ப.ஜ.க.வின் பொம்மையும் ஸிலீப்பர் ஸெல்லும்!
[ கமல், ரஜினி யி ன் அரசியல் பிரவேசம் மக்கள் நலன் சார்ந்ததல்ல, முழுக்க முழுக்க சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்!
ரஜினி, கமல் இருவருக்குமே அண்மையில் ஒரு மிகப்பெரிய சான்ஸ் கிடைத்தது. தமிழக அரசு சமீபத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. அந்த நேரத்தில் இவர்கள் இருவருமே வாய் திறக்கவில்லை.
அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னரும், மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அப்படியென்றால், மக்கள் பிரச்னைகளில் இவர்கள் இருவருமே நேரடியாக நிற்க மாட்டார்கள் என்பதுதான் அர்த்தம். அது தெளிவாகத் தெரிந்து விட்டது.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை, காங்கிரஸ்காரர் வீட்டில் தீப்பிடித்தாலும்கூட, தன் சொந்தப் பணத்தையோ, கட்சிப் பணத்தையோ உதவியாக வழங்குவார். பொதுமக்களிடம் ரஜினிக்கோ, கமலுக்கோ எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே, மக்கள் மத்தியில் இவர்கள் இருவருமே எடுபடப்போவதில்லை என்பதுதான் உண்மை.]
”யாருக்குப் பிரயோஜனம்?” – கமல், ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி பத்திரிகையாளர்களின் கருத்து
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவது ஒன்றும் தமிழ்நாட்டில் புதிதல்ல என்றாலும், தற்போது கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அரசியல் களத்தில் இறங்கியுள்ள காலம்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே திரைப்படத்துறையில் காலடி வைத்து விட்டவர்கள் கமலும், ரஜினியும். இன்னும் சொல்லப்போனால், எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாகவே கமலும், ரஜினியும் இருந்துள்ளார்கள் என்பதும் கடந்த கால வரலாறு.
எம்.ஜி.ஆர் என்ற மிகப் பெரிய ஆளுமைக்குப் பின், தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் மாறி மாறி அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த காலங்களில் எல்லாம், எந்தவித அரசியல் பிரவேசத்தையும் அறிவிக்காதவர்கள்தான் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும்.தவிர, கருணாநிதி, ஜெயலலிதா எனத் தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்களை எதிர்த்து எந்தவித நிலைப்பாட்டையும் எடுக்காதவர்கள்.
1996-ம் ஆண்டு தி.மு.க – த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் ரஜினிகாந்த், அரசியல்பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை. 2016 டிசம்பர் 5-க்குப் பிறகு, அதாவது, ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னரே, இருவரும் அரசியல் பற்றி அதிகம் பேசத் தொடங்கினர். இருவருமே சினிமாவில் ஏறக்குறைய மிகப்பெரிய உச்சத்தை அடைந்துவிட்ட சூழலில், குழம்பிய குட்டையில் நாமும் இறங்கினால் என்ன என்ற எண்ணத்துடன் அரசியல் வானில் கால்பதிக்கத் திட்டமிட்டு, அதற்கான செயல்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கமல், ரஜினி… இவர்கள் இருவரின் அரிதாரப் பூச்சை ஏற்றுக்கொண்ட தமிழக மக்கள், அரசியல் பிரவேசத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? இவர்களின் வரவால், ஏற்கெனவே களத்தில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் எதிர்கால வாக்கு வங்கி என்னவாகும்? என்பது பற்றி சென்னையில் எம்.ஜி.ஆர். காலந்தொட்டு பத்திரிகையாளர்களாக உள்ள சிலரிடம் பேசினோம்.
மூத்த பத்திரிகையாளர் வில்லியம்ஸ் டாயல்:
பா.ஜ.க-வின் பொம்மைதான் ரஜினி
“தமிழகத்தைப் பொறுத்தவரை கமல்ஹாசனோ, ரஜினியோ ஒரு மாற்றாகவோ, அரசியல் சக்தியாகவோ ஒருநாளும் வர முடியாது. கமலாவது தமிழ் நன்றாகப் பேசுவார்; தமிழ்நாட்டுக்காரர். ரஜினியைப் பொறுத்தவரை, எந்தப் பிரயோஜனமும் கிடையாது. அவர் பி.ஜே.பி-யின் பொம்மை. அவர்கள் ரஜினியைக் காற்றடித்து விடுகிறார்கள். கமல்ஹாசனுக்குப் பின்னணியிலும் வேறு ஏதோ தூண்டுதல் இருக்கலாம். சினிமாவில் சொந்தப் பணத்தைப் போட்டு நடிப்பதைப் போல், அரசியலிலும் அவர் பணத்தைப் போட்டு என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. ரஜினி தன் சொந்தப் பணத்தை ஒருபோதும் செலவிடப் போவதில்லை.
