4136, அஹ்மத் 17423)