o ‘என்னை மறுத்தவர் தவிர என் சமுதாயத்தினர் அனைவரும், சொர்க்கத்தில் நுழைவார்கள்!’ இறைத்தூதர் அவர்களே! மறுப்போர் யார்? என்று கேட்கப்பட்டது. ‘எனக்குக் கட்டுப்பட்டவர், சொர்க்கத்தில் நுழைவார். எனக்கு மாறு செய்தவர், என்னை மறுத்தவராவார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
o ‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).
o ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”அழ்பாஉ” என்ற ஒட்டகை இருந்தது. அதை எந்த ஒட்டகையாலும் முந்த முடியாது அல்லது முந்த முயற்சித்தது கூட கிடையாது. ஒரு காட்டரபி தன் பெண் ஒட்டகை மீது ஏறி வந்து, அதை முந்திவிட்டார். இது முஸ்லிம்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி விட்டது.. இதைக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”உலகில் எந்தப் பொருள் உயர்ந்தாலும், அதை (ஒரு நேரத்தில்) தாழ்த்துவது என்ற கடமை அல்லாஹ்வின் மீது உள்ளது” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
o ”விபச்சாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது”. (அறிவிப்பவர்:: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
o ”(கொடுக்கும்) உயர்ந்த கை, (வாங்கும்)தாழ்ந்த கையை விட சிறந்ததாகும். உன் பொறுப்பில் உள்ளவர்களிடம் (உன் உதவியை) ஆரம்பிப்பீராக! தர்மத்தில் சிறந்தது, தேவைக்குப் போக உள்ளதில் ஆகும். ஒருவர் பேணுதலாக நடக்க விரும்பினால், அல்லாஹ் அவரை பேணுதலாக்கி வைப்பான். ஒருவர் பிறரின் தேவை இல்லாமல் வாழ விரும்பனால் அல்லாஹ் அவரை செல்வந்தராக்குவான் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (அறிவிப்பவர்:: ஹகீம் இப்னு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
o ”ஒரு மனிதன் கண்கவர் ஆடையை அணிந்து கொண்டு, தன் தலையை சீவி, பெருமையான நடையுடன் நடந்து சென்றான். அவனை அல்லாஹ் பூமிக்குள் இழுக்கும்படி செய்துவிட்டான். அவன் மறுமை நாள்வரை பூமிக்குள் அழுந்தி சென்று கொண்டே இருக்கிறான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
‘o ‘நானும், என் சிறிய தந்தையின் இரண்டு மகன்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தோம். அவ்விருவரில் ஒருவர், ”இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள பகுதியில் எங்களை (அதிகாரியாக) நியமியுங்கள்” என்று கேட்டார். இன்னொருவரும் இதே போல் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நிச்சயமாக நாம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இப்பதவியை கேட்கின்ற எவருக்கும், இதை ஆசை கொள்கின்ற எவருக்கும் இந்த அதிகாரத்தை வழங்கிட மாட்டோம்” என்று கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)
o ”ஒரு பக்கத்து வீட்டார், தன் வீட்டுச் சுவரில் குச்சியை நட்டு வைக்க மற்றொரு பக்கத்து வீட்டார் தடுத்திட வேண்டாம் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (ஆனால்) இந்த நபிமொழியைப் புறக்கணித்தவர்களாகவே உங்களை நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களுக்கிடையே இதை நான் கூறிக் கொண்டேதான் இருப்பேன். (என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்) (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
o ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! கூலியை அதிகம் பெற்றுத்தரும் தர்மம் எது?’ என்று கேட்டார். ‘நீ ஆரோக்கியமாகவும், ஏழ்மையை பயந்து, செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் ஏழையாகவும் இருக்கும் நிலையில் நீ தர்மம் செய்வதுதான். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என நீ கூறும் நேரம் வரை, (தர்மம் செய்ய) தாமதிக்காதே’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
o ‘அல்லாஹ் ஒரு அடியானை பிரியம் வைத்துவிட்டால் ஜிப்ரீலை அழைத்து, ”அவரை நான் பிரியம் கொள்கிறோம். அவரை நீ விரும்புவீராக!” என்று கூறுவான். அவரும் அவனை பிரியம் கொள்வார். ஜிப்ரீல் வானத்தில் உள்ளவர்களை அழைத்து ”அல்லாஹ் இன்னமனிதனை பிரியம் கொள்கிறான். அவரை நீங்களும் விரும்புங்கள் என்பார். வானத்தில் உள்ளோர் அவரை பிரியம் கொள்வர். பின்பு பூமியில் (உள்ளவர்களிலும்) அவர் பால் இணக்கத்தை ஏற்படுத்தப்படும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி)