இஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்?
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்.
இஸ்லாமிற்கெதிரான பதிவுகள் குறித்து உரையாடும் போது முஸ்லிம்கள் பலரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துக்கள்,
அம்மாதிரியான பதிவுகள் நம்மை சீர்தூக்கி பார்க்க உதவுகின்றன, இவற்றிற்கு பதில் கண்டெடுக்க முயற்சி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்கின்றோம்.
இது போன்ற பதிவுகள் முஸ்லிமல்லாதவரை இஸ்லாம் நோக்கி கொண்டு வருகின்றன என்பன போன்றவையாகும்.
ஆம். இந்த கருத்துக்கள் உண்மைதான். இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களையோ அல்லது இஸ்லாமிற்கு வெளியே இருந்து விட்டு மீண்டும் உள்ளே நுழைந்தவர்களையோ காரணம் கேட்டோமேயானால் மேலே சொல்லப்பட்டுள்ள பதில்களில் ஏதாவது ஒன்றை பெரும்பாலானவர்கள் கூறுவார்கள்.
ஆக, இஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்பது பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்தாக இருக்கின்றது.
நாம் மேலே பார்த்த காரணங்கள் மட்டுமல்லாது வேறு மாதிரியான நன்மைகளை இந்த பதிவுகள் தருகின்றனவா?…ஆம் என்றால் எம்மாதிரியான நன்மைகள் அவை?
நாம் மேலே பார்த்தவைகள் மட்டுமல்லாது வேறு பல நன்மைகளையும் அம்மாதிரியான பதிவுகள் நமக்கு தருகின்றன என்பதை ப்ராட்டிகலாக விளக்க முயற்சிக்கும் பதிவே இது…
இந்த பதிவிற்கு நான் உதாரணமாக எடுத்து கொள்ளப்போவது, உலகின் “உண்மையான” கம்யுனிஸ்ட்களான வினவு குழுவினரை தான் (பித்தலாட்டங்களில் ஈடுபடுபதற்கு பெயர் தான் உண்மையான கம்யுனிசமோ?…பார்க்க <<வினவின் பித்தலாட்டம் அம்பலம்>> மற்றும் <<திருந்த மாட்டீர்களா வினவு>>).
பல மாதங்களுக்கு முன் அஹ்மதியாக்கள் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது வினவு. வழக்கம் போல தங்களது இஸ்லாத்திற்கெதிரான வாதங்களை போகிற போக்கில் தெளித்து விட்டு போனார்கள் வினவு குழுவினர். அக்கட்டுரையின் மையக்கருத்து நியாயமானதாய் இருக்க, அதற்கு ஆதரவாக என்னுடைய கருத்தை தெரிவித்து விட்டு, இஸ்லாமிற்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தேன்.
பின்னூட்டங்கள் வளர ஆரம்பித்தன. மேலும் பலரும் தங்களது இஸ்லாம் குறித்த விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். மிக நீண்ட உரையாடல் அது. பலருக்கும் பதில் சொல்ல ஆரம்பிக்க இஸ்லாம் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். அறிந்தவற்றை கருத்துக்களாக முன்வைத்தேன். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், அது தான் நான் பதிவுலகில் கலந்து கொண்ட முதல் உரையாடல்.
இங்கே சற்று நிறுத்தி ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்லாமிற்கு எதிரான வாதங்களுக்கு பதில் தேட தொடங்கியபோது நான் வியப்படைந்த ஒரு விஷயம், அழைப்பு பணியில் ஈடுபட்டிருந்த எண்ணற்ற சகோதர சகோதரிகளை கண்டு தான்! அதிலும் இளைஞர்கள் அதிகளவில் இருந்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது.
