நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்தி இரண்டாவது சொற்பொழிவு
அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஹிஜ்ரி எட்டு, ரமளான் மாதத்தில் மக்கா வெற்றி கொள்ளப்பட்டதற்கு மறுநாளான சனிக்கிழமையன்று ‘கஜாஅஹ்’ கூட்டத்தினர் ‘ஹுதைல்’ கூட்டத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவன் ஒருவனைக் கொன்றுவிட்டனர். அது சமயம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரை.
இதைத் தெரிவித்த அபூ ஷுரைஹ் அல்-கஜாயீ ரளியல்லாஹு அன்ஹு, ”அன்று பிற்பகல்லில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் முன் எழுந்து நின்றுகொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி கூறி அவனைப் புகழ்ந்த பின் இவ்விதம் சொன்னார்கள்” என்று கூறியிருக்கிறார்:
“மக்களே, அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் மக்காவைப் புனிதமானது (ஹரம்) ஆகவும், ஆக்கிரமிக்கப்பட முடியாததாகவும் ஆக்கியுள்ளான்.
யானைப்படைகள் மக்காவில் புகுந்து அதை அழித்து விடாதபடி அல்லாஹ் தடுத்துக் காப்பாற்றினான். தன் தூதருக்கும், முஃமீன்களுக்கும் அதன் பராமரிப்பு உரிமையை வழங்கினான். எனவே இறுதி நாள் வரையிலும், அல்லாஹ்வின் (அழிக்கமுடியாப்) பாதுகாப்போடு அது புனிதமானதாகவே இருந்துவரும்.
அதற்கொப்ப அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எவரும் அதில் இரத்தம் சிந்துவதோ, தொறட்டியால் மரங்களிலுள்ள கிளை, கொம்புகளை முறிப்பதோ ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகும்.
எனக்கு முன்னர் யாராலும் இதை ஆக்கிரமித்து அழிக்க முடியவில்லை; எனக்குப் பின்னரும் யாராலும் இதை ஆக்கிரமிக்க முடியாது. அல்லாஹ்வின் கோபம் மக்களின்மீது இறங்கிய காரணத்தால்தான் நான்கூட ஒரு சிறிது காலம் மட்டும் அதை ஆக்கிரமிக்க முடிந்தது.
அதற்குப் பிறகு, (எனது அந்த சிறு அவகாச ஆக்கிரமிப்புக்குப் பிறகு) நேற்று அது இருந்த அதே புனிதமான நிலையை இப்போதும் அது அடைந்து விட்டிருப்பதை நோட்டமிடுங்கள். இதிலுள்ள காட்டுமிருகங்கள் பீதியடையுமாறு செய்யக் கூடாது; முட்களை (முள் மரங்களை) ஒடிக்கவோ, புதிய பச்சிலைச் செடிகள், மரங்களின் தழைகளையும், கிளைகளையும் வெட்டவோ கூடாது; ஆனால் இத்கர் என்ற நன்னாரி வேர்களை எடுக்க மட்டும் யாவருக்கும் உரிமையுண்டு; மரம் செடிகளின் விதைகளைப் பரிசோதனை அதிகாரியும், அவற்றின் பாதுகாப்பாளர்களும் அன்றி (வேறு யாரும்)ப் பொறுக்கிக் கொள்ள அனுமதி உண்டு. அதன் (மக்காவின்) போரில் கிட்டிய பொருள்கள் எதையும் பெற நமக்கு அனுமதியில்லை.
இங்கே குழுமியுள்ள நீங்கள் இப்போது இங்கே இல்லாதவர்களுக்கு இச் செய்தியைத் தெரிவிக்க வேண்டும்.
உங்களிடம் எவரேனும், “ரஸூலுல்லாஹ்வே மக்காவில் சண்டை செய்துள்ளார்களே, (அப்படியிருக்க நான் மட்டும் சண்டையிடுவதில் தப்பென்ன?)” என்று கேட்டால் “தன் தூதருக்கு அதை அல்லாஹ் ஆகுமானதாக்கினான், உமக்கல்ல” என்று அவருக்குப் பதிலளியுங்கள்.
கஜாஅஹ் கூட்டத்தினரே, கொலை செய்வதிலிருந்து உங்கள் கரங்களை வாபஸ் வாங்குங்கள். கொலை செய்வது பயனுடையதாயின் பல்கிக் கொண்டு போகலாம், நீங்கள் ஒருவனைக் கொன்று விட்டது உண்மை. எனவே, அவன் உயிருக்கு ஈடாக நான் ஈட்டுத்தொகை கொடுத்து விடுகிறேன்.
இவ்வாறு நான் போட்டுள்ள இந்த (கொலை) நிறுத்த உத்தரவுக்குப் பின்னும், எவரேனும் கொலை செய்வாராயின் கொல்லப்பட்டவரின் கூட்டத்தார் கீழ்க்காணும் இரண்டில் தமக்கு இஷ்டமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
அவர்கள் விரும்பினால் கொலைக்காரனின் உயிரைக் கேட்கலாம் அல்லது அவர்கள் விரும்பினால் உயிருக்கு நஷ்டஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். (அபூ தாவூத், புகாரீ)
இன்ஷா அல்லாஹ் சொற்பொழிவு தொடரும்