உழைப்பதின் சிறப்பும்! உழைப்போர் குணமும்!
M.S.D. ஸரஹ் அலி, உடன்குடி
இறைவனுக்கு செய்யவேண்டிய வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்காமல், ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உபதேசங்களையும் வழங்கியுள்ளது. நிம்மதியான, சந்தோஷமான வாழ்விற்கு பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை ஹலாலான முறையில் ஈட்டுவதற்கு உழைப்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது.
உழைப்பின் சிறப்பைப் பற்றி குர்ஆன் கூறுகிறது:
“தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (அல்குர்ஆன்: 62:10)
இறைவனை மறக்காதிருத்தல் :
அவர்கள் அல்லாஹ்வை எப்போதும் நினைவு கூறுபவர்களாக மட்டுமின்றி, பொருளாதாரத்தை ஈட்ட வியாபாரத்தையும் செய்து கொண்டு, இறைவனின் கடமைகளையும் ஒரு சேர செய்வார்கள் எனக் கூறுகிறான்.
“வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது, பார்வைகளும் உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்”. (அல்குர்ஆன் : 24:37)
உழைத்ததை செலவிடுதல் :
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதில் இருந்தும் (அல்லாஹ்வின் பாதையில் செல விடுங்கள். கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்கள் அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன், புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2:267)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதுவும் ஏற்றுக் கொள்வதிலலை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரிச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 1410)
இறைத்தூதர்கள் அனைவரும் உழைத்தே உண்டார்கள்:
“அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அப்போது நபித் தோழர்கள், நீங்களுமா?” அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். “”ஆம்! மக்காவாசிகளின் சில கீரத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 2262.
யாசிப்பதை விட உழைப்பதே மேல் :
தம்முடைய தேவைகளுக்காக பிறறிடம் கையேந்துவதை விட உழைத்து உண்பதை சிறப்பித்து காட்டுகிறது இஸ்லாம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். “”பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளைச் சுமந்து விற்கச் செல்வது சிறந்தது ஆகும். அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்ய லாம், மறுக்கவும் செய்யலாம்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு மற்றும் ஸுபைர் பின் அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 2075, 1472)
“ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள். (அறிவிப்பாளர்: மிக்தாம் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 2072)
அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை :
“”உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள், இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (அல்குர்ஆன் :36:21)
கூறுவீராக! “”நான் உங்களிடம் இருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை. அது உங்களுக்கே இருக்கட்டும். என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம் இல்லை” (அல்குர்ஆன்: 34:47)