நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகள் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அபுல் ஆஸ் பின் அர்ரபீவு என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப் பட்டிருந்தது.
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஒட்டகத்தில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, ஹுபார் என்பவர் ஈட்டியை எறிவது போன்று பாவலா செய்ய, பயந்து போன ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒட்டகத்திலிருந்து விழுந்து விட்டார்கள்.
கர்ப்பிணியாக இருந்த ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், கடுமையாகக் காயப்பட்டு, பதினைந்து நாட்கள் பயணம் செய்து மதீனா வந்தடைந்தார்கள்.
தனது மகளுக்கு ஏற்பட்ட இந்த பரிதாப நிலையைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கண்ணீர் சிந்தினார்கள். “இஸ்லாத்திற்காக என் மகளைப் போன்று யாரும் சிரமப் பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புதல்வி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறந்தபோது, அவர்களது ஜனாஸாவை நாங்கள் குளிப்ப்பாட்டிக் கொண்டிருந்தோம்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்து, “இலந்தை இலை கலந்த நீரால் மூன்று தடவைகள் அல்லது ஐந்து தடவைகள் அல்லது தேவை எனக் கருதினால், அதற்கும் அதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள், இறுதியில் கொஞ்சம் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள், இவற்றை முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” என்றார்கள்.
நாங்கள் குளிப்பாட்டி முடித்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அறிவித்தோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் கீழாடையை எங்களிடம் போட்டு, “இதை அவரது உடலில் போர்த்துங்கள்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 1707)
இந்த நபிமொழியில் பல செய்திகள் நமக்கு கிடைக்கின்றன.
o மகளாகவே இருந்தாலும், ஒரு தந்தை தனது மகளின் (பெண்ணின்) ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது.
o ஜனாஸாவைக் குளிப்பாட்டும் நீரில் இலந்தை இலையைப் போட வேண்டும். இறுதியில் கொஞ்சம் கற்பூரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
o மூன்று முறை அல்லது ஐந்து முறை அல்லது அதற்கதிகமான முறைகள் என்பதிலிருந்து, ஒற்றைப்படையாகக் குளிப்பாட்ட வேண்டும் என்பது விளங்குகின்றது.
o இலந்தை இலை கலந்த நீரினால் குளிப்பாடும்போது, ஜனாஸாவின் உள்ள அழுக்கும் நீங்கும். கற்பூரம் வைக்கப்படுவது நறுமணத்திற்காகவும், புழு, பூச்சிகள் அந்த ஜனாஸாவை நெருங்காமல் இருப்பதற்காகவும் வைக்கப்படுவதாக நபிமொழிகளுக்கு விளக்கமளிப்பவர்கள் சொல்கிறார்கள்.
– “ஜமாஅத்துல் உலமா” மாத இதழ், பக்கம்: 38, மார்ச் 2018