கருத்து வேற்றுமை வரும் போதெல்லாம்….
وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَن تَعْتَدُوا ۘ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ ﴿٢﴾
முதல் முறையாக குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதிய போது, என்னை ஆட்டிப்படைத்த வசனங்களுள் பின்வருவதும் ஒன்று.
“இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்” (குர்ஆன் 5:2)
எந்த அளவுக்கு இந்த வசனம் ஆட்கொண்டது என்றால், எப்போது கேட்டாலும் அத்தியாயம் மற்றும் வசன எண்னை சொல்லும் அளவு உடனடியாக மனதில் பதிந்து போனது. இந்த வசனம் அப்படியான பாதிப்பை ஏற்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. அது இவ்வசனத்திற்கு முன்பாக வரும் மற்றொரு வசனம். அவ்வசனம்,
“மேலும் புனித மஸ்ஜிதை விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்” (குர்ஆன் 5:2)
மக்காவில் அமைந்திருக்கும் காபா எனப்படும் புனித இடத்திற்கு முஸ்லிம்கள் கொடுக்கும் முக்கியத்துவம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு அதி முக்கியமான ஒரு இடத்திலிருந்து முஸ்லிம்களை துரத்தியவர்களிடம் கூட நியாயமான முறையில் நடக்க சொல்லி வசனத்தை இறக்குகின்றான் இறைவன். தொடர்ந்து வரும் வசனம், நன்மையான விசயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செஞ்சுக்குங்கப்பா என்று வலியுறுத்துகின்றது.
இதனை நீங்கள் எப்படி புரிந்துக்கொள்வீர்கள்? மிக ஆழமான கருத்துக்களை மிக எளிதாக மக்களுக்கு புரிய வைப்பதாக எனக்கு தோன்றியது. ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகளால் தூரமாக செல்வதை இஸ்லாம் என்றுமே விரும்பியதில்லை. இதற்கு தொடர்ச்சியான உதாரணங்களை இஸ்லாமில் இருந்து காட்ட முடியும்.
நீங்கள் வெறுப்பவர்களுடன் குறைந்தபட்சம் நன்மையான காரியங்களிலாவது ஒன்று சேருவதின் மூலம், நாளடைவில் ஒரு புரிதல் ஏற்படலாம். அது விட்டுப்போன உறவை/நட்பை தொடர வைக்கலாம்.
யாருடனாவது கருத்து வேற்றுமை வரும் போதெல்லாம் அடி மனதில் தேங்கியுள்ள இந்த வசனம் உடனடியாக நினைவுக்கு வரும். சரி, சமாதானமா போவோமா என்ற எண்ணம் உதிக்கும். After all, குர்ஆன் அறிவுரைகளை புறந்தள்ளி விட்டு நானும் முஸ்லிம் என்று சொல்ல முடியாது பாருங்க…
– Aashiq Ahamed