அஹ்ஸாப் (அகழ்ப்) போரின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
முக்கியமான திருப்புமுனை என்று இஸ்லாமிய வரலாற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட நினைத்தால் அஹ்ஸாப் போரைக் குறிப்பிடலாம். இறை நம்பிக்கையாளர்களின் ஈமானிற்கு எதிரிகள் கூட உரைகல்லாக மாறிப்போன அற்புதத்தை அகழ் போரில் நாம் காணலாம்.
பகைவர்களைக் கண்டு, அவர்களுடைய பிரம்மாண்டமான படைகளைக் கண்டு பயப்படாமல், பீதி அடையாமல் பொங்கிப் பொங்கி ஈமான் பிரவாகம் எடுப்பது. உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் தான் என்கிற பேருண்மையும் அங்கே புலப்பட்டது!
‘அகழ்’* என்பது அராபியர்களுக்கு முன்பின் அறிமுகமாகாத ஒன்று! அகழைத் தோண்டும் தற்காப்புக் கலையால் குறைந்த எண்ணிக்கையிலான படையைக் கொண்டே மிகப் பெரிய எதிரிப்படையைச் சமாளிக்கும் வாய்ப்பு இருந்தது. உயிரிழப்பும் மிகவும் குறைவாகவே ஏற்படும்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குதிரை மீதேறி சுற்றிப் பார்த்து அகழ் வெட்ட வேண்டிய பகுதிகளைக் குறித்தார்கள்.
நகரம் மூன்று புறத்திலும் குன்றுகள் மற்றும் தோட்டங்காடுகளால் சூழப்பட்டிருந்தது. ஆதலால் வடக்கு பகுதியில் மட்டும் அகழ் வெட்டினால் போதும். இரு புறமும் உள்ள லாவே பாறைகளை இணைக்கும் விதத்தில், சலஃ குன்றின் மேற்கோரமாக சென்று முடியுமாறு அகழ் வெட்டப்பட வேண்டும்.
இராணுவ நடவடிக்கை ரீதியில் மளமளவென்று வெட்டும் பணி தொடங்கியது.
10 முழ அகலம், 8 முழம் ஆழமுள்ள அகழ் மூன்றரை மைல் நீளத்துக்கு வெட்டப்பட்டது.
ஆறு நாட்களுக்குள் இரவும், பகலுமாக வேலை செய்து பணி முடிக்கப்பட்டது. (பனூ குறைழாக்களிடமிருந்து வெட்டுவதற்குத் தேவையான எல்லா உபகரணங்களும் வந்து சேர்ந்தன.)
ஆறு நாட்களில் ஏறக்குறைய ஆறரை கிலோ மீட்டர் தூரம் அகழ் வெட்டுவது என்பது சாதாரண காரியமல்ல. சில பகுதியினர் தங்களுடைய சொந்த பாதுகாப்புக்காக மேலும் நீட்டி தங்கள் பகுதியில் குழி வெட்டிக் கொண்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களோடு சேர்ந்து இப்பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். மண் சுமந்தும், குழி வெட்டியும் இரவு பகலாக அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பாடுபட்டார்கள்.
போரில் கலந்து கொள்ள வேண்டிய அதே மூவாயிரம் தியாக சீலர்கள் தாம் அகழ் வெட்டும் பணியிலும் ஈடுபட்டார்கள். பத்துப் பத்துப் பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டார்கள்.
ஃகன்தக் என்றால் அகழ். இது ஃபார்ஸி வார்த்தையான ‘கஸ்தர்’ என்பதன் அரபாக்கம்.
குழியும் 20 முழம் (40 சாண் – 9.2 மீட்டர்) அளவுக்கு வெட்ட வேண்டும். குழியின் ஆழமோ 4 3.4 மீட்டர். அப்போது கூட 30,800 சதுர முழம் அளவு குழி வெட்டி, மண்ணை அப்புறப்படுத்துவதென்பது மலைக்க வைக்கும் காரியம்! விளையாட்டு அல்ல!!
மண்ணை அள்ளுவதற்குக் கூட போதுமான அளவு கூடைகள் இல்லை. குறைழா – விலிருந்து வந்தவை எல்லாம் பத்தாது. எனவே அபுபக்ரு, உமர் போன்றவர்கள் எல்லாம் கூட கைகளால் மண்ணை அள்ளி, அள்ளி துண்டுகளிலும், துணிகளிலும் கொட்டி எடுத்துச் சென்று அப்புறப்படுத்தினார்கள்.
