அகத்தின் அழகே அழகு
.
ஸைய்யித் அப்துர் ரஹ்மான் உமரி
(1) பொதுவாக நாம் மற்றவர்களிடம் துஆ செய்யுமாறு கோரும்போதும் மற்றவர்களுக்காக துஆ செய்யும்போதும் உடல்நலத்திற்கு முதலிடம் அளிக்கின்றோம்.
(2) இஸ்லாமியக் கண்ணோட்டத்தின்படி உடல்நலம், உண்மையில் அக நலத்தை சார்ந்துள்ளது, அகநலத்தைப் பின்தொடர்ந்தே வருகின்றது.
(3) அக நலத்தையே இஸ்லாம் பெரிதும் வலியுறுத்துகின்றது.
(4) அஷ்ஷிஃபாஉல் காமில் – Real Shifa – என்பது உண்மையில் அக நலமே ஆகும்.
(5) தூய அகத்தோடு மனிதன் பிறக்கின்றான், அதே நிலையில் தூய அகத்தோடு உலகைப் பிரிந்து தன்னிறைவனை சந்திப்பவன் வெற்றி பெறுகின்றான்.
(6) வாழ்வு முழுக்க அகம் மாசடையாமல் பார்த்துக்கொள்வதே உண்மையில் இஸ்லாமியத் தன்மையாகும்.
(7) சிந்தனைக் கோளாறுகள், மனஅழுக்குகள் ஆகியவையே அகத்தைப் பாழ்படுத்துகின்றன.
(8) இஸ்லாமிய மருத்துவத்தில் அக நலத்திற்கே முதலிடம் முக்கிய இடம் அளிக்கப்படுகின்றது.
(9) அக நலத்தில் தமானிய்யத் (இறைதீர்மானங்களில் திருப்தி) முதல் நிலை வகிக்கின்றது. ஸலாமத் (சலனமற்ற தன்மை) இதன் உச்ச நிலை ஆகும்.
(10) சலனமற்ற அகம் என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் ‘கனவு’ ஆகும்.
(11) சலனமற்ற அகத்தோடு இறைவனை சந்திக்கவேண்டும் என வான்மறை குர்ஆன் வலியுறுத்துகின்றது.
(12) தூய்மை என்பதே உண்மையில் அழகு. தூய அகத்தைப் பெற்றோரே அழகுடையர்.
(13) தூய அகத்தைப் பெற்றோருக்கென ஆற்றலும் வல்லமையும் மிக்க அல்லாஹ்விடத்தில் கண்ணியமான சிறப்பிடம் உண்டு.
(14) அத்தகு தூய அகத்தைக் கொண்டோரைக் கண்டால் நமக்காக துஆ செய்யுமாறு அவரிடம் கோரல் வேண்டும்.
(15) நாமோ இன்று கண்டவரிடத்தில் எல்லாம் துஆ செய்யுமாறு பிச்சை எடுத்துக்கொண்டுள்ளோம்.
(16) அப்படிக் கோருவதாக இருந்தாலும் தூய அகத்திற்காக துஆ செய்யுமாறுதான் கோரவேண்டும்.
(17) அழுக்காறு அற்ற தூய அகத்தினை அடைய இஸ்லாமிய சிந்தனை மிகமிக அவசியம்.
(18) தூய அகம் என்னும் நிலையை அடையாதோரும் அடைய முயற்சிக்காதோரும் தான் இன்று இஸ்லாமிய உம்மத்தின் மேற்தட்டில் நிரம்பியுள்ளார்கள். இன்றைய நமது கெடுவாய்ப்பு இதுவே
(19) ஆன்மீகம் என்னும் பெயரில் அரசியல் செய்வோர் உம்மத்தில் விரவிக் காணப்படுகிறார்கள். இதுவே இன்றைய நமது ஆன்மீக அரசியல்.
(20) ‘இறைவனின் திருக்கலிமாவை மேலோங்குவதற்காக’ என்போரும் தமது மனோ இச்சைகளின் வழிநடப்பதற்கே முதலிடம் அளிக்கிறார்கள்.
(21) நமது செயற்பாடுகள், பண்புகளைக் காட்டிலும் நமது சிந்தனையை வழிகெடுப்பதற்கே ஷைத்தான் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறான்.
(22) போற்றத்தகு பண்புகளை வெளிப்படையாகக் கொண்டிருந்தாலும் உள்ளுறையும் அகம் படுமோசமாக மாசடைந்து அலங்கோலமாக கிடக்க பெரிதும் வாய்ப்புண்டு.
(23) அகத்தின் நிலையை அவ்வப்போது இடைவிடாமல் கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
(24) அகத்தில் தெறிக்கும் ஈமானிய ஜொலிப்பை அன்றாடம் அளவிட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
(25) அகத்தூய்மை கோரி இறைவனிடம் மன்றாடுவதை ஒரு நாளும் விட்டுவிடக்கூடாது.
இறையருளால் இக்குறிப்புகள் உங்களுக்கும் ஓரளவு பயனளிக்கும் எனும் எதிர்பார்ப்போடு!
– அப்துர் ரஹ்மான் உமரி