சுமார் 20 வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் படித்து, மனதில் பதிந்து போன விடயம் இது.
கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?
பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் (ரளியல்லாஹு அன்ஹு) என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.
அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் (ரளியல்லாஹு அன்ஹு) எழுந்து நின்று மக்களை நோக்கி,
“எனக்கு ஒரு வியாதி இருக்கிறது. அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?” என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் “இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று சொன்னார்கள்.
அதற்கு உமர் (ரளியல்லாஹு அன்ஹு), “இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை” என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.
அந்த காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.
இஸ்லாமிய கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி எனக்கு கேள்வி பதிலின் மூலம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர் பாக்யராஜ் அவர்கள் தான்.
அடுத்து தமிழகத்தின் புகழ்பெற்ற நாளிதழ் நடத்திய அந்த விவாதத்தின் தலைப்பு: அறிஞர்களின் நூல்களை அரசுடைமை ஆக்குவது போல அரசியல்வாதிகளின் -அவர்களின் நேருங்கிய உறவினர்களின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நாள் எந்தாளோ?
இந்த விவாதத்தில் பங்கு கொண்ட வாசகர் ஒருவர், தேர்தல் மனுதாக்களின் போது என்ன சொத்து காட்டப்படுகிறதோ அதையும், 5 ஆண்டுகள் பதவி முடிந்தபின் என்ன சொத்து உள்ளதோ அதையும் கண்டறிந்து அவற்றை நாட்டுடமை ஆக்கவேண்டும். முடியுமா? அதற்கு நமது ஜனநாயகம் இடம் கொடுக்குமா? இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளலாம். நல்ல கற்பனை என்றார்.
ஆனால் நல்ல கற்பனை என்று சொல்லப்பட்ட விடயம் வரலாற்றில் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றது.
கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலம். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் (அன்று மாநிலம் என்று சொன்னால் இரான், ஈராக்,சிரியா,பாலஸ்தீன் போன்ற நாடுகள் மாநிலமாக இருந்தன) ஆளுநர்களை நியமித்தார்.அவ்வாறு நியமிக்கும் போது ஆளுநர்களின் சொத்து மதிப்புகளை எழுத்து மூலமாகப் பதிவு செய்யும்படி அரசுக் கருவூல அதிகாரிக்கு ஆணையிட்டார். ஆளுநர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் சமயத்தில் தங்கள் சொத்து மதிப்பை மீண்டும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
சில ஆண்டுகள் கழித்து ஆளுநர் ஒருவர் ஓய்வு பெற்ற போது கலீஃபாவைச் சந்தித்து தம் சொத்து விவரங்களை ஒப்படைத்தார். ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் வைத்திருந்த சொத்துகளும் இப்பொழுது அவர் சமர்பித்த சொத்துகளும் ஒப்பு நோக்கப்பட்டன. முன்பை விட இரண்டு ஒட்டகங்கள் அவரிடம் அதிகமாக இருந்தன. உடனே அவற்றை அரசுக் கருவூலகத்தில் சேர்க்கும்படி கலீஃபா உத்தரவிட்டார்.
source: http://valaiyukam.blogspot.in/2012/07/blog-post_30.html