வேலையை விரைவாக முடுக்கிட மேடைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே கண்காணிப்பாளர்கள் வேறு, பணியில் இருந்தார்கள். வானத்திலிருந்து வந்து குதித்த ஜின்களைப் போன்று பம்பரமாகச் சுழன்று அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அண்ணலும், ஸஹாபாக்களும் பாட்டுப் பாடியும், கவி புனைந்தும் தங்கள் களைப்பைப் போக்கிக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அகழ் (வெட்டும் பணியைப் பார்வையிடுவதற்காக அந்த இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது குளிரான காலை நேரத்தில் முஹாஜிர்களும், அன்சாரிகளும் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்காக அந்தப் பணியைச் செய்வதற்கு அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் படும் பசியையும், பாட்டையும் கண்ட போது, இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இறைவா!! வாழ்க்கை என்றால் அது மறுமை வாழ்க்கை தான்! (குறைகளிருந்தால்) மன்னித்து விடு முஹாஜிர், அன்சாரிகளையுந்தான்!” – என்று பாடிய வண்ணம் கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் ஸஹாபாக்களும், “வாழும் காலமெல்லாம் ஜிஹாதில் நிலைத்திருப்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோமே முஹம்மதுவிடம் அன்று!” (புஃகாரி – கிதாபுல் பராவு (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள் – அகழ்ப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அகழ் தோண்டினார்கள்.
அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களது வயிற்றின் (வெண்மையான) தோலை என்னை விட்டும் மண் மறைத்து விட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண் சுமந்து கொண்டே இப்னு ரவாஹா அவர்களின் யாப்பு வகைப் பாடல் வரிகளைப் பாடிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன் –
“இறைவா! நீ இல்லையென்றால் எமக்கு நேர் வழி என்பதேது?
தானதர்மம் என்பதேது? தொழகை தான் ஏது?
நிம்மதியைத் தந்தருள் பகைவரைச் சந்தித்து போரிடும் போது!
நிலைத்த உறுதியையும் கற்றுக் கொடு எம் கால்களுக்கு!
வதைத்து அநீதியிழைத்தார்கள் இப்பாவிகள் எமக்கே!
சோதனையில் சிக்க வைக்க நினைத்தால் விடமாட்டோமே
ஒரு ‘அபய்னா’, ‘அபய்னா’, (நாங்கள் இடம் தரமாட்டோம்
நாங்கள் இடம் தர மாட்டோம்)
என்ற கோரஸ் முழக்கம் எதிரொலித்தது கூடவே!
அந்த முழக்கங்களில், பாடல்களில் உயிரோட்டம் தெறித்தது. மதீனாவின் இஸ்லாமிய அரசை அவர்கள் உயிருக்குயிராய் நேசித்தார்கள். மனித குல வெற்றிக்கான இவ்வியக்த்தின் மீது அவர்களுக்கு ஆழமான பற்று இருந்தது. இத்தோடு இன்னொரு முக்கியமான காரணம் அவர்களுடைய ஆசான்.
இயக்கத் தலைவர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹாபாக்களுக்கு இணையாக புழுதியில் நின்று, மண் அள்ளி, கல் சுமந்து வேலை செய்து கொண்டிருந்தார். வேலை துவங்கியவுடன் வீட்டை விட்டு வெளியேறி இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருகிலுள்ள பாறையின் மீது கூடாரமடித்துத் தங்கினார்கள். (இன்று அவ்விடத்தில் மஸ்ஜிதுத் துபாப் உள்ளது)
பத்து நபர் கொண்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்கள். ஸல்மான் ஃபார்ஸி (ரழியல்லாஹு அன்ஹு) பத்து நபர்களின் வேலையை தனியாளாக செய்து கொண்டிருந்தார்கள். அவர் தமது குழுவில் தான் இடம் பெற வேண்டும் என்று எல்லாக் குழுக்களும் போட்டி போட்டன. எனவே, அதை முடிவுக்குக் கொண்டு வர இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) “ஸல்மான் எங்கள் அஹ்லுல்பைத் குழுவைச் சார்ந்தவர்!!” போட்டியும் குறைந்தது.