ரஜினிக்கும், கமலுக்கும் இடம்கிடைக்காது
ரஜினி, கமல் இருவருக்குமே அண்மையில் ஒரு மிகப்பெரிய சான்ஸ் கிடைத்தது. தமிழக அரசு சமீபத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. அந்த நேரத்தில் இவர்கள் இருவருமே வாய் திறக்கவில்லை. அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னரும், மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அப்படியென்றால், மக்கள் பிரச்னைகளில் இவர்கள் இருவருமே நேரடியாக நிற்க மாட்டார்கள் என்பதுதான் அர்த்தம். அது தெளிவாகத் தெரிந்து விட்டது.
இதுவே கமல், ரஜினி இருவருக்குமான முதல்கட்ட சோதனை எனலாம். இன்னும் சொல்லப்போனால், திராவிடப் பாரம்பரியம் என்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலேயே மாறி விட்டது எனலாம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டே கூட, திராவிடக் கட்சிகளை எதிர்த்த நிலை தற்போது மாறிவிட்டது. அண்மையில் தூத்துக்குடி மாநில மாநாட்டில்கூட அக்கட்சியினர், இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தைத்தான் முதலாவதாக நிறைவேற்றியுள்ளனர்.
திராவிட நாகரிகத்தைத் திரும்ப கொண்டுவர வேண்டும் என்ற முடிவுக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்துள்ளது. தி.மு.க-வின் கட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும். சமூக நீதியில் அக்கட்சி ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒருபோதும் தி.மு.க விட்டுக்கொடுக்காது.
திராவிடம் என்பது ஓர் இயக்கம். அது தி.மு.க. என்ற கட்சியல்ல. சம்ஸ்கிருதம் போன்ற வட இந்திய மொழிகளுக்கு எதிரான இயக்கம் வலுவாக உள்ளது. உதாரணத்திற்கு கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவே, சமீபகாலமாக தங்களின் சமுதாயம் இந்துக்கள் அல்ல; வீர சைவம் என்கிறார். தி.மு.க. ஏற்படுத்திய தாக்கமே இதுபோன்ற மாற்றங்களுக்குக் காரணம். கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பதைச் செயல்படுத்தியிருப்பதே, முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தைப் பின்பற்றித்தான் எனலாம். எந்த முறையில் பார்த்தாலும் ரஜினி, கமல் இருவருக்குமே தமிழக அரசியலில் எந்தவொரு இடமும் கிடையாது.
இட ஒதுக்கீடும் ரஜினி-கமலும் !
கமல்ஹாசனைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடுப் பிரச்னையில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. ரஜினி கர்நாடகாவில் குடியேறிய மராட்டியர். அவருக்கும் இடஒதுக்கீட்டில் என்ன கருத்து இருக்கும் எனத் தெரியாது. எனவே, இவர்கள் இருவரையுமே மிகவும் சீரியஸ் பாலிடிஷியன்களாக எடுத்துக்கொள்ள வேண்டியதே இல்லை. கமலாகட்டும், ரஜினியாகட்டும் தி.மு.க-வின் வாக்கு விகிதத்தைப் பிரிக்க முடியாது என்பதே என் கருத்து. ரஜினி ஏற்கெனவே சொல்லிவிட்டார். அவரின் இலக்கு சட்டசபைத் தேர்தல்தான் என்று. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ரஜினி எதுவும் தெரிவிக்கவில்லை.
காரம் குறையாத தி.மு.க.
இங்கே, எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் நாம் வேறுபடுத்தித்தான் பார்க்க வேண்டும். இருவருமே திராவிட இயக்கத்தில் இருந்து வேறுபட்டவர்கள்தான். எம்.ஜி.ஆர் காலத்தில் பெரியார் போன்ற தலைவர்களை முன்னிறுத்தி வலம் வந்தார். ஜெயலலிதா காலத்தில் சொல்லவே தேவையில்லை. திராவிட இயக்கங்கள் வளர்ந்த சூழலில், அக்கொள்கைக்கு அவரும் எதிரானவர்தான்.தூத்துக்குடி சி.பி.எம். மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்ததும், எதிர்ப்பு கிளம்புகிறது என்றால், தி.மு.க-வின் வீரியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி இப்போதுள்ள சூழலில் தி.மு.க-வைத் தவிர்த்து எந்தக் கட்சியோடு சேர்ந்து போட்டியிட முடியும்?
