மரணமடைந்தவரை ‘காலமானார்’ என்று குறிப்பிடுவது சரியா?
இன்று தமிழுலகில் மரணமடைந்தார் என்பதை குறிக்க காலமானார், இயற்கை எய்தினார் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது பரவலாக உள்ளது.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இதில் என்ன தவறு? என்று தான் பலருக்கும் எண்ணத்தோன்றும். ஆனால் அந்த சொல்லாடல் வந்த பின்னணியை ஆய்வு செய்து பார்த்தால், அது நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் என்பதை உணர முடியும்.
இந்த உலகை, குறிப்பாக மனிதனை படைத்து, வாழ வைப்பது, உணவளிப்பது, நோய் மற்றும் நிவாரணம் அளிப்பது, பிறப்பு – இறப்பு, நல்லது, கெட்டது அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பது முஸ்லிம்கள் ஏற்றுள்ள அடிப்படைக் கொள்கையாகும்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி உலகிலுள்ள ஆத்திகர்கள் அனைவருமே ஏதேனும் ஒருவகையில் இக்கருத்தை ஏற்றே உள்ளனர்.
ஆனால் நாத்திகர்கள் இக்கருத்துக்கு உடன்படுவதில்லை. உலகில் ஏற்படும் அனைத்தும் காலத்திடமிருந்துதான் ஏற்படுகின்றன என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆகவே தான் கடவுள் மறுப்புக் கொள்கையுடையோரை குறிப்பதற்கு அரபியில் “தஹ்ரிய்யா” என்று அழைக்கப்படுகின்றது. “தஹ்ர்” என்றால் காலம் என்று பொருள்.
ஆகவே தான் இறைவனை ஏற்றுள்ளவர்கள் மரணித்தவரை இறைவனடி சேர்ந்தார் என்று கூறுவதை கடவுளை மறுக்கும் நாத்திகர்கள் ஏற்க மறுத்து காலமானார், காலத்தில் மறைந்தார், இயற்கை எய்தினார் என்று கூறுகின்றனர்.
காலம் செய்த கோலம், இயற்கை தந்த வரம், இயற்கையின் விளையாட்டு போன்ற சொல்லாடலும் இந்த வகையைச் சார்ந்ததே! (இதுபோன்ற வார்த்தைகளை சொல்வதை முஸ்லிம்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.)
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக கடவுள் மறுப்பு இயக்கத்தினர் தமிழ் இலக்கியங்களில் கோலோச்சுவதால் ஆத்திகர்களிடமும் குறிப்பாக முஸ்லிம்களிடமும் இந்த வார்த்தை பரவலாக புழங்கப்படுகின்றன.
காலமானார், இயற்கை எய்தினார் போன்ற வார்த்தைகளுக்குள் ஓர் இறைமறுப்புக் கொள்கையே மறைந்துள்ளது. ஆகவே இவை போன்ற வார்த்தைகளை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தவறான அர்த்தங்கள் தரும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் அவற்றிற்கு பதில் சரியான அர்த்தமுள்ள வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக,
“ஈமான் கொண்டோர்களே! (நபியை நோக்கி) ராயினா என்று கூறாதீர்கள், உன்ளுர்னா – எங்களை நோக்குங்கள் என்று கூறுங்கள்.” (அல்குர்ஆன் 2:104)
நயவஞ்சகர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, எங்களைப் பாருங்கள் என்று கூற (எங்களின் இடையனே! என்ற அர்த்தத்தை உள்ளடக்கிய) “ராயினா” என்ற வார்த்தையை பயன்படுத்தினர். அவர்களின் உள்நோக்கத்தை புரியாத முஸ்லிம்களும் அவ்வார்த்தையை பயன்படுத்தவே, அல்லாஹ் அந்த வார்த்தையை மாற்றி “உன்ளுர்னா” என்று கூறும்படி இவ்வசனத்தில் கட்டளையிட்டுள்ளான்.
மேலும் அரபுகள் புழங்கி வந்த தவறான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகள் பலவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்றி அமைத்தார்கள் என்பதற்கு பல நபிமொழிகள் சான்றாக உள்ளன.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (தவறான அர்த்தமுள்ள) அருவறுப்பான பெயர்களை மாற்றக்கூடியவர்களாக இருந்தார்கள்.” (நூல்: திர்மிதீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்தபோது அந்நகரத்தின் பழைய பெயரான யஸ்ரிப்(யத்ரிப்) என்பதை மாற்றினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்தபோது இந்த நகரத்தை யஸ்ரிப் என்று கூறாதீர்கள். இது பரிசுத்த நகரமாகும் என்று கூறினார்கள். யஸ்ரிப் என்றால் பழிக்கப்பட்ட நகரம் என்று பொருள்.
மேலும் அல்லாஹ்வே யஸ்ரிபின் பெயரை மாற்றி “தாபா” (பரிசுத்த நகரம்) என்று பெயர் வைத்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியதாக முஸ்லிமில் வந்துள்ளது.
இவ்வாறு தவறான கருத்துக்கள் கொண்ட வார்த்தைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்றியதாக பல நபிமொழிகளில் வந்துள்ளன.
எனவே நாமும் சரியான சொல்லை பயன்படுத்துவோம். மற்றவர்களுக்கும் இதனை எடுத்துச் சொல்லுவோம்.
– மனாருல் ஹுதா மார்ச் 2018. (பக்கம் 9)