ஸல்மானின் பெருமையும் உயர்ந்தது! எந்த விதமான வசதி வாய்ப்பும் இல்லாமல் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த ஈமானை மட்டுமே பற்றிப் பிடித்துக் கொண்டு அந்த நம்பிக்கையாளர்கள் காரிருளிலும், கடுங்குளிரிலும் கலங்காது பணி செய்து கொண்டே இருந்தார்கள். பசி அவர்களின் வயிற்றைப் பிசைந்து கொண்டிருந்தது. கெஞ்சிக் கெஞ்சி ஓய்வை கேட்டுக் கொண்டிருந்தன கால்கள். இறைவன் மாபெரும் கருணையாளன். அவனுடைய கருணை பொங்கிக் கொண்டே உள்ளது “கருணை புரிவதை அவன் தன் மீது கடைமை ஆக்கிக்கொண்டான்.” (அல்அன்ஆம்)
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுவதைக் கேளுங்கள்..
“அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, ‘இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன்.
உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?’ என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு ‘ஸாவு’ அளவு வாற்கோதுமை இருந்தது. வீட்டில் ஓர் ஆட்டுக்குட்டியை வளர்த்து வந்தோம். அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும் போது அவளும் (அரைத்து) முடித்து விட்டாள். மேலும் அதைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியில் போட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும் போது என் மனைவி ‘அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும், அவர்களடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்தி விட வேண்டாம். “உணவு கொஞ்சம் தான் இருக்கின்றது’ என்று கூறி விடுங்கள்” என்று சொன்னாள்.
நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து ரகசியமாக “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு ‘ஸாவு’ அளவு வாற் கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்” என்று அழைத்தேன்.
அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உரத்த குரலில், “அகழ் தோண்டுபவர்களே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே விரைந்து வாருங்கள்” என்று அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம்) “நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பி லிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்”, என்று கூறினார்கள்.
நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். இறைத்தூதர் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி (கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள்.
உடனே நான், இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன் என்று கூறினேன். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். இறைத்தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் – வளம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள்.
பிறகு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (என் மனைவியிடம்) “ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைத்துக் கொள்! அவள் உன்னோடு ரொட்டி சு,டட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொண்டிரு! பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே!” என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.
ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள் – “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் அந்த உணவை சாப்பிட்டு விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போதும் எங்கள் சட்டி நிறைந்தவாறு சப்தமெழுப்பி கொதித்துக் கொண்டிருந்தது! அது (கொஞ்சங்கூட குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது! மேலும் எங்களுடைய குழைத்த மாவும் (கொஞ்சமும்) குறைந்து விடாமல் முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.” (புஃகாரி – கிதாபுல் மகாஸி)
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மண் சுமந்தார்கள். உடைக்க முடியாத பாறை தென்பட்ட போது அதை உடைத்தும் தந்தார்கள். “நாங்கள் அகழ்ப்போரின் போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல் ஒன்று வெளிப்பட்டது. (எவ்வளவோ முயன்றும் எங்களால் அதை உடைக்க முடியவில்லை.
உடனே இது பற்றித் தெரிவிக்க) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்று ‘இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகின்றது’ என்று கூறினோம்.
அதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘நான் இறங்கிப் பார்க்கிறேன்’ என்று கூறி விட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு இறைத்தூதர் அவர்கள் குத்துக் கோடாரி எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமலைகளாக மாறியது.” என்று ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள். (புஃகாரி – கிதாபுல் மகாஸி)
இஸ்லாமியப் பணிகளைச் செய்யும் போது யாரேனும் ஒருவர் சிறப்புச் சலுகையை எதிர் பார்ப்பதோ, அந்தஸ்த்துக்கு ஆசைப்படுவதோ கூடாது. அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) – இஸ்லாமியத் தலைவர் – அவர்களே களத்தில் தோழர்களோடு தோழராக நின்று பணிபுரிந்ததால் இந்த நிலைமை ஏற்படவில்லை. இறைத்தூதர் தானே அழகிய முன் இராணுவத் தளபதியாக படையை சீர்படுத்தி வழிநடத்துவதில் நிகரற்றவர் என்பதை ஏற்கனவே இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிரூபித்துக் காட்டியிருந்தார்கள்.
இப்போது இங்கு அகழ் தோண்டும் போதும் அற்புதமான ஒழுங்கு முறையை கைக் கொண்டார்கள். கண்காணிப்பு மேடைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்தன. வார்டர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். ஆள் மாறி ஆள்மாறி அவர்கள் கண்காணித்தனர். முஸ்லிம் சிப்பாய்களுக்கென இரகசிய சங்கேத வார்த்தைகள் உருவாக்கப்பட்டன.