பிரபல தொலைக்காட்சியின் மூத்த உதவி ஆசிரியர் பெரியசாமி:
எம்.ஜி.ஆரும், இவர்களும் ஒன்றா ?
“கமல், ரஜினி இருவருமே அரசியல் களத்தில் சோபிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரஜினி கடந்த 30 ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருவதாகக் கூறிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். காலத்திலேயே ரஜினிக்கு அரசியல் ஆசை இருந்தது. ஆனால், அப்போது அவர் வெளிப்படுத்தவில்லை. சொல்லப்போனால் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர். இடைப்பட்ட காலத்தில் எதைப்பற்றியும் அவர் பேசவில்லை. ஜெயலலிதா இருந்தவரை கமலும், ரஜினியும் எதைப்பற்றியும் பேசவில்லை.
ஜெயலலிதா இறந்த பின்னரே, இவர்கள் இருவருக்கும் ஒரு விழிப்புஉணர்வு ஏற்பட்டிருக்கிறதா சொல்றாங்க. இருவரின் அரசியல் பயணத்திற்கான தயார்படுத்துதலுமே உண்மையான மக்கள் தொண்டாற்றக்கூடிய வகையிலான போக்காகத் தெரியவில்லை. இருவருமே சினிமாவில் இருந்து ஏறக்குறைய ஓய்வுபெறக்கூடிய ஸ்டேஜில்தான் உள்ளனர். திரைப்படத்துறையில் இருவருக்குமே இனி போணியாகக்கூடிய எதிர்காலம் இருக்காது. அதனால், பொலிடிக்கலா செட்டில் ஆகி விடலாம் என்று கருதுகிறார்கள்.
எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிச்ச காலச்சூழல், அவருடைய நிலை வேறு. அவர் இருபது, முப்பது ஆண்டுகள் ஒரு கட்சியில் பணியாற்றி, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அறிஞர் அண்ணா உயிரோடு இருந்த காலத்திலேயே, எம்.ஜி.ஆரால்தான் தி.மு.க-வுக்கு ஓட்டு விழும் என்பதை, வெளிப்படையாகவே அறிவித்து ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு எம்.ஜி.ஆர். ஒரு மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்தார். மாநிலத்தின் பல இடங்களில் சுற்றுப்பயணம் பண்ணி, வாக்குவங்கியை ஸ்டிராங்காக வைத்துக்கொண்டிருந்தார்.
1971-லும் எம்.ஜி.ஆர் மேற்கொண்ட பிரசாரத்தினால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1972-ல்தான் எம்.ஜி.ஆரை, தி.மு.க-வை விட்டு வெளியேற்றுகிறார்கள். 1962-ல் எம்.எல்.சி-யாகவும், 1967-ல் எம்.எல்.ஏ-வாகவும் அவர் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு மிகப் பெரிய திராவிடக் கட்சியாக உருவெடுத்த தி.மு.க-வுக்குக் கடுமையாகப் பணியாற்றி, தன் வாக்குவங்கியைக் கட்சிக்கு ஆதரவாகத் திருப்பி, ஒரு மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் அப்போது தி.மு.க. என்றாலே எம்.ஜி.ஆர். என்று கூறும் அளவுக்குப் புகழ்பெற்றவர்.
நெருக்கடிகளைச் சமாளிப்பார்களா ?
பின்னர் தி.மு.க-வில் இருந்து தூக்கி எறியப்பட்டதால், மக்கள் மத்தியில் ஏற்பட்ட மிகப்பெரிய பரிதாப உணர்வை, தனக்கு சாதகமாக வாக்குகளாக மாற்றிக்கொள்ளும் வகையில் ஒரு கட்சியை 1972-ல் ஆரம்பித்து, அ.தி.மு.க-வை மிகக் கடுமையான சோதனைகளுக்கு மத்தியில் வளர்த்தவர் எம்.ஜி.ஆர். 1977-ல் அவர் ஆட்சிக்கு வரும்வரை சுமார் ஐந்தாண்டுகள், தி.மு.க. ஆட்சி கலையும்வரை கடுமையான சோதனைகளை எதிர்கொண்டார். பொதுக்கூட்டம் போட்டால் தடை, ஷூட்டிங் போனால் எதிர்ப்பு என எல்லா இடங்களிலும் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடிகளைக் கொடுத்து, அவற்றையெல்லாம் மீறி வளர்ந்தவர் அவர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், கோவை கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் எனத் தன் பலத்தை நிரூபித்து, ஃபவுண்டேஷனை ஸ்ட்ராங்காக அமைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அந்தக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, கமலும், ரஜினியும் எந்த அடக்குமுறைகளையும் சந்திக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ள வரலாறும் உள்ளது. இப்போது திடீர்னு வந்து அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாங்க. இவர்களின் இந்தச் செயல்பாடு எந்தளவுக்கு ஓர் ஆழமான வேரூன்றுதலை ஏற்படுத்தும் என்று யாராலும் இப்போது சொல்ல முடியாது.
