பொருளுணர்ந்து ‘துஆ”ச்செய்வோம்
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
திருக்குர்ஆனில் ஏராளமான ‘துஆ’க்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ‘துஆ’வும் நம்மைப்படைத்த அந்த ஏக இறைவனே நமக்கு அவற்றைக்கொண்டு “அவனிடம்” கேட்குமாறு கற்றுக்கொடுப்பது போன்று அமைந்திருப்பதை என்றைக்கேனும் நாம் கவனித்திருக்கிறோமா?
தொழுகையாளிகளில் எத்தனை பேர் ‘துஆ’வின் அர்த்தத்தை விளங்கி ‘துஆ’ கேட்கிறோம்? மஸ்ஜிதில் இமாம்கள் செய்கின்ற ‘துஆ’வுக்கு “ஆமீன்” சொல்வதோடு சரி…! அதன் பொருள் என்னவென்பதைப் பற்றியெல்லாம் நமக்கு தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருப்பதில்லை. எல்லாம் நமது இமாம்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று நினைப்புதான் காரணமோ…?!
மேலுள்ள திருக்குர்ஆனிலுள்ள (நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் கேட்டதாக அல்லாஹ் குறிபிட்டுள்ள) ஒரு ‘துஆ’வின் அர்த்தத்தை ஒருமுறை படித்துப்பாருங்கள். எவ்வளவு பொருள் நிறைந்த ஒரு அற்புதமான ‘துஆ’ இது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.
இம்மை, மறுமை இரண்டிற்குமே பயனளிக்கும் இந்த பிரார்த்தனை; கலிமா சொன்ன ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய ‘துஆ’ என்று சொன்னால் அது மிகையல்ல.
நமது பகுதி முஸ்லிம்கள் கூட்டு ‘துஆ’வை மட்டும் போதுமானதாக ஆக்கிக்கிகொண்டதால் ‘துஆ’வின் அர்த்தத்தைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எண்ணிவிட்டார்களோ என்னவோ…!
பொருள் விளங்காமல் கேட்பது எவ்வளவு விசித்திரமான வினோதம் என்பதையெல்லாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
”தன்னிடம் கேட்காத அடியானைப்பற்றி அல்லாஹ் கோபம் கொள்கிறான்” என்பதை மறந்தது எனோ?!
எதையெதையோவை எல்லாம் மனப்பாடமிடும் நாம் அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பிரார்த்தைகளை பொருளுணர்ந்து கற்பதில் அலட்சியம் செய்வது எவ்வளவு பெரிய கைசேதம் என்பதை எண்ணிப்பாருங்கள்.
திருக்குர்ஆனிலுள்ள ஒவ்வொரு ‘துஆ’வும் மகத்தான பொக்கிஷம் என்பதை மறந்திட வேண்டாம்.பொக்கிஷத்தை உதாசீனப்படுத்தினால் நஷ்டம் நமக்குத்தான்.
www.nidur.info