உகாண்டா: வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி
உகாண்டா ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. முறைப்படுத்தப்பட்ட கல்வி வழங்கும் அளவுக்கு பொருளாதார, சமூக சூழல் எதுவும் இல்லாத ஒரு நாடு.
கட்டமைக்கப்பட்ட கல்வி வழங்க முடியாத சூழலில் அவர்களிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளைக் கொண்டே உகாண்டாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வறுமை, வேலையின்மையை சரி செய்ய அவர்களை தொழில் முனைவோராகவும், தொழில் அதிபர்களாகவும் மாற்றும் ஆதாரக் கல்வி தொழில் கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
21 ஆம் நூற்றாண்டு இளைஞர்கள் பலர் “ஒரு வேலையைப் பெறுவதை” விருப்பத் தேர்வாக இல்லாமல் வாழ்வின் அடிப்படைத் தேவையாகப் பார்க்கிறார்கள்.
ஆனால் உலகம் முழுவதும் செய்யும் வேலை பறிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை புதியவர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிதாகி வருகிறது. உகாண்டாவில் இந்த நிலை மிக மோசம்!
வேலை வாய்ப்பில்லா இளைஞர்கள் 66 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது உகாண்டா. இது ஆஃப்ரிகா கண்டத்தின் மிகப் பெரும் சதவீதமாகும்.
மோசமான பொருளாதார சூழலில் சமூகவாழ்வில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள கல்வியும் அதை கற்பிக்கும் நிறுவனங்களும் அவர்களுக்கு அவசியமாகிறது. உகாண்டா இளைஞர்களுக்கு பல்வேறு அம்சங்களில் கல்வியும், தொழில் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.
அது பற்றி அல்ஜஸீரா நடத்திய “ரெபெல் எஜூகேஷன்” டாக்குமெண்டரிக்காக நடத்திய கள ஆய்வே இந்த தொகுப்பு.
உகாண்டா இளைஞர்களுக்கு கற்பிக்கப்படும் முதல் அம்சம்!
நாற்பது அறிஞர்கள் தலைமையில் பல வழிகாட்டிகளைக் கொண்டு தொழில் கல்வி உகாண்டா இளைஞர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. அந்த வழிகாட்டிகள் அறிஞர்களோடு கூடி அமர்ந்து நேரத்தை செலவிட்டு புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவது, தலைமைத்துவம், விமர்சன சிந்தனை, சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து கலந்தாலோசனை செய்கிறார்கள்.
அதன்பின் வழிக்காட்டிகள் அதை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்றுவிக்கும் வழிமுறைகளில் விளையாட்டும் பயன்படுத்தப்படுகிறது. அதன்வழி குழுவாக இயங்க பயிற்றுவிக்கப்படுகிறது. பொதுவெளிகளில் பேசவும் அவர்களுக்கு ஊக்குவிக்கப்படுகிறது.
அறிஞர்கள் உகாண்டா இளைஞர்களை வணிகத்தில் ஈடுபடவும் மேலும் அவர்கள் வாழும் சொந்த சமூகத்தின் தேவைகளை புரிந்துகொண்டு அதற்காக உழைக்கவும், திறந்த மனதோடு இருக்கவும் உற்சாகப்படுத்துகிறார்கள்.
உகாண்டா பெருந்தொகையான இளைஞர்களைக் கொண்ட நாடு. 70 சதவீதம் இளைஞர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள். (குறிப்பாக நமது நாட்டில் நிலவும் ஒரு சிக்கல் அங்கும் இருப்பதை) உகாண்டாவின் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் இம்மானுவேல் கல்யாபி கூறுகிறார் : படித்து வரும் மாணவர்களுக்கும் சந்தைக்குத் தேவையான வேலைக்காரர்களுக்கும் இடையே பெருத்த வேறுபாடு நிலவுகிறது. இது படித்து வரும் பட்டதாரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
கற்பிக்கப்படும் இரண்டாவது அம்சம்!
தொழில் முனைவோரை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. வெறும் பாடமாக இல்லாமல் வாய்ப்புள்ள துறைகளுக்கு அங்கிருக்கும் சாத்தியமான நடைமுறைகளைக் கொண்டு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.
