இப்லீசிடம் அதிகம் மதிப்பிற்குரிய ஷைத்தான் யார்?
இந்த தகவலை தெரியப்படுத்தும் முன் ஒன்றை அவசியமாக மக்களுக்கு பதிய வைத்துவிட வேண்டும்.
இப்லீஸ், ஷைத்தான் ஆகிய இருவரும் ஒருவர் தான் என்ற சிந்தனையில் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். ஆனால் இஸ்லாமிய அகீதா அவ்வாறு கிடையாது.
இருவரும் ஒரே வேலையை செய்யக்கூடியவர்கள் தான் என்றாலும் இருவரும் வெவ்வேறானவர்கள் ஆவர்.
இப்லீஸ் என்பவன் மனிதனை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்விடம் நேரடியாக அனுமதி பெற்றவன் ஆவான். அவனது சந்ததிகள் தான் ஷைத்தான்கள் என்று அழைக்கப்படுவர்.
இப்லீஸ் என்பவன் ஷைத்தான்களின் தலைவனும் ஆவான். இந்த தகவலை ஆரம்பமாக தெரிந்து கொண்டால் தான் கீழ்காணும் செய்தியை இலகுவாக விளங்க முடியும்.
ஷைத்தான்களின் முழுநேரப்பணியே மனிதனை வழிகெடுப்பது தான். ஆனால் வழிகேடுத்தலில் பலவகையான அடிப்படைகள் உண்டு என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும். நாம் எதை பெரிதாக நினைக்கிறோமோ அவை பெரும்பாலும் ஷைத்தான்களால் அளட்டிக்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை.
எதனை அற்பமானதாக கருதுகிறோமோ அதில் தான் ஷைத்தான் அதிகம் கவணம் செலுத்துவான். உதாரணத்திற்கு பொய் பேசுதல், புறம் பேசுதல், அவதூறு கூறுதல், பிறர் சொத்தை அபகரித்தல், பிறரது மானத்தில் சுயமரியாதையில் விளையாடுதல் போன்ற நம்மோடு கலந்துறவாடும் பல பாவங்களை நாம் கூறலாம்.
இவை அனைத்திற்கும் நாம் அற்பமான மதிப்பீடு உள்ளத்தால் கொடுத்து இருந்தாலும், இறைவனின் உபதேசங்களை படிக்கின்றபொழுது இவைகள் அனைத்தும் எத்தகைய கொடிய பாவங்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இவை போன்ற பாவங்கள் இறைவனது பார்வையில் கடுமையானது ஆகும். ஆகவே தான் இவற்றை அற்பமானதாக ஷைத்தான் நமக்கு சித்தரித்து இவற்றிலேயே முழுநேர கவணமும் செலுத்தி நம்மை நரக விழிம்பில் தள்ள முயற்சிகளை அவன் மேற்கொள்வான். அவ்வாறு ஷைத்தான் அற்பமானதாக நமக்கு சித்தரிக்கின்ற பாவங்களில் தலையாய பாவம் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி விடுவதாகும்.
இந்த செயல் இல்லாத வீடுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரச்சனைகளை உள்ளத்தில் சுமந்தவராக ஆறுதல் தேடி கவலைகளோடு மனைவியை நோக்கி கணவர் வர, மனைவியோ தொலைக்காட்சியில் தொலைந்தவராய் கணவனின் அழைப்பிற்கு கர்வத்தோடு பதிலுரைக்க…. சண்டை சூடு பிடித்துவிடும். (உதாரணத்திற்காக ஒன்றை சொன்னேன்) இது இயல்பாக நடக்கும் விஷயமாகிப்போய் விட்டது!!!
கோபம் ஷைத்தானால் தூண்டப்படும் குணம் ஆகும். இதுபோன்ற புரிந்துணர்வு இன்மை காரணமாக கோபத்தை தூண்டிவிட்டு பலவகைப் பிரச்சனைகளை ஷைத்தான் கணவன் மனைவி உறவுக்குள் தூண்டிவிடுகிறான்.
இதேபோன்று சதாவும் பலவகையான பிரச்சனைகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்றாடம் நடப்பதும் அந்த பிரச்னைகள் சாதுவானவையாக இருந்தாலும் கூட அவற்றை விவாகரத்து வரைக்கும் இழுத்து கொண்டு செல்வதும் இன்றைய கால மக்களுக்கு மிகச் சாதாரணமாகி விட்டது.
இந்த செயலையும் நாம் பாவக்காரியமாக பார்ப்பதில்லை. ஆனால் கீழ்காணும் நபியின் வார்த்தைகளை கவணித்தால் இது எத்தகைய குற்றமாக இறைவனது பார்வையில் உள்ளது என்பதனையும், இப்லீஸ் இந்த வழிகேட்டை எத்தனை உயர்வாக பார்க்கிறான் என்பதனையும் விளங்கிக்கொள்ள முடியும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், “(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான்.
இதை ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், “அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)” என்று கூறியதாகவே நான் கருதுகிறேன். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5419).
தேவையற்ற குடும்ப பிரச்சனைகளின் காரணத்தால் இப்லீசிடம் ஷைத்தான்கள் உயர்ந்த மதிப்பெண்களை பெற்றுக்கொள்ள நாம் துணையாக இருக்கிறோம். இப்லீசிற்கு விருப்பமான செயல் இறைவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் செயல் ஆகும். ஆகவே இதில் கவணமாக நாம் செயல்பட வேண்டும். எப்பொழுதும் நாம் இறைவனின் அன்பை பெறவே இவ்வுலகில் செயல்பட வேண்டும், இப்லீஸை மகிழ்விக்க அல்ல.
எல்லாம் வல்ல இறைவன் இனியாவது நமது வாழ்வை திருத்தமாகவும் மகிழ்வாகவும் புரிந்துணர்வோடும் திருப்பிவிடுவானாக!!!
source: http://mashariqthowheedi.blogspot.in/2017/11/blog-post_20.html