புதுப் பள்ளிவாசல் திறப்பு விழாவும் 7 ஹஜ் செய்த நன்மையும்
புதுப் பள்ளிவாசலுக்கு திறப்பு விழா நடத்துவதையும், அதில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதையும் இஸ்லாம் புனிதமாக கருதுகிறதா? ஏழு பள்ளிவாசல் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜுச் செய்ததற்குச் சமம் என்கிறார்களே இது சரிதானா?
“ஒருவர் அல்லாஹ்வுக்கு ஒரு பள்ளி வாசல் கட்டினால் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
இவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதால் உள்ள பலாபலன்களை எடுத்துக் கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்காக ஆர்வமூட்டியுள்ளார்களே தவிர, அதற்காகத் திறப்பு விழா நடத்த வேண்டுமென்றோ, அதற்காக முஸ்லிம்கள் செல்ல வேண்டும் என்றோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை.
பெரும்பாலும் இன்று பள்ளி கட்டி, திறப்பு விழா நடத்துவதெல்லாம் அதை நடத்தும் ஊர் வாசிகளின் பெருமையை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது.
ஓர் ஊரில் பெரிய தொரு பள்ளிவாசல் கட்டப்படுகிறதென்றால் அப்பள்ளியை தொழுகையாளிகளைக் கொண்டு நிரப்புவதில் தான் அந்த ஊருக்கு கைர்-பரகத்-சிறப்பு முதலியவை இருக்கிறதே தவிர பள்ளித் திறப்பு விழா என்ற பெயரால் பிற ஊர் சகோதர முஸ்லிம்களுக்கு அழைப்புக் கொடுத்து அவர்களெல்லாம் வந்து பள்ளியை நிரப்புவதன் மூலம் என்ன பயன் இருக்க முடியும்?
”பள்ளிவாசல்களின் வகையில் மக்கள் ஒருவருக் கொருவர் பெருமையாகப் பேசிக் கொள்ளுவது யுக முடிவுகால அறிகுறிகளில் ஒன்றாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், நஸயீ, தாரமி)
இன்று மேற்காணும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதுபோல அநேக ஊர்களில், நமது பள்ளிவாசல் “மினாரா” 10 கிலோ மீட்டருக்கு அப்பால் நின்று பார்க்கும்போதே தெரிகிறது. நமது பள்ளியைப் போன்று கவர்ச்சிகரமான பள்ளி இந்தப் பகுதியிலேயே கிடையாது.
அந்த ஊர் பள்ளியை விட நமதூர் பள்ளிதான் மிக அலங்காரமாக, பார்வைக்கு எடுப்பாக இருக்கிறது என்றெல்லாம் பேசிக்கொள்வதை சர்வ சாதாரணமாக நாம் பார்க்கிறோம். அப்பள்ளியில் தொழுவோரைப் பார்க்கப் போனால் ஒரு ஸஃப்புக்கு இழுபறியாக இருக்கும்.
7 பள்ளிவாசல்களின் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜுச் செய்வதற்கு சமம் என்பது ஏதோ ஒரு புண்ணியவானால் கட்டி விடப்பட்ட சரடே அன்றி வேறில்லை.
– P. ஜெய்னுல் ஆபிதீன்