உகாண்டாவின் கல்வி முறையில் முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயங்களில் ஒன்று (இந்தியாவிலும் கூட) அவர்கள் நிறைய கோட்பாட்டு அறிவை தருகிறார்கள். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது. படித்து முடித்த பிறகு வேலை கிடைப்பதில்லை. படித்தவர்களிடம் பணியாற்றும் திறனும், திறமையும் இருப்பதில்லை. இதில் ஒரு பெரும் சவால் ஏற்படுகிறது.
புதிதாக வேலையில் சேரும் படித்தவர்களுக்கு வேலை செய்வதற்கான திறனையும் அதோடு சிறந்த கல்வியையும் வேலை தருபவரோ, அல்லது நிறுவனமோ மீண்டும் பயிற்றுவிக்க வேண்டிய சிக்கல் இருக்கிறது என்கிறார் இம்மானுவேல் கல்யாபி.
லிலியன் ஏரோ ஒலோக் (கல்வி ஆலோசகர்! உகாண்டா மகளிர் தொழில் முனைவோர் சங்கம், உகாண்டா உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்,) 2009 இல் ஒரு தொழில் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். விதவைகள் மற்றும் HIV நோயால் பாதிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கி சமூக ஆதரவோடு நிதி திரட்டி அந்த பெண்களுக்கு மறு சுழற்சி செய்யப்பட்ட பேப்பரிலிருந்து மணிகள் செய்ய பயிற்சியளித்து, செய்ய வைத்து அந்த மணிகளை இவரே பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். லிலியனிடம் இப்போது 230 பெண்கள் வேலை செய்கிறார்கள். அவருடைய மணிகள் உலகம் முழுவது ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“நான் மாற்றத்தை காண விரும்புகிறேன், இந்தப் பகுதியில் இருக்கும் HIV நோய் பாதிக்கப்பட்டவர்கள், விதவைகள், கணவனில்லாத ஒற்றைத் தாய்மார்கள் வறுமையால் பாதிக்கப்பட்டோர்களை மத்திய தர வருவாய் ஈட்டும் சமூகமாக அவர்கள் ஏற்றம் பெற விரும்புகிறேன். இப்படி சொந்த வியாபாரம் செய்வது பல வகைகளில் எனக்கு உதவுகிறது” என்கிறார் லிலியன் ஏரோ ஒலோக்.
கற்பிக்கப்படும் மூன்றாவது அம்சம்!
தற்போது உகாண்டாவில் 350 பள்ளிகள் இயங்கி வருகிறது. தொடர்ச்சியாக இன்னும் 100 பள்ளிகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 2024 ஆண்டை இலக்காக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் மாணவர்கள் பயனடைகிறார்கள். மேலும் ஆஃப்ரிக்கா முழுவதும் ஆண்டுக்கு நான்கு மில்லியன் மாணவர்கள் பயன் பெறும் வாய்ப்பும் உள்ளது.
வழிகாட்டிகள் மற்றும் அறிஞர்களின் வழிகாட்டுதல் வழியாக உகாண்டா இளைஞர்கள் பள்ளியில் படிக்கும் போதே ஒரு வியாபாரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
அந்த வழிகாட்டிகள் கூறுகிறார்கள் : நாங்கள் மாணவர்களை கண்காணித்தோம். அவர்கள் தங்களது படிப்பு, வீட்டு வாழ்க்கை, மன அழுத்தம் ஆகியவற்றை சமாளித்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்கள்.
அவர்களிடம் நிதி மூலதனம் குறைவாகவே இருக்கிறது. இருக்கும் பணத்தை முதலீடு செய்து அதிலிருந்து லாபத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.
வியாபாரத்திறன் மூலமாக நிதர்சன உலகை கண்டுகொள்கிறார்கள். அதற்கு ஏற்ப தங்களது வருங்காலத்தை திட்டமிடுகிறார்கள். தங்களது குடும்பத்திற்கும் உதவுகிறார்கள். தங்களது சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
“கல்வி என்றால் என்ன?”
