என்றும் கொடுத்து வாழ்வோம்! உலகை அமைதிப் பூங்காவாக மலரச் செய்வோம்!
மதீனா வீதிகளில் ஈத் எனும் பெருநாள் தொழுகைக்காக செல்லும் நபித்தோழர்களின் முழக்கம். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி… புத்தாடைகள்…. நறுமணங்கள்… எங்கும் உற்சாகப் பெருக்கு… முஹம்மது நபியவர்களும் தம் தோழர்களுடன் மதீனா பள்ளிவாசலை நோக்கி, இறைவனை புகழ்ந்தவாறு சென்று கொண்டிருக்க…. ஒரு சிறுவன் மட்டும் வீதியின் ஓரத்தில் தன் முகத்தை கைகளில் புதைத்தவாறு அழுதுகொண்டிருந்தான்.
நபியவர்கள் நின்றார்கள். மற்றத் தோழர்களை, “நீங்கள் தொடருங்கள். நான் பின்பு உங்களை சந்திக்கிறேன்” என்றார்கள். அழுத பாலகனின் அருகில் வந்து, அவனது முதுகைத் தட்டிக் கொடுத்து, “ஏன் அழுகிறாய் குழந்தாய்?’ என பரிவாகக் கேட்டார்கள்.
“இன்று பெருநாள். எல்லா குழந்தைகளும் தம் தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு பெருநாள் தொழுகைக்காகச் சென்று கொண்டிருக்கிறார்கள். என்னுடைய தந்தை உஹத் போரில் மரணம் அடைந்துவிட்டார். என்னைக் கரம் பிடித்துக்கொண்டு பெருநாள் தொழுகைக்கு அழைத்துப் போக எனக்கு அப்பா இல்லை. நான் மட்டும் தனியாக இங்கு அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறேன்” என்றவாறு மீண்டும் அழ ஆரம்பித்தான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், “நீ இப்படி அழுதால், இந்த முஹம்மதும் பெருநாளைக் கொண்டாட மாட்டார்” என்றவாறு அந்த மழலையின் பிஞ்சு கரங்களைப் பற்றி, “எல்லாக் குழந்தைகளும் அவரவர் தந்தையின் கரங்களைத்தான் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். நீயோ முஹம்மதின் கரங்களைப் பற்றிக்கொண்டிருக்கிறாய். இன்று முதல் உனது தந்தை இந்த முஹம்மதுதான். ஆயிஷா உனது தாயார்” என்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தச் சிறுவனின் கைகளை பிடித்தவாறு பெருநாள் தொழுகைக்குச் சென்றார்கள். அவர், பெருநாள் பேருரை நிகழ்த்தும்போது, அந்தச் சிறுவன் தோளில் புன்னகை பூத்தவாறு அமர்ந்திருந்தான்.
பெருநாள் கொண்டாட்டத்தின் நோக்கமும், அதன் மகிழ்ச்சியும் இருப்பவனுக்கு மட்டுமல்ல; இல்லாதவனுக்கும் சொந்தமாக்க வேண்டும் என்பதே.
ரமலான் முதல் பிறை பார்த்ததும் 29 அல்லது 30 நாட்கள் வரை நோன்பு நோற்கிறார்கள், பசியும் தாகமும் உணர வேண்டும் என்பதற்காக. இந்தப் பயிற்சி நிறைவடையும்போது ஷவ்வால் மாதம் முதல் பிறை தோன்றுகிறது.
அடுத்த நாள் காலை இனிப்புப் பண்டங்கள் செய்து உண்டு மகிழ்ந்து நோன்பை முறிக்க வேண்டும். இந்த நாளில் கட்டாயமாக நோன்பு இருக்கக் கூடாது. ஆகவேதான், இந்த நாளை ஈதுல் ஃபித்ர் – அதாவது நோன்பை முறிக்கும் பெருநாள் என்பர். இறைவன், மனிதன் வாழ்வதற்காக வழங்கிய அருட்கொடைகளை நினைத்து அவற்றிற்கு நன்றி கூறும் நாள் இதுதான். அதாவது என்றும் பசியோடும் தாகத்தோடும் உள்ள ஏழை எளியவர்களுக்கு உண்ணவும் உடுக்கவும் கொடுப்பதன் மூலம் இறைவனுக்கு நன்றி கூறும் நாள்.
கொடுத்து வாழ வேண்டும்
இன்றைய தினம் வசதிபடைத்த ஒவ்வொருவரும் வசதியற்றவர்களின் இல்லங்களில் அடுப்பு எரிய, அவர்களின் வயிறுகளை ஈரமாக்க, உணவுப் பொருட்களை ஃபித்ரா எனும் தானமாக தருவார்கள். தலைக்கு 2500 கிராம் அரிசி அல்லது கோதுமையை தானமாகக் கொடுக்க வேண்டும். அன்று அதிகாலைத் தொழுகையை அடுத்து சூரியன் உதயமான பிறகு தனிப்பட்ட பெருநாள் தொழுகையை தொழ வேண்டியது கட்டாயம். அந்தத் தொழுகைக்கு போகும் முன், இந்த ஃபித்ரா எனும் தானத்தை வழங்க வேண்டும். இப்படி ஈந்து உவப்பதால் இதை ஈகைத் திருநாள் என்பர்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும் ‘படைத்த இறைவனுக்குப் பணிந்து வாழ், அவன் படைத்த சகமனிதனுக்கு ஈந்து வாழ்’ என்பதே. இஸ்லாத்தின் முதல் கடமை ஈமான் எனும் இறை நம்பிக்கை, இரண்டாவது தொழுகை, மூன்றாவது நோன்பு, நான்காவது ஸகாத் எனும் ஏழைகளுக்கான பொருள் உதவி, ஐந்தாவது ஹஜ் எனும் மக்காவில் உள்ள இறை ஆலயத்திற்குப் புனிதப் பயணம். – இவற்றை ஆழ்ந்து நோக்கும்போது அதில் தொக்கி நிற்கும் மனித உணர்வு கொடுத்து வாழ வேண்டும் என்பதே.
ரோஜாவைக் கொடுக்கும் கரங்கள் என்றும் மணக்கும். ஆம், கொடுப்பவன் கைகள் என்றும் மணக்கும். அதை வாங்கும் உள்ளங்கள் என்றும் மலரும். வாழ்த்தும். ஆகவே என்றும் கொடுத்து வாழ்வோம். இந்த உலகை அமைதிப் பூங்காவாக மலரச் செய்வோம். இறைவன் மனிதனிடம் தேடுவதும் இது தானே.