எவ்வளவு அழகாக பணியாற்றுகின்றார்கள்! சுப்ஹானல்லாஹ். இஸ்லாம் மீது அவர்கள் கொண்டிருந்த தன்னம்பிக்கையும், ஆழ்ந்த இஸ்லாமிய ஞானமும், எதை கண்டும் அஞ்சாத அவர்களது உள்ளமும் என்னை திணறடித்தன. பல்வேறு கொள்கை கொண்டவர்களுடன் அவர்கள் புரிந்த/புரிந்து கொண்டிருக்கும் உரையாடல்களும் என் தேடல்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தன.
பதிவை தொடர்வோம்.
அந்த பதிவில் கருத்து தெரிவித்த பி.ஏ.ஷேக் தாவுத் (அத்திக்கடையன் வலைத்தளத்தை நடத்தியவர். அந்த தளம் தற்போது செயல்படவில்லை. ஆனால் மின்னஞ்சல், பின்னூட்டங்கள் மூலமாக தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்), என்னுடைய கருத்துக்களை படித்து விட்டு, எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக மெயில் அனுப்பினார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஈமானை பற்றி பிடித்து கொண்டிருப்பவர்களின் நட்பை நாம் என்றும் விரும்புவோம். முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும் மற்றொரு சகோதரர் என் நட்பு வட்டாரத்தில் சேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
வினவின் அதே பதிவில் எனக்கு அறிமுகமான மற்றொரு நபர் சகோதரர் “நெத்தியடி” முஹம்மத் அவர்கள். ஆம், பின்னூட்டவாதி தளத்தை நடத்தி கொண்டிருக்கும் முஹம்மது ஆஷிக் பற்றி தான் பேசுகின்றேன். அவருக்கும் அது தான் முதல் விவாதம் என்று நினைக்கின்றேன். அவருடைய ஊக்கமும் எனக்கு பலத்தை கொடுக்க மேலும் மேலும் பதில்களை பதித்தோம்.
மேலும் ஒரு நம்பிக்கையாளர் அணியில் சேர்ந்த உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்தோம்.
இப்படி எங்கள் மூவரையும் உருவாக்கி எங்கள் அழைப்பு பணிக்கு அடித்தளம் போட்டது வினவின் அந்த பதிவு தான்.
பின்னர் சகோதரர்களின் ஆலோசனைப்படி எதிர்க்குரல் தளம் தொடங்கப்பட்டது. நானும், ஷேக் தாவுத்தும் எங்களது வலைத்தளங்களின் மூலம் செயல்பட, பின்னூட்டங்கள் வாயிலாக தன்னுடைய செயல்பாட்டை தொடர்ந்தார் முஹம்மது ஆஷிக்.
வினவு தளத்தில் மேலூர் ஷாஜஹான் அவர்கள் நடத்திய விவாதங்களையும் மறக்க முடியாது.
பிறகு, எங்களுடைய நட்பு வட்டாரம் போதாதென்று நினைத்த வினவு குழுவினர் மேலும் ஒரு சகோதரரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர், வலையுகம் தளத்தை நடத்தி வரும் சகோதரர் ஹைதர் அலி. வினவின் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளில் பின்னூட்டமிட்டு கொண்டிருந்தார் ஹைதர் அலி. அதன் மூலமாக அவர் எங்களுக்கு அறிமுகமாக, நாளடைவில் எங்களது நட்பு வட்டாரத்தில் சேர்ந்தார். வினவின் பின்னூட்ட பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் சகோதரர் ஹைதர் அலிக்கும் பங்குண்டு.
இப்படி எங்கள் நால்வருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, நாங்கள் அனைவரும் வினவின் இஸ்லாத்திற்கெதிரான பதிவுகள் மூலம் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான்.
பின்னர், முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது வலைத்தளங்களை தொடங்கினார்கள். இன்று முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது தளங்கள் மூலமாக சிறப்பானதொரு அழைப்பு பணியை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கு அஸ்திவாரம் போட்டு, அவர்களுக்கு ஊக்கமாய் இருந்தது வினவும் அதன் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகளும் தான்.
வெவ்வேறு திசையில் பயணித்து கொண்டிருந்த எங்கள் நால்வரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட துணையாய் நின்றது வினவின் பதிவுகளே.