ஆந்திர சூப்பர்ஸ்டார்களின் நிலை…
இதேபோல, ஆந்திராவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, பின்னர் அக்கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட்டு, தற்போது மீண்டும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். திருப்பதியில் சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது பல லட்சம் பேர் கூடிய வரலாறும் உண்டு. ஆனால், அவரால் அரசியலில் சோபிக்க இயலவில்லை. எனவே, கமலஹாசனின் இந்த ஆடம்பர தொடக்கவிழா எல்லாம் இப்போதைக்கு ஒரு பப்ளிசிட்டிக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர, வேறு எதற்கும் உதவாது.
எம்.ஜி.ஆர்., வள்ளல்… இவர்கள் ?
எம்.ஜி.ஆர். கட்சியில் இருக்கும்போது, அவர் தன் சொந்தப்பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தவர். கட்சிக்காகவும், பொதுமக்களுக்காகவும் பணத்தை வழங்கியவர். அதுபோன்ற எந்தவொரு சம்பவமாவது கமலுக்கோ, ரஜினிக்கோ உண்டா? 2004-ல் தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. 2015-ல் சென்னையே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு வரலாறு காணாத மழை, வெள்ளம் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இவற்றில், எந்த நிகழ்வுக்காவது இவர்கள் இருவரும் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்ததுண்டா?
மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய, சேவையாற்றக்கூடிய இடத்தில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள், சென்னையின் எந்தப் பகுதியிலாவது அரிசி, பருப்பு வழங்கிய முன்னுதாரணம் உண்டா? பொதுமக்களிடம் இவர்கள் இருவருக்கும் நேரடித் தொடர்பு உண்டா? எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால், திரைப்படத்தில் நடிக்கும்போது, வெளிமாநிலங்களுக்குச் சென்றாலும், அங்கு ஏதாவது வறட்சி என்றால் தன் சொந்தப் பணத்தைக் கொடுக்கும் குணம் படைத்தவர்.
சிஸ்டமும், காவிரி தந்த கஷ்டமும் !
எனவே, இவர்கள் இருவருமே அரசியலில் எந்தளவுக்கு வெற்றிபெறுவார்கள் என்பது கேள்விக்குறிதான். தவிர, தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்னைகளில் இவர்கள் தெளிவான கருத்தைத் தெரிவிக்க மறுக்கிறார்கள். காவிரி பிரச்னை தொடர்பான வழக்கில், தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. கமலோ, ரஜினியோ தங்களின் கருத்தை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள்.
“சிஸ்டத்தை மாற்றப்போகிறேன். தமிழ்நாடு ஊழல் மயமாகிவிட்டது” என்று கூறும் ரஜினி, காவிரிப் பிரச்னையில் என்ன கருத்தைச் சொன்னார்? சினிமா இண்டஸ்ட்ரியிலும், ரசிகர்கள் மத்தியிலும் தன் செல்வாக்கைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை, காங்கிரஸ்காரர் வீட்டில் தீப்பிடித்தாலும்கூட, தன் சொந்தப் பணத்தையோ, கட்சிப் பணத்தையோ உதவியாக வழங்குவார். பொதுமக்களிடம் ரஜினிக்கோ, கமலுக்கோ எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே, மக்கள் மத்தியில் இவர்கள் இருவருமே எடுபடப்போவதில்லை என்பதுதான் உண்மை.
முழுக்க முழுக்க சுயநல, சந்தர்ப்பவாத அரசியல். எந்தவிதத்திலும் இவர்களின் அரசியல் பிரவேசம் மக்கள் நலன் சார்ந்ததல்ல. கொஞ்ச காலம் கமல், ரஜினி என்று செய்திகளில் வருவார்கள். எனவே, கமல், ரஜினி இருவரின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…”
source: VIKATAN