மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்
உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று கூறுவார்கள்,
”உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.” (ஆதாரம்: அபூதாவூத்)
நாம் மய்யித்தை அடக்கம் செய்தவுடன், உடனே அங்கேயிருந்து புறப்படத்தான் பார்ப்போம். அல்லது ஹஜ்ரத் துஆச் செய்வார். எல்லோரும் வாடிக்கையாக வழக்கமாக ஆமீன் கூறுவோம். அந்த மய்யித்துக்காக நாம் யாராவது ஒருவர் சிறிது நேரம் இருந்து உருக்கமாக அல்லாஹ்விடம் துஆச் செய்வோமா..? எப்பொழுதும் சடங்கும், சம்பிரதாயமும் தான் !
ஒரு ஹதீஸ்…
அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; ”நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டும் என்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச் சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள்.
ஒரு ஆட்டை அறுத்து என்பது பொருள்.. ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம் வரை, எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு மணி நேரம் அதிகம் தான் ஆகும்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்; அடக்கம் செய்தபின் மோதினார் வழக்கமாக ஓதும் ‘துஆ’வுடன் திரும்பி, மறுபடியும் பள்ளிவாசலுக்குள் நுழைந்து மறுபடியும் இமாம் சாகிப் இன்னொறு முறை ‘து’ஆ’ செய்து வந்தவர்களுக்கு எல்லாம் முஸாபஹா செய்வதில் நேரத்தை செலவிடுகிறோம். இது மார்க்கத்தில் சொல்லப்படாத வழக்கமாகும்.
மேற்காணும் ஹதீஸிலிருந்து அடக்கம் செய்தபின் உறவினர்கள் அந்த மய்யித்துக்கு துஆ செய்வது முக்கியமானது மட்டுமின்றி, அந்த மய்யித்துக்கு மிகவும் அவசியமானது என்பதையும் விளங்கலாம்.
மறுபடியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தியதை எண்ணிப்பாருங்கள்…
”உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.”
ஆக அடக்கம் செய்யப்பட்டவுடன் அந்த மய்யித் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்பது மட்டுமல்ல அந்த நேரத்தில் நாம் கேட்கும் ‘துஆ’ அந்த மய்யித் உறுதியுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனும்பொழுது அந்த மய்யித்துக்கு அந்த உதவி எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும்.
அந்த மய்யித்தை விசாரணை செய்யப்படும் நேரத்தில் ‘துஆ’ செய்யும் அந்த மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை!
அந்த மய்யித்தை விசாரணை செய்யப்படும் நேரத்தில் ‘துஆ’ செய்யும் அந்த மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை!
அந்த மய்யித்தை விசாரணை செய்யப்படும் நேரத்தில் ‘துஆ’ செய்யும் அந்த மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை!
மேலும் ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு பதிவிடுகிறேன்…
ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ர் தொழுகைக்காக தயராகி கொண்டிருந்தார்கள் அப்போது வானவத்தூதர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,
“தோழரே நபியே வானத்தில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் துக்கப்பட கூடிய ஓர் ஆட்டு இடையார் இன்று மரணித்து விட்டார்” என்று கூறினார்கள்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு இறந்து விட்டார்கள் எனக் கருத்தி பார்க்க விரைந்தார்கள் அதை தொடர்ந்து ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,
“தோழரே இவரது மரணத்திற்க்காக அல்லாஹ்வின் அர்ஷே குலுங்கியது” என்றார்கள.
ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை நல்லடக்கம் செய்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! என்று கூறினார்கள்
சற்று நேரம் சென்றதும் அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! என்று கூறினார்கள்.
அடக்கம் செய்து விட்டு சஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே வழக்கத்திற்கு மாறக மூன்று முறை சுப்ஹானல்லாஹ்! என்றும்; மூன்று முறை அல்லாஹு அக்பர்! என்றும் கூறினீர்களே என்று கேட்டதற்கு;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
“ஸஃதுடைய உடலை கப்ரில் வைத்த உடன் அவரை கப்ர் நெருக்கத் துடங்கியது அப்போது சுப்ஹானல்லாஹ்! என்றேன்
பின்பு அவரின் கப்ர் வாழ்க்கைக்காக பூமி விசாலமாகியது; அப்போது அல்லாஹு அக்பர் என்றேன்” என்று கூறிவிட்டுக் கூறினார்கள்;
“மனிதனுக்கும் மண்ணுக்கும் ஒரு நெருக்கம் உண்டு, கப்ருடைய நெருக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பார் என்றால் அது ஸஃதுதான்” என்றார்கள்! (நூல்: அஹமது)
எந்த ஒரு ஸஹாபியின் மரணத்திற்கு அல்லாஹ்வின் அர்ஷே குலுங்கியதோ அந்த உத்தம ஸஹாபியை அடக்கம் செய்தவுடன் நடைபேற்ற நிகழ்வை எண்ணிப்பார்ப்போம். அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘துஆச்’செய்ததையும் நினைவில் கொள்வோம்.
எனவே அந்த நேரத்தில் துஆ கேட்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இந்த அழகிய சுன்னத்தை பேணுவோம்.
நமக்கு இப்பொழுது எதுவும் புரியாது. நம்மை அடக்கம் செய்யும்போது எல்லாம் புரிய வரும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
– சத்திய பாதை இஸ்லாம் & நீடூர்.இன்ஃபோ