இன்று மேலும் பல பதிவுலக சகோதர சகோதரிகளை எங்கள் குழுவில் இணைத்து கொண்டு அழகான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
ஈமானை இறுக பற்றி பிடித்திருப்பவர்கள் மத்தியில் இருப்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்த அனுபவத்தை பெறுவதற்கு எது ஆரம்பமாக (source) இருந்தது என்று உற்று நோக்கினோமேயானால் அது இஸ்லாத்திற்கெதிரான பதிவுகளில் தான் போய் நிற்கும்.
இறைவன் மீது ஆணையாக, வினவில் அந்த பதிவு வந்திருக்காவிட்டால், அதில் நான் கலந்துரையாடாமல் இருந்திருந்தால் இன்று நானோ அல்லது எதிர்க்குரலோ அழைப்பு பணியில் இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.
ஆக,
முதல் பத்தியில் நாம் பார்த்த நன்மைகள் மட்டுமல்லாது ஈமானில் சிறந்து விளங்குபவர்களை நமக்கு அடையாளம் காட்டுபவையும் இத்தகைய பதிவுகள் தான்.
அடையாளம் காட்டி, அவர்களுடன் நம்மை இணையச் செய்து இறையச்சம் உள்ள நல்லடியார்களாக நம்மை தொடரச்செய்வதும் இவை தான்.
இவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட புதிது புதிதாக பலரை உருவாக்கி, அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான்.
இஸ்லாமிற்குள் முழுமையாக நுழைந்து விட சொல்கின்றது குர்ஆன். அறியாமையால் சில முஸ்லிம்கள் இது தெரியாமல் இருந்து விடுகின்றனர். அவர்கள் அறியாத இந்த செய்தியை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை முழுமையாக இஸ்லாமிற்குள் நுழைய செய்வதும் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகள் தான்.
இப்படி எல்லா வகையிலும் நமக்கு உறுதுணையாய் இருந்து, சத்தியமார்க்கத்தை முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு கொண்டு செல்ல உதவியாய் இருக்கும் அத்தகையோருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இப்போதைக்கு நம்மால் முடிந்தது “நன்றி” என்ற அழகான சொல் மட்டுமே….
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதியணைக்க நினைக்கின்றனர். மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்.. (குர்ஆன் 61:08)
முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள். நீங்கள் இரு தரப்பு வாதங்களையும் கண்டு குழம்பி போயிருக்கலாம். அது இயல்பானது தான், நாங்கள் ஒவ்வொருவரும் அனுபவித்தது தான்.
இப்போது எது உண்மை என்று எப்படி கண்டுபிடிக்க போகின்றீர்கள்? எப்படி பார்த்தாலும் உங்களுக்கு இருப்பது ஒரே வழிதான். நீங்களாக குர்ஆனை முழுமையாக படிக்க முன்வருவது தான் அது. அப்படி தாங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmailcom) அனுப்புவது தான்.
இன்ஷா அல்லாஹ் குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை அனுப்புகின்றேன் (மூன்று வெவ்வேறு சகோதரர்களால் மொழிபெயர்க்கப்பட்ட மூன்று வெவ்வேறு தமிழாக்கங்கள்).
அல்லது, கீழ்காணும் லிங்கிலிருந்து குர்ஆனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://islamkural.com/downloads/alkuran_tamil_urai.pdf
இறைவா, இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் முன்வைக்க செய்து, அவற்றிற்கு பதில் சொல்லுமளவு எங்களது கல்வி ஞானத்தை உயர்த்துவாயாக…ஆமீன்.
இறைவா, வினவு போன்றவர்களின் சூழ்ச்சிகளை கடந்த காலங்களில் எங்களுக்கு உணர்த்தியது போல், இனியும் உணர்த்தி அவர்களுக்கு தகுந்த பாடத்தை கொடுக்குமளவு எங்களது கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக…ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
source: http://www.ethirkkural.com/2011/05/blog-post_09.html