இவ்வளவு இருந்த போதிலும் ஓர் இரவு இரண்டு முஸ்லிம் குழுக்களிடையே கைகலப்பு ஏற்பட்டு ஓர் உயிர் பலி கொடுக்க நேர்ந்தது. அகழ் தோண்ட ஆரம்பித்த பின் முடியும் வரை எந்த ஒரு முஸ்லிம் வீரரும் இறைத்தூதரின் அனுமதியைப் பெறாமல் வெளியே ஸெல்லவில்லை.
ஸஹாபாக்களின் ஒரு குழுவின் வேலை முடிந்து விட்டால் நம்முடைய ‘டியூட்டி’ முடிந்து விட்டது என்று அவர்கள் கைகளை உதறி விட்டுச் சென்று விடுவ தில்லை. மாறாக, அடுத்தவருடைய குழுவின் பங்குப் பகுதியில் சென்று அவர்களுக்கு உதவி செய்து, வேலையை விரைவாக முடித்து வைத்தார்கள்.
அகழ் வெட்டும்போது இன்னொரு சம்பவமும் நடந்தது.
முஹாஜிரீன்கள் (உதா – அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்) மற்றும் அன்சார்கள் (உதா – சஅத்பின் உபாதா) கலந்திருந்த ஒரு குழுவின் ஸல்மான் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெரும் பாறையொன்று எதிர்ப்பட்டது. தகர்க்கவே இயலவில்லை. கோடாரிகளின் கூர் மழுங்கிப் போனது தான் மிச்சம். பாறையைச் சுற்றிக் கொண்டு அகழை வெட்டிக் கொண்டு செல்லவும் மனமில்லை.
இறைத்தூதர் வகுத்துத் தந்த பாதை ஆயிற்றே! எனவே, ஓடோடிச் சென்று இறைத்தூதரையே உதவிக்கு அழைத்து வந்தனர். அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வந்து பார்த்தார்கள். கோடாரியை கையில் வாங்கி (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மை….. முழுமையாக உள்ளது”) என்று கூறிக் கொண்டே ஒரே போடாய் போட்டார்கள். மின்னலென ஓர் ஒளிக்கீற்று தெறித்தது. பாறையின் கால்பாகம் பிளந்து போனது.
(“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும், நீதியும் உள்ளது”) என்று கூறியவாறு மீண்டும் அடித்தார்கள். இன்னொரு பாகம் கழன்று போனது. பிறகு மூன்றாம் முறையாக (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் உள்ளன. அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் யாரும் இல்லை!”) என்று கூறினார்கள்.
பாறை முழுவதுமாய் தூள் தூளானது. பிறகு, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸல்மான் (ரழியல்லாஹு அன்ஹு) இறைத்தூதரை அணுகி, ‘அண்ணலே! தாங்கள் ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் ஓர் ஒளிக் கீற்று வெளிப்பட்டதே! என்ன அது?’ என்று கேட்டார்.
அதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,
‘ஸல்மானே!’ நீங்கள் கவனிக்கவில்லையா? முதல் ஒளிக் கீற்றில் யமன், மாளிகைகளை நான் பார்த்தேன். (அவற்றை முஸ்லிம்கள் வெற்றி கொள்வர்!) இரண்டாவது ஒளிக்கீற்றில் ரோமானியர்களின் சிவப்பு அரண்மனையைக் கண்டேன். (அவற்றையும் வெற்றி கொள்வர்!) மூன்றாவது ஒளிக்கீற்றில் மதாயின் (கிஸ்ராவின்) மாளிகைகளைக் கண்டேன்!’ என்று கூறினார்கள். இறைவனுடைய, இறைத் தூதருடைய வாக்குறுதியாகும் இது! இவை உண்மையென காலம் நிரூபித்தது.
ஆறு நாட்களில் அகழ் வெட்டும் வேலை முடிவடையுவும், எதிரிகளின் படை ஆரவாரத்தோடு வந்து சேரவும் சரியாக இருந்தது. மதீனாவின் பெண்களும், குழந்தைகளும் நகருக்குள்ளே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை மதீனாவின் பிரதியாக இறைத்தூதர் நியமித்திருந்தார்கள். பெண்களுக்குப் பொறுப்பாளராக ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரழியல்லாஹு அன்ஹு) நியமிக்கப் பட்டிருந்தார்.
எதிரிகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவு இருந்தது. ஏறக்குறைய பத்தாயிரம், பன்னிரண்டாயிரம் பேர்கள், குதிரைகளோடு ஏராளமான ஆயுதங்கள். ஏற்கனவே அகழ் வெட்டிக் களைத்துப் போயிருந்த முஸ்லிம் வீரர்கள் எதிரிகளைப் பார்த்தவுடன் திகைத்துப் போனார்கள்.
பசியும், பட்டினியும் தவிர அவர்களிடம் வேறு எந்த ஆயுதமும் இல்லை. ஒரு புறம் எதிரிகள் குவிந்து கிடக்கின்றார்கள். இன்னொரு புறமோ கட்டுச் சோத்துக்குள் எலிகளாக உள்ளுக்குள்ளேயே இருக்கின்ற முனாஃபிக்கீன்கள் வீண் பயத்தையும், வதந்திகளையும் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.
பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தயாரா?
‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தயாரா? அப்படிச் செல்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும்!’ என்று இறைத்தூதர் கேட்டார்கள்.
அகழைத் தாண்டிச் ஸெல்வது என்பதை யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. என்ன நடக்குமோ என்கிற பீதி வேறு அவர்களைப் பிடித்துக் கொண்டிருந்தது.
வெளியிலோ குளிர் கொட்டிக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் விறைத்துப் போய் பற்கள் ஆடிக் கொண்டிருந்தன. சில்லிட்ட தரையில் அமர்ந்திருந்த ஸஹாபாக்கள் யாருமே வாயைத் திறக்கவில்லை.
இறைத்தூதர் சென்றார்கள். இரண்டு ரக அத் தொழுது இறைவனிடம் துஆ கேட்டார்கள். மீண்டும் திரும்பி வந்தார்கள்.
‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தாயரா? அப்படி செல்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும்!’ என்று இறைத்தூதர் கேட்டார்கள். அவையில் ஒரு சின்ன அசைவு கூட இல்லை.
திரும்பவும் சென்று தொழுது துஆச் செய்தவர்களாக இறைத்தூதர் திரும்பி வந்தார்கள். ‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து வந்து சொல்ல யாரேனும் தயாரா? அவர் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்!’ என்று கேட்டார்கள்.
சப்த நாடி கூட ஒடுங்கிப் போனவர்களாக சஹாபாக்கள் அமர்ந்திருந்தார்கள்.
“அண்ணலே, தாங்கள் கடலில் குதிக்கச் சொன்னாலும் தயங்காமல் குதிப்போம். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இஸ்ரவேலர்கள் சொன்னது போல சாக்குப் போக்கு சொல்ல மாட்டோம்!” என்ற அறிவித்த, அதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அமுல்படுத்திய சஹாபாக்களே வாய்மூடி மௌனமாக உட்கார்ந்து இருந்தார்கள் என்றால், நிலைமை எவ்வளவு படு மோசம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்!
உண்மையில் இதற்கு முன் எந்தப் போரிலும் சந்திக்காத அளவு கடுந்துன்பத்தில் முஸ்லிம்கள் இருந்தார்கள்.
“யார் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படுகின்றார்களோ, அல்லாஹ் அவருக்கு ஏதேனும் வழியை ஏற்படுத்துவான். அவர் நினைத்துக் கூடப்பார்க்காத இடத்திலிருந்து அவருக்கு உணவு (வாழ்வாதாரம்) வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுக்க சார்ந்துள்ளாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவ!” அவையனைத்தையும் அஹ்ஸாப் போரில் நம்மால் பார்க்க முடிகின்றது.
எல்லாமே அல்லாஹ் தான் என்றாகிப் போன ஈமானிய உத்வேகங் கொண்ட நம்பிக்கையாளர்கள், பசியோடும், பட்டினியோடும் பணி விழும் இரவுகளில் பார்வைகளில் பயத்தோடும் இருந்தார்கள். ஆனால் உள்ளங்களில் கலக்கமில்லை. விரக்தியடைந்து பழக்கமில்லை.
“அந்த(க் கடுமையான) நேரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு சோதிக்கப்பட்டார்கள். மேலும் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள்.” (அல்குர்ஆன் – அல் அஹ்ஸாப் : 11)
இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய போரில் ஒன்றான அஹ்ஸாப் அகழ்ப் போரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழுள்ள “LINK” ஐ ‘கிளிக்” செய்யவும்.
http://www.nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7489