குர்ஆன் சுன்னாஹ் பார்வையில் சாபத்திற்குரியவர்கள்
இறைவனின் சாபத்திற்குரிய காரியங்களைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கட்டாயமாகும். சாபத்திற்குரிய காரியங்கள் எவை? என்பதை விளக்குகிறது இத்தொகுப்பு.
o சாபத்தைக் குறித்த குர்ஆன் வசனங்கள்
o சபிப்பதைத் தடை செய்யும் நபி மொழிகள்
o யாரைச் சபிக்கலாம்? யாரைச் சபிக்கக்கூடாது?
சாபத்திற்குரியவர்கள்
1. இணை வைத்தல் மற்றும் அதனைச் சார்ந்த செயல்களைச் செய்பவர்கள்.
2. விதியைப் பொய்ப்பிக்கக் கூடியவர்கள்
3. புனித பூமிகளான மக்கா, மதீனா போன்ற இடங்களில் கலகம் செய்பவனுக்கும், அனாச் சாரங்கள் செய்பவனுக்கும் அடைக்கலம் தருபவர்கள்.
4. மக்கள் நடமாடும் பாதை போன்ற பொது இடங்களை அசுத்தப்படுத்துபவர்கள்.
5. மார்க்கக் கடமைகளைத் தட்டிக் கழிக்கத் தந்தி ரங்களைக் கையாள்பவர்கள்.
6. பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவர்கள்.
7. ஆண்களைப் போல் நடக்கும் பெண்கள், பெண் களைப் போல் நடக்கும் ஆண்கள்.
8. இறைவனின் இயல்பான படைப்பில் மாற்றம் செய்பவர்கள்.
9. பிறர் செல்வத்தை அபகரிப்பவர்கள்.
10. உலகப் பேராசை
11. நபி தோழர்களை விமர்சிப்பவர்கள்.
12. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர்கள்.
13. கணவனின் கடமைகளை நிறைவேற்றத் தவறும் மனைவி.
14. மண்ணறைகளுக்குச் செல்லும் பெண்கள், ஒப்பாரி வைத்து அழும் பெண்கள்.
15. மது அருந்துபவர்களும், அதை ஆதரிப்பவர்களும், அதற்குத் துணை நிற்பவர்களும்.
சாபத்தைக் குறித்த குர்ஆன் வசனங்கள் :
*நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும், யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமை உடையவர்களும் சபிக்கிறார்கள்.
*எவர்கள் பாவமன்னிப்புத் தேடி (தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர; மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
*யார் நெறிநூல் (உண்மைகளை) நிராகரிக்கிறார் களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.
*அவர்கள் அ(ச்சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள். அவர்களுடைய வேதனை இலே சாக்கப்படமாட்டாது. மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப் படமாட்டாது. (அல்குர்ஆன் 2:159-162)
*இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து காஃபிராகி விட்டவர்கள் தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்ட ளைக்கு)மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
*இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களை விட்டு ஒருவரையயாருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவை எல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். (அல்குர்ஆன் 5:78,79)
*அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள். இத் தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். (அல்குர்ஆன் 11:18)
*எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார் களோ பூமியில் ஃபஸாது(விஷமம்) செய்கிறார்களோ அத்தகையோருக்குச் சாபந்தான். அவர் களுக்கு மிகக் கெட்ட வீடும் இருக்கிறது. (அல்குர்ஆன் 13:25)
*எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு காட்சிகள் இல்லாமலிருந்தால் அவர்கள், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி,
*ஐந்தாவது முறை, (இதில்) தான் பொய் சொல்வ தாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும் என்றும் (அவன் கூற வேண்டும்). (அல்குர்ஆன்: 24:6,7)
*எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதைப் பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர் கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 24:23)
*மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத் துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம். இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
*இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம். கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள். (அல்குர்ஆன் 28:41,42)
*எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர் களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் சபிக்கின்றான். மேலும் அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப் படுத்தி இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:57)
*முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீயச் செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லை யானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கை கள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாகச் சாட்டு வோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால) மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.
*அ(த்தகைய தீ)வர்கள் சபிக்கப்பட்டவர்களா வார்கள். அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக் கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 33:60,61)
*(போருக்கு வராது) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடு வதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?
*இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான். (அல்குர்ஆன் 47:22,23)
சபிப்பதைத் தடை செய்யும் நபிமொழிகள்:
பொதுவாகவே, யாரையும் சபிப்பது கூடாது. அதிலும் குறிப்பாக ஒரு முஸ்லிம் பிறரை வாழ்த் துபவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர சபிப்பவனாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
அல்லாஹ்வின் சாபம் உம்மீது உண்டாகுக! என்றோ அல்லாஹ்வுடைய கோபம் உம்மீது உண்டாகுக! என்றோ, நீர் நரகத்திற்குச் செல்க! என்றோ நீங்கள் ஒருவர் மற்றவரை ஏசாதீர்கள். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அபூதாவூத், திர்மிதி : 2070)
அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பவர் களுக்குக் கேடு விளைவிக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சி அவர்களைச் சபியுங்கள்! என்று கூறப்பட்டதற்கு நிச்சயமாக நான் அரு ளாகவே அனுப்பப்பட்டுள்ளேன்; சபிப்பவனாக அனுப்பப்படவில்லை என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரழி), நூல்: முஸ்லிம்: 2071)
ஏசிக்கொள்ளும் இருவரின் ஏச்சின் பாவம் முதலில் ஏசத் துவங்கினாரே அவர் மீது ஏற் படும். ஆனால் அநியாயத்திற்குள்ளானவர் அளவு மீறாதிருக்கும் வரையில் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி : 2073)
மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களையும் பிராணிகளையும் கூட சபிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது அன்ஸார்களில் ஒரு பெண்ணின் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்திருந்தார். அந்த ஒட்டகம் முரண்டு பிடித்த போது அப்பெண் அ(ந்த ஒட்டகத்)தைச் சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் மீதுள்ளவற்றை அகற்றி விட்டு அதை விட்டுவிடுங்கள்; அது சாபத்திற் குள்ளானதாகும் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்: 5058)
அப்படியானால் முரண்டு பிடிக்கின்ற மாடு போன்றவைகள் சபிக்கப்பட்டவைகளா? என்றால், அந்த அர்த்தம் இல்லை. மாறாக, அந்த பெண்ணுக்குத்தான் அது தண்டனை. அவளு டைய கூட்டத்தாரோடு அவள் தாமதமாகப் போய் சேர்ந்தாள். இது அந்த பெண்ணுக்குத் தான் தண்டனை; ஏனெனில் பிராணிகளைச் சபிக்கக் கூடாது என்று ஏற்கனவே தடை செய் யப்பட்டதைத் தெரிந்திருந்தும் அந்தப் பெண் மணி சபித்தாள். விட்டுவிடு என்று சொன்ன திலிருந்து அவள் விட்டுவிட வேண்டும். மற்றவர்கள் வந்து அதை ஓட்டிக்கொண்டு சென்று விடலாம் என்று பொருளல்ல. மாறாக, பிறகு வந்து ஓட்டிக்கொள்ள வேண்டும் என்று பொருளாகும்.
யாரைச் சபிக்கலாம்? யாரைச் சபிக்கக் கூடாது?
1. ஒரு முஸ்லிமை குறிப்பிட்டுச் சபிப்பது, இது ஹராமாகும். எந்த ஒரு முஸ்லிமையும் சபிப்பது கூடவே கூடாது.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தி யம் செய்கிறவர். தாம் சொன்னதைப் போன்றே ஆகி விடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன் றில் நேர்ச்சை செய்வதும், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும் எந்த மனிதனுக்கும் தகாது. எதன் மூலம் தம்மைத் தாமே தற்கொலை செய்து கொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறை நம்பிக்கையாளர் ஒருவரை இறை மறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.
இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ளஹ்ஹாக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 6047)
2. குறிப்பிட்டக் குணங்களை அடிப்படையாகக் கொண்டு சபிப்பது உதாரணமாக : அநியாயக்காரர்கள், பொய்யர்கள், பாவிகள், மார்க்கத்தில் புதிய விஇயங்களைத் தோற்றுவிப்பவர் கள் இவர்களை சபிப்பது அறிஞர்களின் ஏகோ பித்த முடிவின்படி கூடும் என்று ஹைஸமீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர் கூறுகின்றனர்.
