ஹராமான உணவால் ஏற்படும் தீமைகள்
1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.
6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
7. குழந்தைகள் மோசமாகி விடுவார்கள்.
8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
11. ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.
எடுத்துக்காட்டாக இங்கே சிலவற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.
மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)
இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின் அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)
ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.