இந்த கேள்வி ”ரெபெல் எஜுகெஷன்” டாக்குமெண்டரி படப்பிடிப்பின் போது என்னை நானே கேட்டுக்கொண்டது.
உகாண்டாவில் கல்வி ஆர்வலர்களை நான் சந்தித்தேன், அவர்கள் குறிப்பிட்ட சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்வியை வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். (இது போன்ற செயல்பாடுகள் கல்வியின் அடிப்படை தெரியாத கல்வியாளர்களை உருவாக்கி இருக்கிறது.) அதன்பின் நான் புரிந்து கொண்டது கல்வித்துறையில் புதிய கல்வியாளர்களை, பயிற்றுவிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
உலகம் முழுவதும், ஒவ்வொரு தலைமுறையினரும் தங்கள் குழந்தைகள் பெறும் கல்வி பற்றி கவலைப்படுகிறார்கள் என்பதை நான் பார்த்தேன்.
நாம் தினசரி பத்திரிக்கைகளிலும் தலைப்புச் செய்திகளிலும் இன்றைய கல்வி முறை லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வித் தரத்தை குறைத்திருக்கிறது என்ற செய்தியைப் பார்க்கிறோம்.
குருட்டு மனப்பாடம் செய்து பழக்கப்பட்டு பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்காக சிலர் கவலைப்படுகிறார்கள். சிலர் அதற்கு மாறாக, ஏழு வருடங்கள் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.
அனைவருக்கும் தேவை என்ன என்பதில் ஒரு மாறுபட்ட பார்வை இருப்பது தெரிகிறது.
ஆனால் உகாண்டா போன்ற மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் இல்லாத ஒரு நாட்டில் எழும் “எதற்காக மக்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது?” என்ற கேள்விக்கு உண்மையான பதில் என்ன?
படித்தவர்களை வேலைக்கு அமர்த்த காலி இடங்கள் இல்லை. உகாண்டாவில் பிரச்சனைகள் தெளிவாவதைத் தினமும் கண்டேன். வேலை செய்யத் துடிக்கும் இளைஞர்களிடமிருந்து வேலை தேடி நூற்றுக்கணக்கான விளம்பரங்கள் கதவுகளில் ஒட்டப்படிருந்ததைப் பார்த்தேன். மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டுகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.
உகாண்டாவின் உயர்நிலை பள்ளிகளுடன் ”என்ஜிஓ”க்கள் சேர்ந்து சில திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளன. நேரம் அனுமதித்திருந்தால், அவர்களது வேலைகளை இன்னும் படமாக்கியிருப்பேன்.
உதாரணமாக, ஆடு வளர்ப்புத் திட்டம், மாணவர்களுக்கு ஆடு வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. விற்பதற்கு மட்டுமல்ல!
அவர்கள் வளர்க்கும் ஆடுகள் போடும் குட்டிகளை தங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். அதன் வழி பிறருடைய வாழ்வாதாரங்களை மேம்படுத்த உதவி செய்கிறார்கள்.
மாணவர்கள் அவர்களே உருவாக்கிய நவீன சாதனப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். மேலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் இருந்து செங்கற்கள் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது.
நாங்கள் நகருக்கு வெளியே புறப்பட்டோம். அந்தப் பகுதிகள் தெளிவாக இருந்தது. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு புக்கீலி பள்ளி இருந்தது. அங்கு வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விவசாயம் இருந்தது.
இந்த டாக்குமெண்டரி கள ஆய்வில் என்னை கவர்ந்தது இந்த இளம் மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் தலைமைத்துவ வழிகாட்டல் மூலம் அவர்களின் சமூகங்களில் மாற்றம் ஏற்படுத்தும் முகவர்களாக ஆகிவிட்டனர்.
இந்த திறன் சார்ந்த நடைமுறைக் கல்வி (practical skill-based education) நடைமுறையில் உள்ள படிக்கும் திறன் சார்ந்த கல்விக்கு (academic learning) முழுமையான மாற்றாக இல்லை. ஆனால் நடைமுறையில் இருக்கும் கல்வியை விட மேம்பட்டது.
source: http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/history/item/1053