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) இறுதி நெறிநூல் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக(இந்த குர்ஆன் மூலமே அல் லாஹ்விடம்) வேண்டிக் கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(நெறிநூல்)து அவர்களிடம் வந்தபோது, அதை நிராகரிக்கின்றார்கள். இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது) (அல்குர்ஆன் : 2:89)
(நபியே!) இது பற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால், வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்! என நீர் கூறும். (அல்குர்ஆன் 3:61)
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள், இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். (அல்குர்ஆன் 11:18)
எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறு தியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகி றார்களோ இன்னும், அல்லாஹ் சேர்த்துவைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ பூமியில் ஃபஸாது செய்கிறார்களோ, அத்தகையோருக்குச் சாபந்தான், அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் இருக்கிறது. (அல்குர்ஆன் 13:25)
3. இறை மறுப்பாளர்களில் குறிப்பிட்டு சபிப்பது இதைக் குறித்த மூன்று வகையான கருத்துக்கள் உள்ளன.
அ. இறை நிராகரிப்பாகவே வாழ்ந்தார். ஆனால், இறப்பு எப்படி இருந்தது? என்று தெரியாது என்றால், அவர் காஃபிராக மரணித்திருந்தால் அவர் மீது சாபம் உண்டாகட்டும்! என்று வரையறுத்துக் கூறவேண்டும். அதாவது அவரது மரணம் இறை மறுப்பிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழித்தும், பழித்தும் கவிதை இயற்றிக் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவனைக் குறித்துக் கூறுகையில், அவன் காஃபிராக மரணித்திருந்தால் அவன் மீது சாபம் உண்டாகட்டும்! என்று கூறியதோடு அவன் இயற்றிய கவிதைகளையும் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது வரலாற்று நூலான அல்பிதாயா வந்நிஹாயா வில் பதிவு செய்துள்ளார்.
இ. இறைமறுப்பாளர்களில் குறிப்பிட்ட நபரைச் சபிப்பது அதாவது அவர் வாழ்கின்ற காலத்திலேயே அவரை சபிப்பது, இது கூடுமா?
கூடாது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து.
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று சொன்ன பின்பு இறைவா! வலீத் இப்னு வலீத் ஸலமா இப்னு ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுதாயத் தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர் களுக்கு அளிப்பாயாக! என்று பிரார்த்திப் பார்கள். அதைச் சப்தமாகச் சொல்வார்கள். தம் ஃபஜ்ரு தொழுகைகள் சிலவற்றில், இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எந்த உரிமையும் இல்லை எனும் (திருக்குர்ஆன் 3:128வது) வசனத்தை அருளும் வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள். (நூல்: புகாரி 804, 1006, 3386, 4560)
இந்த நபிவழியை வைத்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இறைமறுப்பாளர் கள் எவரையும் குறிப்பிட்டுச் சபிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று ஹதீஃத் சட்டக்கலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
4. தவறு செய்துவிட்ட குற்றமிழைத்துவிட்ட முஸ்லிமைச் சபிக்கலாமா?
உமர் இப்னு அல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார்(கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக் கப்பட்டு வந்தார். அவர் இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சிரிக்க வைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப் பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒரு வர் இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட் டும். இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார் என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன் என்று கூறினார்கள். (நூல்: புகாரி 6780)
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: போதையிலிருந்த ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி டம் கொண்டு வரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, எங்களில் சிலர் அவரைக் கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப்பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பிய போது ஒருவர் (அவரைப்பார்த்து), அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும் என்றார். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உங்கள் சகோதரருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத் துழைப்புச் செய்து விடாதீர்கள் என்றார்கள். (நூல்: புகாரி: 6781)
இவை ஒரு முஸ்லிம் பாவமே செய்துவிட்டாலும் அவனைச் சபிக்கக்கூடாது என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கின்றன. பின்வரும் இந்த ஹதீஃதை வைத்து இப்னு ஹஜர்(ரஹ்) போன்ற சிலர், முஸ்லிம்களில் பாவம் செய்து விட்டவர்களை சபிக்க அனுமதி உண்டு என்கின்றனர்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5194)
எனினும் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றவர்கள் பாவம் செய்துவிட்ட முஸ்லிமைச் சபிப்பதற்கு அனு மதியளிப்பதாக இந்த ஹதீஃதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. மேலும், தக்கக் காரணமின்றி இறைமறுப்பாளர்களையே சபிக்கக் கூடாது எனும் போது முஸ்லிமை எந்த வகையிலும் சபிப்பதற்கு அனுமதியே இல்லை என்பது தான் சரி என்று கூறுகிறார்கள்.
