இறையன்பிற்கு நிகரேது!
குழந்தையின் மீது தாயன்பை ஏற்படுத்திய இறைவனின் கருணையை கண்டு வியக்கின்றேன்.
அல்லாஹ் தனது படைப்பினங்கள் மீது காட்டும் கருணையில் நூறில் ஒன்றுதான் தாய் தனது குழந்தை மீது காட்டும் பாசம். அந்தப் பாசமே மாபெரும் பிணைப்பாக மறக்காத வடுவாக குழந்தையின் மனதில் பதியுமென்றால் இறையன்பை என்ன வென்பது?
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். (மீதமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தனது குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது. (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6000)
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற் காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள்.
அப்போது எங்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்! என்றார்கள். நாங்கள், இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான் என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 5999)
இறையன்பிற்கு நிகரேது.! யா அல்லாஹ்! உனது கருணை மழையில் எங்களையும் நனையச் செய்வாயாக !