இறைவன் அருளிய இல்லற வசனங்கள்
[ அறத்துப்பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் பாலியல் வசனமும்! இன்பத்துப் பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் அறத்துப்பால் வசனமும்!]
அறத்துப்பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் பாலியல் வசனம்..
”நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;…” (அல் குர்ஆன்: 2:187)
இந்த இறை வசனத்தில் நோன்புகால இரவு நேரங்களில்கூட உறவு கொள்வதற்கு அல்லாஹ் அனுமதியளித்திருப்பதிலிருந்தே உடலுறவின் மேன்மையை விளங்கலாம்.
அதுமட்டுமின்றி இவ்வசனத்திற்குள் இடம்பெற்றுள்ள ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்,நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்…”
என்கின்ற பிரபலமான வசனம் எல்லா திருமண சொற்பொழிவுகளிலும் அறத்துப் பாலில் மட்டுமே விளக்கமளிக்கப்படுகிறது.
ஆனால் கவனமாகப் பார்த்தால்; திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஒரு வசனத்துக்கு விளக்கமளிக்கும்போது அந்த வசனத்தின் முன் பின் உள்ள வசனங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது அறிஞர்களின் நடைமுறையாக இருக்கும்போது, இந்த ஒரு வசனத்தைப்பற்றிய விளக்கத்தில் மட்டும் அது பின்பற்றப்படவில்லை என்பது கவனிப்பவர்களுக்கு விளங்கும்.
முன் பின் வசனம் என்று கூட இல்லை ஒரேவசனத்திற்குள் வரும் இந்த (அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்..) வரிகளை மட்டும் தனியே எடுத்து அறத்துப்பாலில் மட்டுமேவிளக்கமளிக்கப்படுகிறது.
முழுக்க முழுக்க மனைவியுடன் கூடுவதற்கான அனுமதியைப்பற்றி சொல்லக்கூடிய இந்த வசனத்தில் தான் ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்…” என்கின்ற வரிகள் (இடையில்) வருகின்றன.
மனைவியுடன் கூடக்கூடிய அந்த நேரத்தில் ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்…” என்றால் என்ன அர்த்தம்? …
‘உடலுறவின் நிலையை’ இதைவிட சிறப்பான முறையில் நாசூக்காக எவரால் சொல்ல முடியும்?
சொன்னதில்லை; சொல்லவும் முடியாது. ஏன்?
இது ஜோடிகளை (ஆணையும் பெண்ணையும்) படைத்தானே, அந்த ரப்புல் ஆலமீனின் வார்த்தைகளல்லவா?!
அடுத்து பெண்களை இழிவாக சித்தரிக்கின்றது என்று சிலரால் தவறாக விமர்சிக்கப்படும் ஓர் இல்லற இறைவசனம்…
இன்பத்துப் பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் அறத்துப்பால் வசனம்!
‘உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்களாவர். எனவே உங்கள் விளை நிலத்தில் விரும்பியவாறு செல்லுங்கள்!” (அல்குர்ஆன் 2:223)
திருமணத்தின் மூலம் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலக்கும் தாம்பத்திய உறவு குறித்து எழும் எல்லா ஐயங்களையும் விளக்கும் அற்புதமான வசனம் இது.
இன்னின்ன நாட்களில் உடலுறவில் ஈடுபடக் கூடாது. அதனால் இந்த விளைவு ஏற்படும். பகல் நேரத்தில் தாம்பத்தியம் கூடாது. கண் குருடாகும். தம்பதியரில் ஒருவர் மற்றவரின் மறைவிடங்களைப் பார்க்கக் கூடாது. இப்படி பெரியவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறி தாம்பத்திய வாழ்க்கையை அர்த்தமற்றதாக்குகின்றனர்.
சில மாதங்களில் தம்பதியரை வலுக்கட்டாயமாகப் பிரித்து வைத்து ரசிக்கின்ற கொடுமையையும் நாம் கண்டு வருகிறோம். அந்தக் கால கட்டத்தில் ஆண்களில் பலர் தவறான நடத்தையில் ஈடுபட்டாலும் அது பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.
இத்தகையோரின் மூட நம்பிக்கைகளைக் களைவதாகக் கூறிக் கொண்டு எழுதப்படும் நூல்களும் விளக்கங்களும் கேட்பதற்கே காதுகள் கூசும் அளவுக்கு ஆபாசமாக அமைந்துள்ளன.
ஆபாசமாகவும் இல்லாமல் அனைத்து ஐயங்களையும் அகற்றக் கூடிய வகையில் நாகரீகமாக விளக்க முடியாதா? முடியும்! மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனம் மிக அருமையாக இதை விளக்குகின்றது.
ஆண்களாயினும் பெண்களாயினும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை ஆதரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் ஆண்களுடன் சேர்வதும் பெண்கள் பெண்களுடன் சேர்வதும் கூடாது என்பதை எவ்வளவு அற்புதமாக இவ்வசனம் கூறிவிடுகிறது.
பெண்களை விளைநிலங்களாகவும் ஆண்களை அதில் பயிரிடுவோராகவும் நாகரீகமான உவமை கூறியதன் மூலம் கேடு கெட்ட அந்தக் கலாச்சாரத்தை எதிர்க்கிறது.
விளைநிலத்தில் தான் பயிரிட வேண்டும் என்ற கூற்று ஆண்கள் ஆண்களுடன் கூடுவதையும் மறுக்கிறது. மனைவியரின் மலப்பாதையில் கூடுவதையும் மறுக்கிறது. அவ்விடங்களில் கூடுவதால் எதையும் உற்பத்தி செய்ய முடியாது.
தாம்பத்திய வாழ்வில் எந்த முறையைக் கடைப்பிடிப்பது? எந்த முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள்! இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ‘உங்கள் விளைநிலங்களில் நீங்கள் விரும்பியவாறு செல்லலாம்’ என்ற சின்ன வாசகம் இதற்கு விடையளிக்கிறது.