1. இணைவைத்தலும் அதைச் சார்ந்த செயல்களும்
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கி றான்; பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான்; தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்; (மார்க்கத்தின் பெயரால்) புதுமையை (பித்அத்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4002, 4003)
இந்த ஹதீஃதில் நான்கு நபர்கள் சபிக்கப்பட்டுள்ளார்கள்.
1. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்து பலியிடுபவர். அதாவது சிலை, சிலுவை, சமாதி போன்றவைகளுக்காகவோ அல்லது ஆதம் அலைஹிஸ்ஸலாம், நூஹ் அலைஹிஸ்ஸலாம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், மூஸா அலைஹிஸ்ஸலாம் போன்ற இறைத்தூதர்களின் பெயராலோ அல்லது அவர்களது அடக்கத் தலங்களிலோ அறுத்துப் பலியிடுதல் அல்லது ஸஹாபாக்கள், பெரியார்கள் மகான்களின் அவுலியாக்களின் நினைவாகவோ அவர்களின் அடக்கத்தலத்திற்கோ சென்று அறுத்துப் பலியிடுதல் இப்படிப்பட்ட அனைத்துமே அல்லாஹ் அல்லாதவற்றுக்காக அறுத்துப் பலியிடுதல் என்பதிலேயே சேரும். இவையனைத்தும் இணைவைத்தலாகும், இணைவைத்தல் சாபத்திற்குரிய செயலாகும்.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றி யின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள்மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலை யில், வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர் பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச் சயமாக அல்லாஹ் கருணை மிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:173)
2. பெற்றோரை சபிப்பவன், இவனும் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளாகிறான். பெற்றோரை சபிப்பது இன்றைய காலத்தில் வேண்டுமானால் எங்காவது பார்க்கலாம். ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இது ஆச்சரியமானதாகத் தெரிந்தது. அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் பெற்றோரை சபிப்பார்களா? என்றெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள்.
ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்? என்று கேட்கப்பட்டது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்) என்றார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5973)
3. பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடுபவன். இவனும் அல்லாஹ்வின் சாபத் திற்குரியவனாகிறான். அடையாளச் சின்னங்கள் என்பது புனித மக்கா மதீனா போன்ற நகரங்களிலுள்ள அடையாளச் சின்னங்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், உலக நிலப்பரப்புக்களில் உள்ள அனைத்து அடையாளச் சின்னங்களையும் இது குறிக்கும். மற்றவருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொள்ள அவருடைய அடையாளச் சின்னத்தை மாற்றி விடுவது என்பது இதன் பொருளாகும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
பிறரின் நிலத்தின் ஒரு பகுதியை அபகரித் தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். (அறிவிப்பாளர் : ஸயீத் இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2452)
அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறி னேன். அவர்கள் சொன்னார்கள். அபூஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிற வரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்கவிடப்படும் என்று கூறினார்கள். (நூல் : புகாரி: 2453)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய்விடுவான். (அறிவிப்பாளர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி: 2454)
4. மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளிப்பவன், இவனும் இறைவனின் சாபத்திற்குரியவனே.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த(மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகி றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக் கப்பட்டதாகும். (அறிவிப்பாளர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி: 2697)
மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை உருவாக்குபவனல்ல மாறாக, அதற்கு அடைக்கலம் தருபவன் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளாகிறான் என்றால் அதை உருவாக்குபவனுடைய கதி என்ன என்பதை யோசிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும்போது என்னை விட்டு அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். அப்போது நான் (இவர்கள்) என் தோழர்களாயிற்றே! என்பேன். அதற்கு இறைவன் உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக் கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட் டீர்கள் என்பான். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி: 6582)
இறந்தவருக்கு அவர் நல்லடியார்(?) என்ற நம்பிக்கை அடிப்படையில் சமாதி எழுப்புவது மயிலிறகால் மந்திரிப்பது அந்த அடக்கத் தலத் தில் சென்று மொட்டை போடுவது பத்தி ஏற்று வது சந்தனக் கூடு உரூஸ் கொண்டாடுவது நேர்த்திக்கடன் செலுத்துவது இது ஒருவகை. இன்னொரு வகை இறந்தவருக்கு 3ம் நாள் 7ம்நாள் ஃபாத்திஹா வருச ஃபாத்திஹா, நல்லடி யார் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவருக்கு அடக்கத்தலம் எழுப்புவது அந்த அடக்கத் தலத்தின் மீது பூக்கள் போடுவது. சந்தனம் தெளிப்பது, அதேபோல் பெண் சடங்காகி விட்டால் அதைப் பகிரங்கப்படுத்துவது, அதை நிகழ்ச்சியாகக் கொண்டாடுவது; திருமணம் போன்ற நேரங்களில் மணமகனை மலர்களால் அலங்கரிப்பது சேவல், ஆடு போன்றவற்றால் மணமகனை திருஷ்டி கழிப்பது குதிரை சவாரி செய்வது பைத் பாடியவாறு மணமகனை அழைத்து வருவது திருமணத்தில் கருகமணி கட்டுவது கணவன் இறந்ததும் அதை அறுத் தெறிவது ரஜப் மாதத்தில் பூரியான் பாத்தியா(?) ஷஃஅபான் மாதம் அல்வா பாத்தியா ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு தெருவுக்குத் தெரு இப்படி இஸ்லாமிய சமுதாயத்தில் ஊடுருவி விட்ட நூதன, குர்ஆன், ஹதீஃதில் இல்லாத இஸ்லாம் காட்டித் தராத அனாச்சாரப் பழக்கங்களின் பட்டியல் மிக நீளமானவை. இவற்றைச் செய்து கொண்டிருக்கும் வரை அல்லது அதற்கு ஆதர வளித்துக் கொண்டிருக்கும் வரை அல்லது அவை மார்க்கத்திற்கு முரண்பட்டவை என்று உணராதவரை அவற்றைத் தூக்கியயறிய முன் வராதவரை முஸ்லிம்கள் இறைவனின் சாபத்தில் சிக்கியுள்ளார்கள் என்பதை உணர வேண்டும்.
அடைக்கலம் தருவது என்றால் என்ன?
மார்க்கத்தில் இல்லாத புதுமைகளைச் செயல் படுத்தப்படும் போது அதைக் கண்டும் காணா மலும் இருப்பது, அதைப் பார்த்துப் பொறுமை யுடன் இருப்பது. அது தவறு என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருப்பது. அதற்கு நிதி உதவி மூலம் ஊக்கப்படுத்துவது போன்றவைகள் ஆதரவளிப் பதில் அடங்கும். இன்னும் சிலர் மெளலூது ஓதும் மேற்கண்ட சடங்குகளுக்கு ஊதுகுழலாக இருக்கும் இமாமுக்குப் பின்னால் நின்று தொழு வது அவருக்கு ஆதரவளிப்பதாகவே அமையும் என்கின்றனர்.
இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முக்கியத் துவம் தரும் வீடுகளில் பெண் கொடுப்பது, பெண் எடுப்பது போன்றவைகளும் அவர்க ளுக்கு ஆதரவளிப்பதாகவே அமையும் என்கின் றனர். அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே நமது கடமை. அவர்களை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒதுக்குவது நமது பொறுப்பல்ல (2:272)
அப்படிச் செய்தால் அது 10:19, 41:45, 42:14,21 குர்ஆன் வசனங்கள், புகாரீ: 391,392,393 ஹதீஃதுகள் இவற்றை நிரா கரிக்கும் நிலை ஏற்படுகிறது. எச்சரிப்பதோடு சரி. நாளை மறுமையில் அல்லாஹ் தீர்ப்பளிப் பான். இங்கு எந்த நிலையிலும் சமுதாயத்தைப் பிளவுபடுத்த அனுமதி இல்லவே இல்லை. அல் லாஹ்வின் அதிகாரத்தை நம் கையில் எடுக்கக் கூடாது.
எஸ். ஷைஃபுத்தீன், மதுரை
source: https://almighty-arrahim.blogspot.com/2016/07/View-of-quran.html