சந்திர கிரகணமும், கிரகணத் தொழுகையும்
[ ‘கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்’]
இன் ஷா அல்லாஹ், இன்று 31ஆம் தேதி, மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம் தோன்ற ஆரம்பிக்கும், முழு கிரகணம் 6.21 மணிக்கு தொடங்கி 7.37 மணி வரை நீடிக்கும். மொத்தம் 1 மணி நேரம் மற்றும் 16 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடிக்கும் என்று கொல்கத்தா பிர்லா கோளரங்க இயக்குனர் கூறியுள்ளார். பொதுமக்கள் இதனைத் காண சென்னையிலுள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1886ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, ப்ளூ ப்ளட் சூப்பர்மூன் சந்திர கிரகணம் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் மூன்று தனித்துவம் வாய்ந்த நிகழ்வுகளை ஒருசேர காண இருக்கிறோம். சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டிருக்கும். இதன் மூலம் வழக்கமான நிலவொளியைக் காட்டிலும் 14% கூடுதல் வெளிச்சத்தை சந்திரனிடம் அன்று காணலாம்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையே முழு நிலவினை காண முடியும், ஒவ்வொரு முழு நிலவும் 29 நாட்களுக்கு ஒரு முறையே காண முடியும். ஆனால் இந்த முறை ஜனவரி 1ஆம் தேதியே முழு நிலவு தோன்றியது, மிகவும் அரிதாக மாதக் கடைசியான 31ஆம் தேதி இரண்டாவது முறையாக முழுநிலவு தோன்ற உள்ளது. இதுவே ப்ளூ ப்ளட் மூன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த முழுநிலவை அரிதிலும் அரிதான தனித்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது. அன்றைய தினம் முழு சந்திர கிரகணம் தோன்ற இருக்கிறது. அதாவது பூமியின் நிழலில் நிலவு கடந்து போகும். இதுவே ப்ளூ மூன் சந்திர கிரகணம் எனப்படுகிறது.
சந்திர, சூரிய கிரகணம் என்றால் என்ன?
சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது. சந்திரன் மீது விழும் சூரிய ஒளியைச் சந்திரன் பிரதிபலிக்கிறது. இதுவே நமக்கு நிலவாகத் தெரிகிறது.
சந்திரனும் பூமியம் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனைச் சுற்றுகின்றன. அவ்வாறு சுற்றும்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரன்மீது படும்.
டியூப் லைட்டுக்குக் கீழே நாம் அமர்ந்து படிக்கும்போது வெளிச்சம் நம் தலையில் பட்டு தலையின் நிழல் புத்தகத்தில் படுவதை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
அதாவது சந்திரன், பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களைச் சந்திரன்மீது படுவதிலிருந்து மறைத்துவிடும். அதுவே சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு (Lunar Eclipse) எனப்படுகிறது.
அதே வேளையில், பூமியானது சூரியனை மறைக்கும்போது அது சூரிய கிரகணம் (Solar Eclipse) எனப்படும்.
சூரியன், பூமி, சந்திரன், ஆகிய மூன்றும் சுற்றுப் பாதையில் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் சமமாக வரும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
கிரகணம் உள்ளிட்ட இயற்கை மாற்றங்கள் ஏன்?
பொதுவாக அமாவாசை அல்லாத நாட்களில் நிலவின் வெளிச்சம் அதன் அளவிற்கேற்ப பூமியில் தெரியும். ஆனால், சந்திர கிரகணத்தின்போது அந்த வெளிச்சம் மறைக்கப்படுகிறது.
இது இயற்கைக்கு மாற்றமானதொரு நிகழ்வாகும்.
அவ்வாறு இயற்கைக்கு மாற்றமான சூழலை உருவாக்குவதற்கான சக்தி தனக்கு உண்டு என்பதைக் காட்டுவதே இதன் மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நோக்கமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நாம் சான்றுகளை அனுப்புவது அச்சமூட்டும் நோக்கத்திற்காகத் தவிர வேறெதற்குமில்லை. (17:59)
சந்திர கிரகணத் தொழுகை முறை
o சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
o கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.
o பள்ளியில் தொழ வேண்டும்
o இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.
o இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்
o ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்
o நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்
o கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும்.
o மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.
இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:
o ‘நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ 1051, முஸ்லிம் 1515)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரீ 1065, முஸ்லிம் 1502)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீர் கூறினார்கள்.
நீண்ட நேரம் ஓதினார்கள்.
பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள்.
பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள்.
ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் – முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் – ஓதினார்கள்.
பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள்.
பிறகு ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து’ என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள்.
இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.
(இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.
(தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது.
பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள்.
பின்னர் ‘இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500)
o ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை’ என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1515
‘o கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரீ 1044, முஸ்லிம் 1499)
o சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) ‘இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும், பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ 1059, முஸ்லிம் 1518)
அனைவரும் தொழுது அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவோம்!