ஹலாலைப் பேணுவோம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
” كَسْبُ الْحَلالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ ”
கடமையான வணக்கங்களுக்கு பிறகு ஆகுமான (ஹலாலான) வருமானத்தை தேடுவது கடமையாகும். (நூல்: பைஹகீ)
ஷத்தாது பின் அவ்ஸின் சகோதரி உம்மு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்;
ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு திறப்பதற்காக ஒரு கோப்பையில் ஆட்டுப்பாலை அவர்களிடம் கொடுத்து அனுப்பினேன். ஏனெனில் அன்றைய தினம் பகலும் நீளம், வெயிலும் அதிகம்.
ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை பெற்றுக்கொள்ளாமல் அந்த ஆடு எப்படி கிடைத்தது? என்று விளக்கம் கேட்டு என்னிடம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
பிறகு நான் “என்னுடைய சொந்த பொருளிலிருந்துதான் அதை வாங்கினேன் என்று சொல்லி அனுப்பியவுடன் அதை அருந்தினார்கள்.
மறுநாள் அவர்களிடம் வந்து,நான் உங்களுக்கு பால் கொடுத்து அனுப்பியபோது, ஏன் விளக்கம் கேட்டு அனுப்பினீர்கள்? என்று நான் கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:
”இவ்வாறு தான் இறைத்தூதர்கள் கட்டளையிடப்பட்டுள்ளார்கள்” என்று சொல்லி இவ்வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:
يايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم
”(என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள்;நல்ல காரியத்தையும் செய்யுங்கள்;நிச்சியமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன்”. (அல்-குர்ஆன் 23:51)
இந்த வசனத்தில் “நற்செயல் புரியுங்கள்” என்பதற்கு முன்பாக “ஹலாலனவற்றை உண்ணுங்கள்”என்று இறைவன் சொல்வதற்கு காரணம்,ஹலாலவற்றை உண்பதின் மூலம்தான் நல்ல அமல்களுக்குரிய தவ்பீக் கிடைக்கும்.
ஹராமான உணவால் நற்செயல் புரிவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதுடன் நற்காரியங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால்தான் ஸஹாபாக்கள் தெரியாமல் சாப்பிட்ட உணவையும் கூட பேணுதலுக்காக வாந்தி எடுத்தார்கள்.
ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (சிறு குழந்தையாக இருக்கும் பொழுது) ஸதகாவாக வந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார்கள்.அதனைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சீ.. சீ,.. எனக்கூறி துப்பச் செய்து விட்டு, ஸதகாவின் பொருட்களை நாங்கள் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?என்றார்கள். (நூல்: புகாரி)
ஹராமான பொருளில் நின்றும் ஒரு பேரீத்தம் பழத்தைக்கூட தன் பேரன் உண்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பவில்லை.
அந்நியர்கள் ஹலால் ஹராமை பேணமாட்டார்கள். அவர்களுக்கு இத்தகையோர் சட்டமும் இல்லை. ஆனால் நாம் ஒரு உணவை உண்ண வாங்குமுன் அது பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த உணவு எங்கிருந்து வருகிறது? எவற்றைக் கலப்படம் செய்து இது சமைக்கப்படுகிறது? இதில் ஹராம் கலந்துள்ளதா?என்பதையெல்லாம் நாம் அதை வாங்கு முன் கண்டறிய வேண்டும்.
அன்றைய ஸஹாபாக்கள் அனைவருமே ஹலால், உடைய விஷயத்தில் பேனுதலாகவும்,ஹராமுடைய விஷயத்தில் எச்சரிகையாகவும் இருந்துள்ளார்கள். எனவே, நம்முடைய வாழ்கையிலும் ஹலால், உடைய விஷயத்தில் பேனுதலாகவும், ஹராமுடைய விஷயத்தில் எச்சரிகையாகவும் இருக்க வேண்டும்.